அடகு வைக்கலாமா?
‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ - தலைப்பில் கணக்கு உதைத்தாலும் கதையின் முடிவு மிகச் சரியாக இருந்தது. இந்திரா சௌந்தர்ராஜனின் மர்ம நாவல்களில் மகத்தான படைப்பு இது! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
வாரா வாரம் விறுவிறுப்பு குறையாமல், அடுத்த திங்கள்கிழமையை தவிப்போடு எதிர்பார்க்க வைத்த கதை, ‘ஐந்தும் மூன்று ஒன்பது’. காலப் பலகணி என ஒன்று நிஜமாக இருப்பது போலவே எங்களை நம்ப வைத்து விட்டார் இந்திரா சௌந்தர்ராஜன். - கோ.அரசு, புதுச்சேரி.
‘சவுகார்பேட்டை’யில் ராய்லட்சுமியின் ஸ்டில்ஸைப் பார்த்தால், இப்போதே மனதை அவரிடம் அடகு வைத்துவிடலாம் என்று தோன்றுகிறது! நிம்பல்கீ ஓகேவா? - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
நெஞ்சத்தை ரொம்பவும் நெகிழ வைத்து விட்டது விவேக்கின் புத்திர சோக உருக்கம். அதிலும் அந்தக் கடைசி வரிகளைப் படித்தபோது எங்களுக்கே அழுகை வந்துவிட்டது! - வி.வி.வினிஷா, சிவகாசி.
காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவிற்கு நேரம் நல்ல நேரம். தொட்டதெல்லாம் துலங்கும் அவருக்கு அடுத்த அஜெண்டா கிரிக்கெட்டும் கைகூடும்! - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
ஏற்கெனவே சினிமா, செல்போன் பாதிப்புகளில் குழம்பித் தவிக்கும் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களும் புகுந்துகொண்டால் எதிர்காலம் சூன்யமே! - மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.
ஜப்பான் அரசுக்கு செங்கோட்டையைச் சேர்ந்த அமைப்பு விழா எடுத்திருப்பது பெருமை. அதுவும் குங்குமம் கட்டுரை வழி அது நடந்தது பெருமையோ பெருமை! - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
‘வலைப்பேச்சு’ பகுதி வழக்கம் போலவே கலகல! அதிலும் ‘நாலரை வருஷமா எல்லோருக்கும் வயசாகட்டும்னு காத்திருந்தோம்’ என ‘நாஞ்சில் சர்பத்’ சொல்வது நச்! - வீ.இளைய கம்பர், கடலூர்.
‘நினைவோ ஒரு பறவை’ பகுதியில் இந்த வாரம் நா.முத்துக்குமார் ஒரு சிறுகதையே புனைந்துவிட்டார். அப்படியே கிராமத்தில் வாழ்ந்து பார்த்த திருப்தி! - கே.சாந்தி செல்வன், புதுக்கோட்டை.
‘குங்குமம்’ கடந்த இதழில் என் மகன் பிரசன்னகுமாரின் இழப்பு குறித்து என் நினைவுகளைப் பகிர்ந்திருந்தேன். அதைப் படித்துவிட்டு கவிஞர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய் உட்பட பலரும் நெகிழ்ச்சியோடு எனக்கு ஆறுதல் சொன்னார்கள். துயரத்தில் ஆழ்ந்திருந்த மனதுக்கு மயிலிறகு வருடலாக அமைந்தது இந்த ஆறுதல்! - அன்புடன் விவேக்
|