பழக்கம்
காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது. ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான். ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான். ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான். ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா. அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வெடித்தான். ‘‘வடையில உங்களுக்குப் பிடிக்காத மிளகு போட்டிருக்கேன். அதனாலென்ன? சும்மா சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.
‘‘ஏண்டி! உனக்கு என்ன ஆச்சு?’’ ‘‘கிராமத்துல தனியா இருக்கிற உங்க அம்மா, அடுத்த மாசத்திலிருந்து நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க. அவங்களுக்கு இஞ்சி, மிளகு, முள்ளங்கி எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்க. இனிமே அதையெல்லாம் சேர்த்துதானே சமைக்கணும். அவங்க எதிர்ல நீங்க கோபப்பட்டா, வருத்தப்பட்டு திரும்பிப் போயிடுவாங்க. அதனால, நீங்களும் எல்லாத்தையும் இப்பவே சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.
எஸ்.குமாரகிருஷ்ணன்
|