ஆறாது சினம் விமர்சனம்



தன் காதல் மனைவி, குழந்தையின் மரணத்திற்குக் காரணமான வில்லன்களை அழித்தொழிக்கப் புறப்படும் கணவனின் கதையே ‘ஆறாது சினம்’. தமிழ்நாட்டின் இளமையான, திறன் மிக்க போலீஸ் அதிகாரி அருள்நிதி. மதுரையில் வேண்டிய மட்டும் தொல்லை தரும் தாதாவை என்கவுன்டரில் போட்டுத் தள்ள மேலதிகாரிகள் அவரை அனுப்புகிறார்கள். கச்சிதமாக இடம் கண்டுபிடித்து அந்தக் காரியத்தில் இறங்குகிற அருள்நிதி, தவறிப் போய் தாதாவின் மனைவியை சுட்டு விட, தாதா திரும்பி வந்து அருள்நிதியின் குடும்பத்தைப் போட்டுத் தள்ளுகிறான். மீண்டும் அந்த எதிரிகளை அருள்நிதி அழிப்பதே கதை! மலையாளத்தில் ‘மெமரீஸ்’ என வந்து ஹிட்டடித்த கதையே தமிழில் ‘ஆறாது சினம்’. அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களில் முடிந்த வரை உழைத்திருக்கிறார் டைரக்டர் ‘ஈரம்’ அறிவழகன். ஆக்‌ஷன், ட்விஸ்ட், காதல், சதி, உளவு, வியூகம் என ஷிஃப்ட் போட்டு பறக்கும் பயணத்தில் திரைக்கதை எப்போதுமே சூடாக இருக்கிறது.



போலீஸ் அதிகாரியாக அருள்நிதி அதிகபட்ச துடிப்பு காட்டுகிறார். செம ஃபிட் ஜிம் பாடிக்கும், அந்த மேலான உயரத்துக்கும் பாத்திர வார்ப்பு கச்சிதம். ஓட்டத்திலும், அவசரத்திலும், வேகத்திலும் ஈர்க்கிறார். அவ்வளவு கச்சிதமாக எதிரிகளை சுட்டுத் தள்ளிவிட்டு இதழோரப் புன்னகையோடு திரும்ப துப்பாக்கியை இடுப்பில் சொருகுகிற தோரணைக்கு அலறுகிறது தியேட்டர். அதே கம்பீரம், மனைவி கொலையுண்ட பிறகு சோகமாக உருமாறி பின்னியெடுக்கிறது. சதா குடியும், மனைவி - குழந்தையின் நினைவுமாக கலங்குவதில் அலட்டிக்கொள்ளாமல் மனசை அள்ளுகிறார்.
 
மனைவியாக ஐஸ்வர்யா... நல்ல வசீகரம். கொஞ்ச நேரமே அவ்வப்போது வந்து சென்றாலும் ஈர்க்கிறார். அவரின் மொத்தக் கவர்ச்சியும் பெரிய கரிய விழிகளில் குடிகொண்டிருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா தத்தாவும் ஈர்ப்பு. இன்னும் அவருக்கான இடத்தைக் கூட்டியிருக்கலாம். கமிஷனராக ராதா ரவி அண்டர்ப்ளே! குற்றவாளிகள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்து அருள்நிதி அவர்களை கண்டுபிடிக்கப் புறப்படும் காட்சிகளும் அதை வைத்தே கொலைகாரனின் பின்னணியை யூகிக்கும் காட்சிகளும் போலீஸ் இன்வெஸ்டிகேஷனின் அசல் பதிவு. கொலை செய்யப்பட்டவரின் உடலில் எழுதப்பட்ட எழுத்துக்களின் பின்னணியை எடுத்துக்கொண்ட விதம் புதுசு. படத்தின் துவண்ட கணங்களை துடைத்துவிட்டு மேலேற்றிச் செல்வது அந்த சுவாரஸ்யம்தான். கைப்பேசிகளால் நம் இளைஞர்களுக்கு நேரும் விபரீதங்களையும் படம் தொட்டுச் செல்கிறது. ஆரம்பத்தைக் கண்டுகொண்ட பிறகு, அருள்நிதி அடுத்தடுத்த இடங்களையும், எதிரியின் நகர்வையும் கணிப்பது சீட்டின் நுனிக்குக் கொண்டு போய் வைக்கிறது. பார்த்துப் பழகிய அத்தியாயங்களாக இல்லாமல் இருப்பதுதான் படத்தின் வைப்ரேஷனுக்கு துணை!

பாடல்களில் அதிக சுவாரஸ்யம் கூட்டுகிறார் தமன். ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்துக் குறளை பாடலாக்கி, டைட்டில் கார்டிலேயே திருவள்ளுவரைச் சேர்த்துக்கொண்டிருப்பது அடடா! பின்னணியிலும் பரபரப்பாகத் தொடர்கிறது இசை. பரபரப்பில், வேகத்தில், பதற்றத்தில் வேண்டிய அளவு பிரமாதப்படுத்தியிருக்கிறது அரவிந்த் சிங்கின் கேமரா. எப்போதுமே வெளிப்படையாகக் குடியில் இருக்கும் போலீஸ் அதிகாரி இங்கே காணப்படுவது சாத்தியமா, இத்தனை சீரியஸ் கொலைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க ஏன் தாமதம் எனக் கேள்விகள் எழக்கூடும். சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொன்னதில் பரபரக்கிறது ‘ஆறாது சினம்’.

- குங்குமம் விமர்சனக் குழு