முடிவு



தயக்கமாக வீட்டுக்குள் நுழைந்தான் அவன். ‘‘சார், நான் இந்த தெருக் கோடியில இருக்குற ஆட்டோ டிரைவர். உங்க பொண்ணு ஒரு பையனோட சுத்தறாங்க... சந்தேகமா இருக்கு... சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்!’’ என்றான். தொழிலதிபர் கார்மேகம் முகம் கறுத்தது. பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். அடுத்த நாள், ‘‘சார்! இன்னைக்கு அந்தப் பையனும் உங்க பெண்ணும் வர்ற சனிக்கிழமை மகாபலிபுரம் போறதா பேசிக்கிட்டாங்க. ஜாக்கிரதை சார்!’’ - ஆட்டோ டிரைவர் சொல்லிவிட்டுப் போனான். கார்மேகம் ரத்தம் கொதித்தது.
இப்படி தினம் தினம் ஒரு புதுத் தகவலோடு வருவான்.



அடுத்த வாரம் வந்தவன், ‘‘சார்! நானும் ஒரு வாரமா உங்ககிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க பேசாம இருந்தா எப்படி? உங்க பொண்ணு வாழ்க்கையைப் பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா?’’ என கோபமாகக் கேட்டான். ‘‘இருக்கு... இன்னியோட இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்!’’ - விறுவிறு என்று வீட்டுக்குள் போனவர், மொபைலை எடுத்து வந்தார். ‘‘ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா..? தொழிலதிபர் கார்மேகம் பேசறேன். என் தெருவுல ஒரு ஆட்டோ டிரைவர் என் பொண்ணைக் கண்காணிக்கறான். அவ பேசுறதைக்கூட ஒட்டுக் ேகக்கறான். அவளைப் பத்தி தப்பா வெளியே பேசறான். கொஞ்சம் கூப்பிட்டு கண்டிச்சு வைங்க..!’’ - முடித்தார் கார்மேகம்.    

-வி.சிவாஜி