குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்


பேப்பர்ல ஒட்டுனாங்க; பைல ஒட்டுனாங்க; இலவசப் பொருட்கள்ல ஒட்டுனாங்க; நிவாரணப் பொருட்கள்ல ஒட்டுனாங்க. ஏன், இலவசக் கல்யாணம் பண்ண வர்ற திருமண ஜோடிகளின் நெத்தில கூட அந்த ‘ஸ்டிக்கரை’ ஒட்டுனாங்க. இப்ப அது எல்லாத்தையும் தாண்டி, ‘ஸ்டிக்கர்னா கூட கிழிஞ்சிடும்’னு உடம்புல பச்சையாவே குத்திட்டாங்க.



இந்த ஸ்டிக்கர்களையும் பச்சை குத்திக்கிறதையும் எந்த அமைச்சர் பெருமக்களோ, அதிகார வர்க்கமோ செஞ்சுக்கல. பரிசோதனை எலியா பல சோதனைகளைக் கண்டதெல்லாம் அன்றாடங்காய்ச்சிகள் என்பதுதான் உண்மை. தொடர் சுவரொட்டி, ஸ்டிக்கர், பச்சைன்னு போயாச்சு... இனி வேற என்ன செய்யலாம்? எப்படியும் வேற எதுவும் செய்யத் தெரியாது... சரி, நாமளே சொல்லிக் கொடுப்போம்! 3500 சொச்ச கிலோ மீட்டர் நீளத்துக்கு சீனப் பெருஞ்சுவர் சும்மாதானே இருக்கு, அங்க போயி அந்த சுவர் முழுக்க தஞ்சாவூர் கல்வெட்டாட்டம் தலைவி திருவுருவங்களை செதுக்கி வைக்கலாம், அது முழுக்க ஸ்டிக்கர் ஒட்டலாம். அங்கேயும் ‘இதய தெய்வம், குலதெய்வம், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர்’னு எழுத ஆரம்பிச்சா அப்புறம் சுவரு நீளம் பத்தாதுங்கிறது வேற கதை. அங்கிருந்து பிரான்ஸ் போனா இருக்கவே இருக்கு ஈஃபிள் டவர். அந்த டவர் உயரத்துக்கு ஒரு கட்அவுட் செஞ்சு அதுல கட்டி வைக்கலாம். ரோம் நகர கொலோசியத்தில் ஒரு முனையையும், இங்க இந்தியாவுல இருக்கிற குதுப்மினார்ல ஒரு முனையையும் கட்டி பிரமாண்ட நீளத்துக்கு பேனர் வைக்கலாம்.

வழக்கமா வாகனங்கள் செல்லமுடியாம இடையூறா இருக்கிற மாதிரி தானே ஃப்ளெக்ஸ் பேனர் வைப்போம், இந்த தடவை விமானங்கள் செல்லவே முடியாத மாதிரி பேனர் வச்சு மிரட்டுவோம். இதுநாள்வரை சாதா மண்சோறுதானே மக்களை சாப்பிட வச்சோம்; அதையே பெருசா சிந்திச்சு, சஹாரா பாலைவனத்தில் இருந்து மண் எடுத்துட்டு வந்து சஹாரா மண்சோறு சாப்பிட வைக்கலாம். பால் குடம், பன்னீர் குடமெல்லாம் பழைய டெக்னிக் ஆகிட்டதால், நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நீரோ, பசிபிக் பெருங்கடலில் இருந்து தண்ணீரோ எடுத்துட்டு வந்து பசிபிக் நீர் காவடி எடுக்கலாம். பல ஆயிர வருஷமா ஒரே கலர்ல கிடக்குற பிரமிடுகளை, உள்ள ‘மம்மி’ இருக்குனு காரணம் சொல்லி, மொத்தத்துக்கும் பச்சை பெயின்ட் அடிக்கலாம். இதையெல்லாம் விட பெரிசா சூரியன் மீதும் நிலா மீதும் ரெண்டு ஸ்டிக்கர் ஒட்டிட்டா உலகமே பார்த்துக்கிட்டு இருக்கும்ல, அதனால அதுக்கான சிறப்பு ஸ்டிக்கர்களை தயாரிக்க நால்வர் தலைமையில் நிபுணர் குழு அமைச்சுடலாம்!             

இந்த ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கொடுத்தாங்க... போன வாரம் வரை ‘‘மச்சி, டீ சாப்பிடுறியா’’னு கேட்டவனெல்லாம்  இப்ப ‘‘டிகாப்ரியோ’’னு பேசிக்கிட்டு இருக்கான். அந்த ‘டைட்டானிக்’ ஹீரோ டிகாப்ரியோவுக்கு இருபது வருஷமா ஆஸ்கர் விருது கிடைக்கலையாம்; இந்த தடவைதான் கிடைச்சிருக்காம். அதைப் பெரிய விஷயம்னு பேசிக்கிட்டு இருக்கானுங்க. ‘‘நாட்டுல சாப்பிடுறதுக்கு சோறு இருக்கா, நீயெல்லாம் கிரிக்கெட் ஸ்கோரு கேட்கிறே?’’னு கவுண்டமணி சொல்ற டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. ஏன்டா, நாட்டுல முக்கால்வாசி பேருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கல; இன்னமும் பல கிராமங்களுக்கு கரன்ட் கிடைக்கல; மாநகரங்களில் மூச்சு விட பொல்யூஷன் இல்லாத காத்து கிடைக்கல; இந்தியா முழுக்க பல குழந்தைங்களுக்கு நல்ல ஆரம்பக் கல்வியே கிடைக்கல; டிகிரி முதல் டாக்டர் வரை படிச்ச பல பேருக்கு சரியான வேலை கிடைக்கல; கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்கல; கல்யாணமாகாததுனால பல பேச்சுலர்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்கல; கலப்படமில்லாம குடிக்க பால் கிடைக்கல.

இதையெல்லாம் மறக்க சரக்கடிக்க போனா, நைட்டு பத்து மணிக்கு மேல சரக்கே கிடைக்கல. அட, கட்சிக்காரங்களே கைய வச்சிடறதால, நமக்கு வர வேண்டிய ஓட்டுப் பணம் கூட கிடைக்கல, இதுல அந்த டிகாப்ரியோ பயலுக்கு ஆஸ்கார் கிடைச்சா என்ன? கிடைக்கலன்னா என்ன?

அஞ்சு வருஷமா ஒரு நலத் திட்டத்தையும் காணாம். இப்ப அஞ்சாவது வருஷத்துல - அதுவும் முடியப் போற சமயத்துல வந்து அவசர அவசரமா திட்டங்களை போடுறீங்களேனு ஆளுங்கட்சிய கேட்கலாம், ஆனா வழக்கம் போல ‘‘அஞ்சாவது வருஷம் வரட்டும்னு காத்திருந்தோம்’’னு சொல்வாங்க. இப்படி தேர்தலை முன்னிட்டு எல்லா திட்டத்தையும் அஞ்சாவது வருஷம் அறிவிக்கிறாங்களே... அப்ப இந்த அஞ்சு வருஷ ஆட்சில அந்த அஞ்சாவது வருஷ ஆட்சிய மட்டும் அப்படியே எடுத்து, அதையே முதல் வருஷ ஆட்சியா நடத்திடக் கூடாதா? இதைக் கேட்டா நம்மளை லூசுப் பயனு சொல்வாங்க!

கத்தியால கொலை பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம்; துப்பாக்கியால கொலை பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம்; விஷ வாயு செலுத்தி கொல்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம்; விஷ ஊசி போட்டு கொல்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். தூக்குல போட்டு, தலையை கொய்து இந்தத் தீவிரவாதிங்க கொல்வாங்கன்னு கூட கேள்விப்பட்டிருக்கோம். கைல கிடைக்கிற கம்பி, கம்பு, கொடுவாள், அரிவாள் போன்ற பொருட்களால கூட கொலை பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். எதுவுமே கிடைக்கலன்னா கையால கழுத்தை நெரிச்சுக் கொல்வாங்கன்னு கூட கேள்விப்பட்டிருக்கோம். ஆனா முதல்முறையா ஒரு விளம்பரத்தப் போட்டு கொல்றாங்கன்னா அது நம்ம ‘கல்யாணியக்கா நகைக் கடை’ விளம்பரம்தான். ‘கல்யாணியக்கா கடையில நான் அம்மாவா மாறினேன், அம்மா மகளா மாறினா...’ அப்படியே உங்கப்பா கடன்காரனா மாறி இருப்பாரே? நகைக் கடை விளம்பரத்த போடுங்கய்யான்னா நாடகத்தப் போட்டுக்கிட்டு இருக்கீங்க!