அமெரிக்க அதிபராக ஒரு கம்யூனிஸ்ட்!
‘புரட்சி’ என்ற வார்த்தையே அமெரிக்கர்களுக்கு அலர்ஜி! அப்படிப்பட்டவர்களை புரட்சிக்கு அழைக்க மகா தைரியம் வேண்டும். அந்த தைரியம் பெர்னி சாண்டர்ஸுக்கு மட்டுமே உண்டு. மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டு, ‘‘ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே’’ என சவால் விடலாம். ஆனால் அமெரிக்காவின் ஆதாரக் கொள்கைகளை விமர்சித்துவிட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். தன்னை ‘சோஷலிஸ்ட்’ என கூறிக்கொண்டு அங்கு ஒருவர் ஒரு குட்டி நகரத்துக்குக்கூட மேயர் ஆக முடியாது. ஆனால் பெர்னி அதிபருக்குப் போட்டி போடுகிறார். 74 வயதில் யாரும் அமெரிக்க அதிபர் ஆனதில்லை; கிறிஸ்தவ மதத்தைச் சாராதவர்கள் யாரும் அதிபர் ஆனதில்லை. இத்தனை பலவீனங்களோடு தேர்தல் களத்தில் குதித்து, அமெரிக்க இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறியிருக்கும் பெர்னி சாண்டர்ஸை உலகமே ஆச்சரியமாகப் பார்க்கிறது.
‘‘அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் நானும் இருக்கிறேன்’’ என கடந்த மே மாதம் அறிவிக்கும்போது அவரை அமெரிக்காவிலேயே பலருக்குத் தெரியாது. சூழ்நிலைகள் அவரைக் களத்தில் இறக்கின. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என ஏதோ ஒரு கட்சியைச் சேர்ந்தவர்தான் அமெரிக்க அதிபர் ஆக முடியுமென்பது தலையெழுத்து. பெர்னி இந்த இரண்டு கட்சிகளிலுமே இல்லை. தன்னை ‘சுயேச்சை’ என பெருமையோடு அடையாளப்படுத்தியவர். பெர்னி ஒரு விசித்திரமான மனிதர். வியட்நாமை அமெரிக்கா தாக்கியபோது அதை எதிர்த்த ஜனநாயகவாதிகளில் ஒருவராக அரசியலுக்கு வந்தவர். இரானில் அரசுக்கு எதிரான கலகத்தை அமெரிக்கா தூண்டிவிட்டபோது, ‘‘உலகின் பல நாடுகளில் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதே அமெரிக்காவின் வரலாறு’’ எனக் கூறியவர். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வை கலைத்துவிட வேண்டும் என முழக்கம் செய்தவர். ‘‘அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிதான் சி.ஐ.ஏ. பல உலக நாடுகளில் ஜனநாயகரீதியாக செயல்படும் தலைவர்களை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது இந்த அமைப்பு. ஆபத்தான இந்தப் படையை ஒழிக்க வேண்டும்’’ என்றவர்.
பெர்னியின் அரசியல் வாழ்க்கை பல தோல்விகளோடு தொடங்கியது. வெர்மான்ட் மாகாண கவர்னர் தேர்தலில் மூன்று முறையும், அமெரிக்க செனட் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறையும் தோற்றார். அந்த மாகாணத்தில் பர்லிங்க்டன் என்ற குட்டி நகரின் மேயர் தேர்தலில் சுயேச்சையாக நின்று ஜெயித்தார். அப்போது அமெரிக்காவிலேயே ஒரே சுயேச்சை மேயர் அவர்தான். ‘வரி என்ற பெயரில் மக்களை வதைக்காமல், செலவுகளைக் குறைத்துக்கொண்டு நல்ல நிர்வாகத்தைத் தர முடியும்’ என அவர் காண்பிக்க, அதன்பின் அவரை எந்தக் கட்சியாலும் ஜெயிக்க முடியவில்லை. இதில் கிடைத்த புகழால், அமெரிக்க பிரதிநிதித்துவ சபையின் உறுப்பினர் தேர்தலில் ஜெயித்தார். அதைத் தொடர்ந்து செனட் உறுப்பினர் தேர்தலிலும் சுயேச்சையாக ஜெயித்தார். கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் சுயேச்சையாக ஜெயித்த முதல் செனட்டர் அவர்தான். இப்போது அமெரிக்க செனட் சபையில் இருக்கும் இரண்டு சுயேச்சைகளில் அவரும் ஒருவர்.
பெர்னிக்கு அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளையுமே பிடிக்காது. ‘‘அமெரிக்காவின் 1 சதவீத கோடீஸ்வரர்கள், 90 சதவீத அமெரிக்க மக்களிடம் இருப்பதைவிட அதிகமான செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அந்த 1 சதவீத பணக்காரர்களுக்காகத்தான் இந்தக் கட்சிகள் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்கள்தான் அந்த பணக்காரர்கள் சார்பில் மிடில் கிளாஸை ஏழைகளிடமிருந்து பிரித்து வைக்கிறார்கள். இனரீதியாக, நிறரீதியாக இன்னும் பலவிதங்களில் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். நிச்சயம் நாம் இதற்காக ஜனநாயக உரிமையைப் பெறவில்லை’’ என கொதிப்போடு சொல்பவர் அவர்.
ஆனால் இப்போது அவரே ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் ஆவதற்கான போட்டி யில் மோதுகிறார். அமெரிக்க சிஸ்டம் விசித்திரமானது. கட்சித் தலைவர்தான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்பதில்லை. இரண்டு பிரதான கட்சியிலும் சிலர் கோதாவில் இறங்குவார்கள். கட்சியின் பிரதிநிதிகள் மட்டத்தில் மாகாணவாரியாக தேர்தல் நடக்கும். அதில் யார் அதிகம் பேரின் ஆதரவைப் பெறுகிறாரோ, அவரே வேட்பாளர். அதன்பிறகு பொதுத் தேர்தல் நடைபெறும். ஒரு கட்சியின் சார்பில் களத்தில் இறங்குபவர், அந்தக் கட்சியின் சீனியர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. எனவே பெர்னிக்கு இது சாத்தியமானது. கடந்த மே மாதம் அவர் களத்தில் குதித்தபோது, ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. பெர்னியை யாரென்றே பலருக்குத் தெரியவில்லை. பிரசாரத்துக்கு பல கோடி நிதி தேவை. ஆனால் தேர்தல் செலவுகளுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்த மாட்டேன் என சொல்லிவிட்டார் அவர். ‘‘மீடியாக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன’’ என்று அவர் சொன்னதால், மீடியாக்கள் இருட்டடிப்பு செய்தன.
ஆனால் பெர்னி இரண்டே விஷயங்கள் செய்தார். கல்லூரி வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என்றார்; மருத்துவக் காப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும் என்றார். அமெரிக்காவில் பலர் ஏழைகளானதற்கு கல்விக் கடனும் மருத்துவக் கட்டணங்களுமே காரணம். இந்த இரண்டிலும் அவர் கை வைத்ததால், கல்லூரிப் பட்டாளமே அவர் பின்னால் குவிந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே தனிநபர்கள் அதிக தேர்தல் நிதி செலுத்தியது பெர்னிக்குத்தான். அமெரிக்கத் தேர்தலை கார்ப்பரேட் நிறுவனங்கள் மாயப்போர்வையில் மறைந்து கொண்டு நடத்துகின்றன. அவர்கள் நிச்சயம் பெர்னியை தோற்கடித்துவிடுவார்கள். ஒருவேளை அதைமீறி அவர் ஜெயித்தால், இந்த உலகத்துக்கு நல்லது!
- அகஸ்டஸ்
|