கணிதன் விமர்சனம்
பிபிசி வேலையும், காதலுமாய் திரியும் அதர்வாவின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்கிறார்கள் வில்லன்கள். அவர்களை அழிக்கும் அவரின் ஆக்ரோஷ தாண்டவமே ‘கணிதன்’! மிக எளிய மனிதர்களின் ஏற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்வியும் அதைக் குறிக்கும் மார்க் ஷீட்டும்தான். அதிலும் போலிகள் தயார் செய்து, அதனை அதிகார வர்க்கத்தின் துணையோடு மாநிலம் மொத்தமும் பரவ விடுகிறது ஒரு கும்பல். அதற்கு அதர்வாதான் மூல காரணம் எனப் போலீஸ் அவரை கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகிறது. நண்பர்களின் துணை கொண்டு, அக்கிரமத்திற்கு காரணமான நிஜக் குற்றவாளிகளை அதர்வா கண்டுபிடிப்பதும் வேட்டையாடுவதுமே ‘கணிதன்’ க்ளைமேக்ஸ். அதிகமாகவே விழிப்புணர்வுக்கு வரவேற்புக் குடை விரித்ததற்கு அறிமுக இயக்குநர் சந்தோஷுக்குப் பூங்கொத்து! பத்திரிகை பக்கங்களில் மட்டுமே பார்த்துப் படித்து கிறுகிறுக்க வைத்த மோசடிப் பின்னணியின் விவரங்கள், அதன் நெளிவு சுளிவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எங்கே, எப்படித் தயாராகிறது போலி மார்க் ஷீட்... அதன் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள் யார் யார்... அவர்களில் பலர் மருத்துவரிலிருந்து போலீஸ் அதிகாரிகள் வரை மக்களின் மத்தியில் சுதந்திரமாகப் புழங்குகிற கொடுமை என விவரங்களை வைத்தே வலிமை சேர்த்திருக்கிறார் இயக்குநர்.
அதர்வா... மிகவும் நம்பிக்கைக்குரிய ஹீரோக்களில் ஒருவராக வந்துவிட்டார். காதலில் கசிந்து உருகுபவர், பிரச்னைக்குள் வந்துவிட்ட பிறகு, தாதாவைக் கட்டம் கட்டி அவரைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவது துறுதுறு. வில்லன் தருண் அரோரா அதைத் தெரிந்துகொண்டு நழுவுவதும், விடாமல் அதர்வா துரத்துவதும் படத்தின் பரபரப்பான பக்கங்கள். காதலை விடவும், அதிரடி ஆக்ஷனில் அந்த உயரத்திற்கு அழகாகப் பொருந்துகிறார் அதர்வா. கோபத்தை, குரோதத்தை, இயலாமையை உடல்மொழியில் வெளிப்படுத்தும் விதத்திலும் வெகுதூரம் முன்னேறியிருக்கிறார். ரசிக்க ரசிக்கக் குறையாத அழகு கேத்தரின் தெரஸாவிடம். ஆனால், படத்தின் தன்மையை மனதில் ஏற்றிக்கொண்டு நடிப்பது மாதிரி எந்த ஒரு தடயமும் இல்லை அவரிடம். அதர்வாவின் அத்தனை ‘மூவ்’களையும் முறியடிக்கும் மதியூகத்தையும், முகத்தில் புன்னகையே துளியும் இல்லாமல் இறுக்கம் காட்டும் தன்மையிலும் கச்சிதமாக ப்ளே செய்கிறார் வில்லன் தருண் அரோரா. எதிர்காலத்தில் சில பல ஹீரோக்களை திரையில் இவர்தான் எதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம். அதர்வாவின் நண்பர்களாக கருணாகரன், சுந்தர்ராமு போன்றோர்களை செட் ப்ராப்பர்ட்டிகள் மாதிரி உபயோகிக்காமல் காமெடிக்கும் பயன்படுத்தியிருப்பது நல்ல ரிலாக்ஸ். பாடல்களில் ட்ரம்ஸ் சிவமணி தனியாகத் தெரிந்தாலும், முதல் இரண்டு பாடல்களை படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் கொண்டு வந்து திணித்திருப்பது நெருடல்.
ஆரம்பத்தில் அத்தனை பெப்பாக இருக்கும் கேத்தரின் தெரஸாவை, அதற்குப் பிறகு மொத்தமாகக் களையிழக்கச் செய்கிறது ஓவர் மேக்கப். வில்லன் கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு அதர்வாவைத் தேடும்போது அதர்வாவும், தெரஸாவும் சந்தித்துக் கொஞ்சிக்கொள்வது கதை ஓட்டத்திற்கு ஏகத் தடை. வில்லன் கடைசி சீனுக்கு முன்னால் வரைக்கும் எங்கேயும் சிக்காமல், ஒரு ஆதாரம் கூட இல்லாமல் நழுவுவதும் போங்கு சார்! பின்னணி இசை செம ஸ்கோர் செய்கிறது. ஒளிப்பதிவில் திகில் கூட்டியிருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா. ஆரம்பத்திலிருந்து கடும் உழைப்பால் த்ரில் படத்திற்கான டெம்போவைக் கூட்டியிருக்கிறது கேமரா! திரைக்கதையிலும் ஈர்ப்பைக் கூட்டியிருந்தால் ‘கணிதன்’ ஸ்கோர் செய்திருப்பான்!
- குங்குமம் விமர்சனக் குழு
|