28 - கிரகங்கள் தரும் யோகங்கள்
மிதுன லக்னத்துக்கு புதனும் சுக்கிரனும் தரும் யோகங்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
மிதுன லக்னத்தின் அதிபதியும், சுகாதிபதியுமான புதன் கிரகம், சுக்கிரனோடு சேர்க்கை பெறுவது என்பது மிகவும் சிறப்பானதாகும். அழகு, கலை மற்றும் காவிய கிரகமாகத் திகழ்கிறது சுக்கிரன். இதுவே பூர்வ புண்ணிய கிரகமாகவும், விரயாதிபதியாகவும் இருக்கிறது. புதன் புத்தி கிரகமாகும்; சுக்கிரன் புத்தியினால் சேகரிக்கப்பட்ட விஷயங்களை அழகுற உரைப்பவனாவான். இதனால் மிகவும் நுண்ணறிவு படைத்தவர்களாக இந்த அமைப்பில் பிறந்தவர்கள் இருப்பார்கள். ‘கதலி (வாழை) புத்தி, கற்பூர புத்தி, கரி புத்தி’ என்று சொல்வார்கள். இதில் இவர்கள் கற்பூர புத்தியுடையவர்களாக விளங்குவார்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் எல்லா பாடத்திலும் நிறைய மதிப்பெண்கள் எடுக்க மாட்டார்கள். ஆனால் ஏதாவது சிலவற்றில் ஈடு இணையற்ற புலமையோடு விளங்குவார்கள்.
பாடத் திட்டத்தைத் தாண்டி யோசிப்பார்கள். அதேபோல கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பொதுவாகவே இவர்களுக்கு கலைத்துறையில் ஈடுபாடு இருக்கும். எதையுமே அலசி ஆராயும் குணம் இருக்கும். எந்தத் துறையில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ, அதில் கரை கண்டு விட்டுத்தான் வருவார்கள். நினைத்ததை அடையக் கூடிய பலம் இருக்கும். இவர்களுக்கு, இவர்களைவிட அறிவும் ஆற்றலும்மிக்க வாரிசுகள் பிறப்பார்கள். தாயாரின் பங்களிப்பு இவர்களின் வாழ்வில் அதிகமாக இருக்கும். சுபச் செலவுகளை செய்தபடி இருப்பார்கள். திடீர் திடீரென்று அன்பளிப்புகளைக் கொடுத்து எல்லோரையும் திக்குமுக்காடச் செய்வார்கள். மற்றவர்களின் மனதை நோகடிக்காமல் அரவணைத்துப் பேசுவார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வோடு இருப்பார்கள். இந்த இரண்டு கிரகங்களின் ரசாயனக் கலவை ஒரு சாத்வீகத்தை உண்டு பண்ணும்.
இனி இந்த சேர்க்கை எந்தெந்த இடங்களில் அமைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்... மிதுன லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே புதனும், பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அழகும் அறிவும் கொண்டு விளங்குவார்கள். எப்போதும் ஒரு புன்சிரிப்பு உதட்டில் தவழ்ந்தபடி இருக்கும். தாங்கள் வசிக்குமிடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். மறந்து போய்க்கூட அழுக்கான ஆடைகளை அணிய மாட்டார்கள். சொந்த ஊரின் மீது பிரியமாக இருந்தாலும் வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ சிறிது காலம் இருந்துவிட்டு வருவார்கள். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு வளர்வார்கள். வாழ்வின் அனுபவங்களை ஒவ்வொன்றாகக் குறித்து வைத்து சுயசரிதை எழுத விரும்புவார்கள். யாரும் இவர்களை பலவந்தப்படுத்தி படிக்க வைக்க முடியாது. தாங்களாகவே தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு படிப்பார்கள்.
கடக ராசியில் - அதாவது லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால், படிப்பைவிட பள்ளியில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பரிசுகளையும் தட்டி வருவார்கள். வார்த்தைகளில் தேனைக் குழைத்துப் பேசுவார்கள். பேசியே எல்லாரையும் மயக்கும் திறமையும் இருக்கும். சாப்பாட்டுத் தட்டைக்கூட பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். பேச்சில் இலக்கிய அறிவு வெளிப்பட்டபடி இருக்கும். ‘ரௌத்திரம் பழகு’ என்பதைப் போல பேச்சில் கோபமும் வெளிப்பட்டபடி இருக்கும். பள்ளி ஆசிரியர்களை நினைவில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சந்தித்து விட்டு வருவார்கள். நவீன கல்வியோடு சாஸ்திரக் கல்வியையும் பயின்று வருவார்கள். ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பதைப் போல யாருக்கு என்ன தேவையென்று கருதி அவ்வப்போது உதவுவார்கள். சிம்ம ராசியான மூன்றாவது இடத்தில் புதனும் சுக்கிரனும் மறைவது கொஞ்சம் நல்லதே ஆகும். இளைய சகோதர, சகோதரிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எந்த காரியமாக இருந்தாலும் துணிந்து இறங்குவார்கள். முதலிலேயே இதெல்லாம் செய்ய வேண்டுமென்று திட்டமில்லாமல் இறங்க மாட்டார்கள். மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானம் என்பதால், இதெல்லாம் நடக்கக் கூடும் என்கிற அனுமானம் எப்படியும் இவர்களிடம் இருக்கும். எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டிருப்பார்கள். தானே சமைத்து மிகவும் ருசியாக உணவு உண்ணுவார்கள். போகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள். நண்பர்கள் சூழத்தான் எப்போதும் இருப்பார்கள்.
கன்னி ராசியான நான்காம் இடத்தில் புதன் ஆட்சி பெறுகிறது. ஆனால், சுக்கிரன் இங்கு நீசமடைகிறது. தாயாருக்கு ஏதேனும் உடல்நிலை படுத்தியபடி இருக்கும். விவசாயத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். சிலர் மாடித்தோட்டம் அமைத்துஅழகு பார்ப்பார்கள். இன்றைய தேதியில் நவீனமாக என்ன வாகனம் வந்திருக்கிறதோ, அதையே வாங்குவார்கள். மிகுந்த வாகனப் பிரியராக இருப்பார்கள். தாயாரின் சொந்தங்களோடு மிகுந்த நெருக்கம் பாராட்டுவார்கள். தனிப்பட்ட விதத்தில் ஏதேனும் வித்தையைக் கற்றுக் கொள்வார்கள். புத்தகம் எழுதி பதிப்புத் துறையில் ஈடுபடுவார்கள். துலாம் ராசியான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதியான புதனுடன் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரன் இணைந்து அமர்கிறார். விவேகத்தோடும் வித்தையோடுமுள்ள வாரிசுகள் இருப்பார்கள். வாரிசுகளால் இவர்கள் பெருமையடைவார்கள். மந்திர உபதேசம் பெற்று தொடர்ந்து ஜெபித்து வருவார்கள். யோகா, தியானம் செய்து உடலையும் மனதையும் வலுவாக வைத்துக்கொள்வார்கள். மூதாதையர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுவார்கள். நிறைய கோயில்களுக்குச் சென்று கல்வெட்டுக் குறிப்புகளை சேகரித்து புத்தகமாக்குவார்கள். வரலாறுகளில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். யாத்திரையாகச் செல்வோருக்கு அன்னதானம் செய்து மகிழ்வார்கள்.
விருச்சிக ராசியான ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் சேர்ந்து அமர்ந்தால் பார்வையில் கோளாறு ஏற்படும். சிலருக்கு குழந்தைப் பிறப்பே கொஞ்சம் தாமதப்பட்டுத்தான் கிடைக்கும். வீட்டை இவர்கள் பெயரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. அடிக்கடி விபத்துகள் நடப்பதற்கான சூழல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருசிலருக்கு காது கேளாமல் போகக்கூடும். எனவே, இந்த இடத்தில் இந்த அமைப்பால் விசேஷ பலன்களை எதிர்பார்க்க முடியாது. தனுசு ராசியான ஏழாம் இடத்தில் புதனும், சுக்கிரனும் அமர்கின்றனர். சுகாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியுமான புதனும், சுக்கிரனும் இணைந்து நேராக லக்னத்தைப் பார்ப்பதால் வயதே தெரியாமல் இளமையோடு இருப்பார்கள். ஆனால், களத்திர ஸ்தானத்தில் களத்திரகாரகனே இருப்பதால் கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். அனுசரித்துச் சென்றால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில், இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியான குரு தன் வீட்டில் அமர வைத்து இருவரையும் பலவீனப்படுத்துகிறார். மற்றபடிக்கு பணவரவு, வசதி, வாய்ப்புகளெல்லாம் நிறைந்திருக்கும். வாழ்க்கைத்துணையின் உறவுகளோடு எந்த வியாபாரத்திலும் கூட்டு கூடாது.
மகர ராசியான எட்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவது என்பது மிகவும் சிறப்பான பலன்களையே கொடுக்கும். பொருட்களை பிறரிடம் கொடுத்து வாங்கும்போது கவனம் தேவை. அது எந்தப் பொருட்களானாலும் சரிதான். பொதுவாக இவர்கள் நிலைகுலையும் அளவுக்குப் பிரச்னை வந்தாலும் தீர்க்கமான புத்தியோடு தீர்ப்பார்கள். ஓவியத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். மிகவும் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். கடன் வாங்கவே பயப்படுவார்கள். தத்துவத்தில் பெரும் ஈடுபாடு காட்டி எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார்கள். திடீர் பயணங்களால் நிறைய லாபம் சம்பாதிப்பார்கள். கும்ப ராசியான ஒன்பதாம் இடத்தில் - அதாவது பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனும் புதனும் அமைவதென்பது மிகுந்த சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இவர்கள் கௌரவமான பதவிகளில் சென்று அமர்வார்கள். தந்தையின் பெயரைக் காப்பாற்றும் மகனாக விளங்குவார்கள். ஆனால், உள்ளுக்குள் தந்தையை விஞ்ச வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டேயிருக்கும். எல்லாவிதமான தர்ம நியாயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்களையும், பழைய இன்பமான அனுபவங்களையும் எப்போதும் மறக்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும், பூர்வீக ஊருக்குச் சென்று, பழகிய மனிதர்களைச் சந்தித்தபடியே இருப்பார்கள். ஏதேனும் தெய்வ உபாசனையில் தீவிரமாக ஈடுபடுவார்கள். குளம் வெட்டுதல், அன்ன சத்திரம் அமைத்தல் அல்லது ஏதேனும் டிரஸ்ட் போன்றவற்றை உருவாக்கி நிறைய பேருக்கு உதவுதல் என சேவை செய்வார்கள்.
மீன ராசியான பத்தாம் இடத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து மாபெரும் பதவிகளில் அமரச் செய்வார்கள். இவர்கள் பெரும்பாலும் கலைத்துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். சங்கீதம், சினிமா துறை என்று நுழைந்து பெரிய அளவில் சாதிப்பார்கள். அதேபோல பதிப்புத்துறை, எழுத்தாளர் என்றும் முன்னேறுவார்கள். இந்த இடத்தில் சுக்கிரன் உச்சமாவதால் தன்னால் எவ்வளவு செல்வ வளத்தைத் தரமுடியுமோ அத்தனையையும் தருவார். இவர்கள் அரசியல் மற்றும் சினிமா தொடர்பான வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு நவீனமயமான நகர்களை உருவாக்குவார்கள். தான் சார்ந்த குலத்தின் தொழிலையே நவீனமாக நடத்துவார்கள். மக்களுக்கு மத்தியில் புகழ் பெற விரும்புவார்கள். எல்லோரும் கண்டு வியக்கும்படி வாழ ஆசைப்படுவார்கள். நிறைய தான, தர்மங்களைச் செய்வார்கள். தவறு செய்வோரை மன்னித்து நண்பர்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உண்டு.
மேஷ ராசியான பதினோராம் இடத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்திருந்தாலே மூத்த சகோதரரால் நிறைய அனுகூலம் உண்டு. செய்யும் தொழிலுக்கு இணையான வேறொரு தொழிலைத் தொடங்கி லாபம் பெறுவார்கள். கப்பலில் பயணிக்க விரும்புவார்கள். ஏற்றுமதி - இறக்குமதியில் ஆர்வம் செலுத்தி ஏஜென்சி வைத்து நடத்துவார்கள். பொருட்களைக் கைமாற்றி விற்று அதில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். இவர்களில் சிலர் நாடகத் துறையில் ஈடுபடுவார்கள். மண்ணிலிருந்து பெறப்படும் பொருட்களால் நிறைய சம்பாதிப்பார்கள். நண்பர்களோடு அவ்வப்போது சேர்ந்து உணவு உண்பதை விரும்புவார்கள். ரிஷப ராசியான பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரனும் புதனும் இணைகின்றனர். இந்த அமைப்பு இருந்தால், கையில் காசு தங்காது. வீண் செலவுகள் செய்வார்கள். நிறைய கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவார்கள். காடு, மலைகளுக்கெல்லாம் அடிக்கடி குழுவோடு சென்று வருவார்கள். அவ்வப்போது சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று தியானமும் செய்து விட்டு வருவார்கள்.
இந்த புதனும் சுக்கிரனும் சேர்ந்த அமைப்பு என்பது பெரும்பாலும் நற்பலன்களையே அளிக்கக் கூடியதாகும். சிருங்கார ரசனைகளை அள்ளித் தரும் அமைப்பாகும். சில இடங்களில் மட்டுமே பாதகமான பலன்களை அளிக்கும். இதனால் பண இழப்பும், மன உளைச்சலும் ஏற்படும். மேலும், தன் புத்தியினாலேயே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்கிற எண்ணமும் தகர்ந்து போகும். அதனால், அதுபோன்ற சமயங்களில் நீங்கள் நினைத்து வழிபட வேண்டிய தெய்வமே ஸ்ரீஆண்டாள் ஆகும். ஆண்டாளை நினைக்க நினைக்க வைராக்கியம் பெருகியபடி இருக்கும். எத்தனை தடைகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலிருந்து கீழிறங்கவே மாட்டார்கள். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை அவ்வப்போது தரிசித்து வாருங்கள். எப்போதும் மனதில் அவளை தியானித்தபடி இருங்கள்.
(கிரகங்கள் சுழலும்...)
|