பெண்களை வருத்தும் பிங்க் வரி



இங்கே மத்திய பட்ஜெட்டில் எது எதற்கெல்லாம் வரி போடுவார்கள் என பதைபதைத்தே நம் பிப்ரவரி கழிந்தது. அதே நேரம், உலகம் முழுவதும் பேசப்பட்ட ஹாட் டாபிக், ‘பிங்க் வரி’. ஓட்டுரிமையில் துவங்கி லெக்கிங்ஸ் வரை பெண்ணுரிமைப் போராட்டங்கள் பல கட்டங்களைத் தாண்டியிருக்கின்றன. இந்தப் பெண்கள் தினத்தில் தீப்பிடித்திருக்கும் சப்ஜெக்ட்தான் இந்த Pink Tax! அதென்ன பிங்க் வரி? இது அரசாங்கம் விதிக்கும் வரி அல்ல. ஆனால் பெண்ணாய்ப் பிறந்ததற்காகவே ஒவ்வொருவரும் கொடுத்தாக வேண்டிய தொகை. அதாவது, ஒரு ஆண் முடி வெட்டிக்கொள்ள அரச மரத்தடியிலிருந்து ஹைஃபை பியூட்டி பார்லர் வரை ஆப்ஷன்கள் நிறைய உண்டு. சராசரியாக 100 ரூபாயில் ஒரு ஆண் முடி வெட்டிக்கொள்ள முடியும். ஆனால் பெண்கள் ஹேர் கட் செய்ய பார்லருக்குத்தான் போக வேண்டும். குறைந்தபட்சக் கட்டணமே 300 ரூபாய் ஆகும். சில ஆயிரங்களில் கட்டணம் வசூலிக்கும் சலூன்களும் உண்டு. ஆக, ஆண்களைவிட பெண்களிடம் இந்தச் சமூகம் 200 ரூபாய் அதிகம் கொள்ளையடிக்கிறதே... அதுதான் பிங்க் வரி. பிங்க் என்பது பெண்களுக்கான நிறம் என்பதால் இந்தப் பெயர்!



இப்படி முடிவெட்டுவதில் மட்டுமல்ல... உணவுப் பொருட்களில், ஊட்டச்சத்து பானங்களில், சில மருந்துகளில், மேக்கப் அயிட்டங்களில் என அனைத்திலும் பெண்களுக்கென உருவாக்கப்படும் பிரத்யேகப் பொருட்களின் விலை அதிகம். சமீபத்தில் இதுபற்றி ஆய்வு செய்த நியூயார்க் டிபார்ட்மென்ட் ஆஃப் கன்ஸ்யூமர் அஃபயர்ஸ், ‘ஆண்களுக்கான பொருட்களை விட பெண்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் 42 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ளன’ என அறிவித்துள்ளது. ஒரு பேனாவில் கூட பிங்க் நிறத்தில் பூப்போட்ட பேனாக்கள் பெண்களுக்கானதாக விளம்பரப்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதையெல்லாம் பார்த்துக் கொதித்துப் போயிருக்கிறார்கள் பெண்ணியவாதிகள்.

இதையெல்லாம் ‘கார்ப்பரேட் சதி’ என சொல்லி முஷ்டி உயர்த்தலாம். ஆனால் மற்ற மட்டங்களிலும் நிலை இதேதான். நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது. வழியில் டூ வீலர் நின்றுவிட்டதாக பதற்றத்துடன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் மெக்கானிக்குகள் பலருக்கும் போன் செய்யச் சொன்னார்கள். ஒரே வண்டி... அதில் ஒரே மாதிரி பிரச்னை... நேரில் வந்து அதை சரி செய்து கொடுக்க எவ்வளவு சார்ஜ் என ஆணும் பெண்ணும் தனித்தனியே கேட்டார்கள். மெக்கானிக்குகள் ஆணுக்குச் சொன்ன ரேட்டை விட பெண்ணுக்கு 10 சதவீதம் வரை அதிக தொகை சொல்லியிருக்கிறார்கள். ‘பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்களை விடக் குறைவு. ஆனால், கொள்ளையடிப்பது மட்டும் அதிகமா?’ என ஃபோரம்களில் காரம் ஏற்றியிருக்கிறது இந்த விஷயம். ‘‘நம்ம ஊரில் பெண்கள் இதையெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கிறோம். ஆனால், ‘பிங்க் வரி’ எனப் பெயர் வைத்துப் போராடியதில்லை. அப்படி ஒரு விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது!’’ என்கிறார் பெண்ணியவாதியும் ஆவணப்பட இயக்குநருமான கீதா இளங்கோவன்.

‘‘ஒரு டி-ஷர்ட் வாங்கப் போனால் கூட ஆண்களுக்கு 150, 200 ரூபாய்க்கெல்லாம் நல்ல டி-ஷர்ட்டே கிடைக்கிறது. ஆனால் பெண்களுக்கு மினிமம் 400 ரூபாய். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படி எல்லா உடைகளிலும் பொருட்களிலும் பேதம், விலை வித்தியாசம் இருக்கிறது. கொஞ்சம் அடர்த்தியான நிறம் என்றால் அது ஆண்களுக்கானது, லைட் கலர்கள் எல்லாம் பெண்களுக்கானவை எனப் பிரிக்கிறார்கள். அதன் விலையையும் உயர்த்தி விடுகிறார்கள். பெண்கள் என்றால் நளினமானவர்கள், மென்மையானவர்கள், பூக்களைத்தான் அவர்கள் விரும்ப வேண்டும் என்ற பொதுப்புத்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் இவர்கள். முகப்பரு ஆண்களுக்கும் வரும்; பெண்களுக்கும் வரும்... காலில் பித்த வெடிப்பு ஆண்களுக்கும் வரும்; பெண்களுக்கும் வரும். ஆனால் இவற்றுக்கான கிரீம் விளம்பரங்களில் ஆண்கள் வந்து பார்த்திருக்கிறீர்களா? ‘ஆணுடைய பாதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... ஆனால், பெண்ணுடைய பாதம் வெடிப்புகள் இன்றி பளபளவென இருக்க வேண்டும்... அப்போதுதான் அவள் பெண்’ என இந்த விளம்பரங்கள் சட்டம் போடுகின்றன. எனவே பொதுப் பொருட்களாக இருக்க வேண்டிய இவையெல்லாம் பெண்களுக்கான பொருட்களாகிவிட்டன. விலையும் உயர்த்தி வைக்கப்படுகின்றன.

சிறு வயதிலிருந்தே ஒரு பெண் அழகாக இருக்க வேண்டும், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள். அந்த வளர்ப்பும் பழக்கமுமே பெண்களை அழகுக்காக அதிகம் செலவு செய்ய வைக்கிறது. பெண்கள் முடிவெட்டிக் கொள்ள அதிக தொகை தர வேண்டியிருக்கிறது என்று சொல்லும்போதே அப்படி அதிக தொகை வாங்கும் பியூட்டி பார்லர்களையும் பெண்கள்தான் நடத்துகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பியூட்டிஷியன் ஆனால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டே அதில் கால் பதிக்கிறார்கள் பலர். யாரேனும் இதில் இருந்து விடுபட்டு, ஆண்களுக்கான சலூன் போல குறைந்த விலையில் பார்லர் நடத்த முன்வர வேண்டும். அப்படி முன்வந்தால் இந்த நிலை கொஞ்சம் மாறலாம்!’’ என்கிறார் அவர். சென்னையில் நுகர்வோர் தொடர்பான பிரச்னைகள் பலவற்றைக் கையில் எடுத்துப் போராடும் கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா, இந்த பிங்க் வரி பற்றி என்ன நினைக்கிறது?

‘‘நாங்க இதுவரைக்கும் நுகர்வோர் பிரச்னையை இப்படி ஆண், பெண் எனப் பிரிச்சுப் பார்த்ததில்லை. ஆனா, பெண்களுக்கான பிரத்யேகப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுறதை உணர்ந்திருக்கோம். அதன் தரம் குறைவா இருக்கறதைப் பற்றி ஆய்வு செய்திருக்கோம். பொதுவா பெண்கள் விலை அதிகமா இருந்தா அது நல்ல பொருள்னு நினைக்கிறாங்க. அதைத்தான் இப்படிப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கிறாங்களோனு தோணுது. பெண்கள்னா அவங்களுக்கு டெக்னிக்கல் விஷயங்கள் அதிகம் தெரியாதுங்கற நினைப்பும் இன்னொரு காரணம். அழகா தெரியிற விஷயம் நம்ம உடம்புக்கு ஆரோக்கியமானதான்னும் பெண்கள் யோசிக்கணும். அதில் என்ன இருக்குனு ஆராய்ந்து பார்க்கணும். ஆண் பெண் பேதம் இல்லாம நுகர்வோருக்கான விழிப்புணர்வு எல்லாருக்கும் வரும்போது, இந்தப் பிரச்னைக்கும் நிச்சயம் தீர்வு கிடைச்சிடும்னு நம்புறேன்’’ என்கிறார், இந்த அமைப்பின் தொடர்பு அதிகாரியான சோமசுந்தரம். அதுவரை பெண்கள் பிங்க் டாக்ஸை அழுதுதான் ஆகவேண்டும் போல!

ஆண்களுக்கான பொருட்களை விட பெண்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் 42 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ளன!’

- கோகுலவாச நவநீதன்