நியூஸ் வே
கேன்ஸ் பட விழாவில் ஐஸ்வர்யா ராய் ஜொலித்ததையும் மிஞ்சி விட்டார் பாலிவுட் பால்கோவா ப்ரியங்கா சோப்ரா. ஆஸ்கர் விழாவில் அவர் காஸ்ட்யூம்ஸ் அத்தனை பேரையும் கிறங்க வைத்துவிட்டது. விழாவில் ப்ரியங்கா அணிந்திருந்த வைர கம்மல், வைர மோதிரங்களின் மதிப்பு மட்டும் ஒரு கோடியைத் தொடலாம் என்கிறது பாலிவுட் மீடியா!
* ‘சண்டக்கோழி 2’வை கைவிட்ட பிறகு லிங்குசாமி - அல்லு அர்ஜுன் படத்தை மே முதல் தேதி தொடங்க திட்டமிட்டு விட்டார்கள்.
* ஒரு காலத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, தற்போது அவர் படத்திலேயே ஹீரோவாக கமிட் ஆகியிருக்கும் கார்த்தியிடம் அது பற்றிக் கேட்டால், வெட்கப்படுகிறார். ‘‘மணி சார் என்னோட குரு. ஒரு ஷாட் எப்படி வந்திருக்குனு அவரோட மூணு எக்ஸ்பிரெஷன்ஸ் வச்சு கண்டுபிடிச்சிடலாம். ஷாட் முடிஞ்சதும் ‘ஓகே’னு சொன்னா, அவருக்கு திருப்தியில்லைனு அர்த்தம். அதே ‘ஓகே’யை கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொன்னா, ஓரளவு நல்லா வந்திருக்குனு அர்த்தம். ரொம்பவே நல்லா வந்தால், தோளைத் தட்டிக் கொடுத்து ‘ஓகே’ சொல்வார்!’’ என்கிறார் கார்த்தி.
* தமிழின் முதல் ‘அடல்ட்’ படத்தை எடுத்து ரகளை செய்த ஆதிக் ரவிச்சந்திரன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மறுபடியும் இணைந்துவிட்டது. அதற்கும் ரகளையாக, ‘வர்ஜின் மாப்பிள்ளை’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
* ‘சேதுபதி’க்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வர முடிவெடுத்துவிட்டார் ரம்யா நம்பீசன். ‘‘என் முழுப்பெயர் ரம்யா சுப்ரமணியம் உன்னி. நடிக்க வந்த டைம்ல திவ்யா உன்னினு ஒரு நடிகை இருந்தாங்க. அதனால என்னை ரம்யா நம்பீசன்னு ஆக்கிட்டாங்க!’’ என்கிறார் ரம்யா, கண்கள் மின்ன.
* விஜய்யுடன் ‘தெறி’, சூர்யாவுடன் ‘24’ தவிர தனுஷுடன் ‘வடசென்னை’ ஆகியவை சமந்தாவின் தமிழ் ப்ராஜெக்ட்ஸ். இவை தவிர, தெலுங்கில் மகேஷ்பாபு படம் உள்பட 3 படங்களில் பொண்ணு பிஸி!
* பாலிவுட் நடிகைகள் பலரும் ஹாலிவுட் வாய்ப்புகள் தேடிப் பறக்க, தியா மிர்ஸா சற்றே வித்தியாசமாக ஈரான் படத்தில் நடிக்கிறார். இந்தோ-ஈரானியன் கூட்டுத் தயாரிப்பான ‘சலாம் மும்பை’ என்ற இந்தப் படத்தில் ‘ஈரானிய ஷாருக்கான்’ எனப்படும் மொகமத் ரெசா கோல்சார் ஜோடியாக தியா நடிக்கிறார்.
* எகிடுதகிடாக போய்க்கொண்டிருக்கும் கர்நாடக அரசியலில், முன்னாள் முதல்வர் குமாரசுவாமியின் லேட்டஸ்ட் டார்கெட், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை ‘குத்து’ ரம்யா. மாண்டியா தொகுதியின் முன்னாள் எம்.பியான ரம்யாவை கெட்ட ஆவி என வர்ணித்தார் குமாரசாமி. ‘‘அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து மாண்டியாவில் 100 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்கள்’’ என சொன்ன குமாரசுவாமி, ‘‘ரம்யா அடிக்கடி ஏன் லண்டன் போகிறார்?’’ எனக் கேட்டார். ‘‘நான் படிப்புக்காக போகிறேன். குமாரசுவாமி அடிக்கடி ஏன் இலங்கை போகிறார்?’’ எனக் கேட்டிருக்கிறார் ரம்யா. இந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியில் வரும் போலிருக்கே!
* தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அஜித். விழாவில் அஜித்தின் குடும்பத்தினர் மற்றும் மகள் அனோஸ்காவின் பள்ளித் தோழிகளும் கலந்துகொண்டனர். அஜித் ரசிகர்களும் இன்னொரு பக்கம் ‘குட்டி தல’ புகழ்பாடி பேனர்கள், நலத்திட்ட உதவிகள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
* கேரளாவும் பீகாரும் மதுவிலக்கை நோக்கிச் செல்ல, சாராய விஷயத்தில் தமிழகத்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டிருக்கிறது உத்தரப் பிரதேசம். இந்த ஏப்ரல் முதல் மதுபானங்களுக்கான கலால் வரியை 25 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் அகிலேஷ் யாதவ். இதனால் விலை மிகவும் குறையும். அதோடு மலிவுவிலை ரகங்களையும் புதிதாக கடைகளில் விற்க இருக்கிறார்கள். உ.பி.யில் மொத்தம் 26 ஆயிரம் மதுபானக் கடைகள் உள்ளன.
* ‘சிங்கம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 7 என அறிவிக்கப்பட்டுவிட்டது. சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என மாறி மாறி படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.
* ஹரியானாவில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வன்முறையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாட் இனத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக் துணிந்து இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ‘‘வன்முறையைக் கைவிட்டு, சட்டத்துக்கு உட்பட்ட வழியில் கோரிக்கைகளைச் சொல்லுங்கள். நாம் மக்களின் பாதுகாவலர்கள்; அழிக்கப் பிறந்தவர்கள் இல்லை’’ என வேண்டுகோள் விடுத்தார் அவர்.
* ‘காக்கா முட்டை’ மணிகண்டன் அடுத்து விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம், ‘ஆண்டவன் கட்டளை’. இதில் விஜய்சேதுபதியின் ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறார் ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங்!
* சட்டமன்றத் தேர்தலுக்கு எல்லோரும் தேர்தல் அறிக்கைகள் ரிலீஸ் செய்ய, படமே ரிலீஸ் செய்கிறார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. ‘பாகினி’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது. இதில் மம்தாவாக நடிப்பவர் ரூமா சக்கரவர்த்தி. மூன்று வருட உழைப்பில் இந்தப் படம் உருவானதாகச் சொல்கிறார் இயக்குனர் நேஹல் தத்தா.
* ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வர் சுந்தரம்’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். இதில் ‘சர்வர் சுந்தர’த்துக்கு ஹீரோயினாக மராத்தி தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான வைபவி ஷன்டியலாவைப் பிடித்து வந்திருக்கிறார்கள். பரதம், கதக் நடனங்களில் வைபவி எக்ஸ்பர்ட்டாம்!
* நாள் தவறாமல் டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் இல்லாமல், அரசியல் நிலவரம் பற்றியும் அந்த டைரிக் குறிப்பில் இருக்கும். தன் டைரிகளை மகள் ஷர்மிஷ்டா முகர்ஜியிடம் கொடுத்து வைத்திருக்கும் பிரணாப், ரகசியம் காக்கவும் சொல்லியிருக்கிறாராம்.
* தெலங்கானா கவர்னர் நரசிம்மன், திடீரென செகந்திராபாத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்தார். அது குப்பைக் கிடங்கு போல இருக்க, பெட் இல்லாமல் பல நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். கடுப்பான கவர்னர், அங்கிருந்தே சுகாதார அமைச்சருக்கு போன் செய்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அங்கிருந்து வந்த நம் கவர்னர், திறப்பு விழாக்களுக்கு மட்டும் போகிறார்!
* மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் பிரஸ்மீட். மோடி ஆட்சியில் நாட்டில் மின்தடை பிரச்னை தீர்ந்துவிட்டதாக அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அடிக்கடி பவர்கட் ஆனது. ‘‘என் வேலையை என் துறையினர் இப்படித்தான் ஞாபகப்படுத்துவார்கள்’’ என சிரித்து சமாளித்தார் அவர்.
* ‘இது நம்ம ஆளு’ படத்தை நிறைவு செய்யும் பணியில் இறங்கிவிட்டார் சிம்பு. பிரமாண்டமான செட்கள் அதற்காக போடப்படுகின்றன. சிம்புவோடு நயன்தாராவுக்குப் பதிலாக ஆண்ட்ரியா ‘கெட்ட ஆட்டம்’ போடுகிறார்.
* மகேஷ்பாபுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பட ஸ்கிரிப்ட்டை ஏ.ஆர்.முருகதாஸ் ரெடி பண்ணிவிட்டார். மகேஷ் உடன் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ப்ரணீதி சோப்ரா என மூவரில் ஒருவரே ஜோடி.
* சந்தடியில்லாமல் ‘பாகுபலி-2’ படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 14, 2017 என அறிவித்துவிட்டார்கள். எனவே படப்பிடிப்பு தீவிரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அனுஷ்கா அதற்காக தொடர்ந்து நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார்.
* டெல்லியில் நடந்த சார்க் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் நம்மூர் கவிஞர் மதுமிதா! சார்க் அமைப்பில் உள்ள எட்டு நாடுகளின் சமீபத்திய இலக்கியப் போக்குகள் குறித்து விவாதிக்கவே இப்படியொரு விழா! ‘‘இது ஒரு நல்ல அனுபவம். பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், வங்க தேசம் என சார்க்கிலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் கவிஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் கலைகளையும், பண்பாட்டையும் கவிதை வழி தரிசித்து பிரமித்துப் போனேன். எட்டு நிமிட கவிதை வாசிப்பில் ஒன்றை தமிழிலும், இரண்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வாசித்தேன்!’’ என்கிறார் மதுமிதா உற்சாகமாக!
* நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. அமெரிக்க காதலர் ஜீன் குட்எனஃப் இந்து முறைப்படி ப்ரீத்தியை மணந்தார். நெருங்கிய உறவுகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. திருமணப் புகைப்படங்களை ரகசியமாக வைத்திருக்கும் ப்ரீத்தி, அவற்றை ஏலம் விட்டு அந்த நிதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவிடப் போகிறாராம். நல்ல மனசு!
|