தாய்மையின் தவிப்பு



பிரசவித்த அயர்ச்சியில் நான்
மயங்கிக் கிடக்கிறேன்,
பிறந்துவிட்ட அலுப்பில்
உலகின் முதல் இரவை
கட்டிடம் அதிர அழுதபடி
எதிர்கொள்கிறது
என் குழந்தை.
தன்னிலை நழுவும் அலுப்பிலும்
என்னை எழுப்ப மனசின்றி,
குழந்தையின் பசிக்கும்
வயிற்றுப்போக்கிற்கும் இடையில்
அதன் அலறும் குரலில்
நொறுங்கி உதிர்கிறாள்
எனது அம்மா...
பிரசவித்தவளுக்கும்
பிறந்தவளுக்கும் இடையில்
அலைவுறும் அவளுக்கு
நாங்கள் நேற்று நேர்ந்துகொண்ட
சாமியெல்லாம்
நேர்த்திக்கடன் செய்யக்கூடும்.
அவள் உயிருள் நிகழ்கிறது
பனிக்குடத்துப் பிசைவு
ஒவ்வொரு நொடியிலும்!



தன்னைத் தானே
சுற்றாத பூமியில்
நான்
இருளாய் அவதரிக்கிறேன்.
ஏற்ற மறந்த தீபமான
சூரியனிடம்
நான் பேசுவதற்கு
என்ன இருக்கிறது?
தன்னைத்தானே சுற்றாத
பூமியிலிருந்து
கடல் கொட்டிப்போகிறது
என் கண்ணீர்த் துளிக்குள்

கலை இலக்கியா