நினைவோ ஒரு பறவை
அஞ்சு ரூபா டாக்டர்
நா.முத்துக்குமார் ஓவியங்கள்: மனோகர்
அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்து விடுகிறது! - ஜென் தத்துவம்
வேலையில்லாதவர்களின் பகலும், நோயாளிகளின் இரவும் நீளமானவை. இருவரின் கடிகாரத்திலும் இடம் வலமாக ஆடும் பெண்டுலத்தில் ஒரு பக்கம் விரக்தியும், இன்னொரு பக்கம் வலியும், காலத்தை நகர விடாமல் தடுக்கின்றன. வாழ்வின் கரங்களை இறுகப் பற்றிக்கொள்ள நோயே கற்றுத் தருகிறது. சிறு வயதில் எங்களுக்குக் காய்ச்சல் வரும்போதெல்லாம் அஞ்சு ரூபா டாக்டரிடம் செல்வோம். ‘அஞ்சு ரூபா’ டாக்டரின் ஆஸ்பத்திரி, காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒன்று. அதன் திருத்தல வரலாற்றை இப்படி விவரிக்கலாம்... இடது பக்கம் கோலிகளுடன் சோடா பாட்டில்களை, மரச்சட்டங்களில் வரிசையாக கலர் ஊற்றி கேஸ் மெஷினில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். வலது பக்கம் ஒரு பட்டு ஜவுளிக்கடை. முன்பக்க கண்ணாடிச் சட்டத்தில் பட்டுச்சேலை கட்டிய பெண் பொம்மை. அதற்கெதிரில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டிருப்பார். அந்த பன்னீர் சோடாவுக்கும், பட்டுச் சேலைக்கும் நடுவில் டாக்டர் குடியிருந்தார். தல விருட்சமாக ஒரு காலத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது. வீதியை அகலப்படுத்துவதற்காக அதை வெட்டி விட்டார்கள்.
‘அஞ்சு ரூபா’ ஆஸ்பத்திரியின் வாசலில், ‘டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் எம்.பி. பி.எஸ்., பொது மருத்துவர்’ என்றெழுதிய பழங்காலத்து துருப் பிடித்த பெயர்ப் பலகை, எப்போது வேண்டுமானாலும் கீழே விழுவதற்குத் தயாராகத் தொங்கிக் கொண்டிருக்கும். முன் அறையில் இரண்டு பக்கமும் மர பெஞ்சுகளில் நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். பிளைவுட் தடுப்புக்கு அந்தப் பக்கம் ‘அஞ்சு ரூபா’ டாக்டர், ஒவ்வொருவராக உள்ளே அழைத்து சோதிப்பார். உடம்பு முழுக்க ரத்த நிறத்தில் ஓடும் நரம்புகளுடன் ஒரு ஆண் படமும், ஒரு பெண் படமும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். கழுத்தில் ஸ்டெதாஸ்ேகாப் மாட்டியிருக்கும் ஒரு ஆரோக்கியமான குழந்தையின் படம் பக்கத்தில் இருக்கும். ‘அஞ்சு ரூபா’ டாக்டரைப் பார்க்க வேண்டுமென்றால், முன்னமே சென்று, சிகரெட் அட்டையில் எண் எழுதப்பட்டிருக்கும் டோக்கன் வாங்கிக் காத்திருக்க வேண்டும்.
முகம் முழுக்க அம்மைத் தழும்புகளுடன் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க கம்பவுண்டர் ஒருவர், ஒவ்வொருவராக உள்ளே அனுப்புவார். காத்திருந்து உள்ளே நுழைந்தால், ‘அஞ்சு ரூபா’ டாக்டர், திருத்தமாக சவரம் செய்த முகத்துடனும், கழுத்துக்குக் கீழே சாயம் போன டையுடனும் புன்னகைப்பார். ‘ஆ’ காட்டச் சொல்லி தெர்மா மீட்டரை வாயில் வைக்கும்போது நாக்குக்குக் கீழே ஒரு குளிர்ச்சியும், அடிவயிற்றில் ஒரு வெப்பமும் பரவும். ‘‘ஊசி வேணாம்! ஊசி வேணாம்!’’ என்று அழுதபடி அவரெதிரில் ஏராளம் தடவைகள் அமர்ந்திருக்கிறேன். ‘‘சரி! வேணாம்... என்ன கிளாஸ் படிக்கிறே? என்ன சாப்பிட்டே?’’ என்று முழங்கையைத் தடவி விசாரித்துக்கொண்டே, நான் ஏமாந்த தருணத்தில் ஊசி குத்தி விடுவார். வலி உணர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது, ‘‘ஒண்ணுமில்லை’’ என மேஜை டிராயரிலிருந்து புளிப்பு ஆரஞ்சு மிட்டாய் எடுத்துக் கொடுப்பார். வைராக்கியத்துடன் வாங்க மறுத்து வேகமாக அழுதாலும், கைகள் தன்னிச்சையாக அந்த மிட்டாயை நோக்கிச் செல்லும். பின் உள்ளே சென்று ஒரு கண்ணாடி பாட்டிலில் ரோஸ் கலர் திரவத்தை ஊற்றி எடுத்து வந்து, ‘‘ஒரு நாளைக்கு மூணு தடவை குடிக்கணும்’’ என்று கொடுப்பார். எனக்குத் தெரிந்து ‘அஞ்சு ரூபா’ டாக்டரைப் போன்ற பொதுவுடைமைவாதிகள் யாரும் இல்லை. எல்லா வியாதிக்கும் அதே ரோஸ் கலர் திரவம்தான். ஃபீஸ் பணத்தை கையில் தொட மாட்டார். அவர் எதிரில் வைத்திருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும். கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடனும், எதிரில் உண்டியலுடனும் அவரைப் பார்க்கும்போது பிள்ளையாரைப் போலவே இருக்கும். நாங்கள் அவரைப் ‘பிள்ளையார் டாக்டர்’ என்போம்.
ஒரு முறை வீட்டுக்கூரை மேலிருந்து கீழே விழுந்த வௌவால், என் இரண்டாவது தம்பியைக் கடித்து விட்டது. கடித்த வௌவாலை அடித்து பொட்டலமாய் மடித்து எடுத்துக்கொண்டு, ‘அஞ்சு ரூபா’ டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். தம்பியையும், வௌவாலையும் மாறி மாறி சில நிமிடங்கள் பார்த்தவர், புத்தக ஷெல்ஃபிலிருந்து ஒட்டடை படிந்த ஒரு தலையணைப் புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கி விட்டார். பின்பு தொலைபேசியில் யாரையோ அழைத்து, ‘‘ஆமாமா... ேபட்டுதான். கிரிக்கெட் பேட்டு இல்ல... வௌவாலு... சரி!’’ என்றவர், உள்ளே சென்று பாட்டில் நிறைய திரவத்துடன் வந்தார். இந்த முறை திரவத்தின் நிறம் ரோஸ் இல்லை; கறுப்பு. கிளம்பும்போது ஏழு ரூபாய் வாங்கிக் கொண்டார். அவரது சம்பளத்தில் இரண்டு ரூபாய் ஏறக் காரணமாயிருந்த வௌவாலை அங்கேயே விட்டு விட்டுக் கிளம்பினோம். பின் வந்த நாட்களில் அவர் ‘பிள்ளையார் டாக்டர்’ என்ற பட்டம் மறைந்து ‘வௌவால் டாக்டர்’ ஆனார்.
நவீன மருத்துவக் கருவிகள் வருவதற்கு முன்னமே ஒரு நள்ளிரவில், பெரும்பாலான டாக்டர்களைப் போலவே ‘அஞ்சு ரூபா’ டாக்டர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து, காலச்சுழற்சியில் காணாமல் போனார். இந்த ‘அஞ்சு ரூபா’ ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் ஒரு தனியார் வங்கி தன் ஏ.டி.எம் கிளையைத் திறந்திருக்கிறது. உள்ளே சென்று அட்டையைச் செருகி சங்கேத எண்ணைத் தட்டினால் பணத்தைத் துப்புகிறது இயந்திரம். ஏ.டி.எம் காவலாளி விஸ்தாரமாக வளர்ந்துவிட்ட பக்கத்து கூல்டிரிங்ஸ் கடையில் ரோஸ் மில்க் குடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்தல விருட்சமாக அவ்விடத்தில் சோடியம் விளக்குக் கம்பம் நின்று கொண்டிருக்கிறது.
கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடனும், எதிரில் உண்டியலுடனும் அவரைப் பார்க்கும்போது பிள்ளையாரைப் போலவே இருக்கும். நாங்கள் அவரைப் ‘பிள்ளையார் டாக்டர்’ என்போம்.
சரி! வேணாம்... என்ன கிளாஸ் படிக்கிறே? என்ன சாப்பிட்டே?’’ என்று முழங்கையைத் தடவி விசாரித்துக்கொண்டே, நான் ஏமாந்த தருணத்தில் ஊசி குத்தி விடுவார்.
(பறக்கலாம்...)
|