நம்பர் ஒன் நயன்தாரா



சக்சஸ் சீக்ரெட்

‘‘உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யார்?’’ என்றால் ஹீரோக்கள் மட்டுமல்ல... ஹீரோயின்களும் சொல்லும் அல்டிமேட் ஆன்சர், நயன்தாரா! 2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தென்னிந்திய நடிகை. அவ்விட தேசத்திலிருந்து தமிழுக்கு தவ்விட நினைக்கும் நடிகைகளுக்கெல்லாம் நயன்தான் அயர்ன் டானிக். நம்பர் ஒன் நயன்தாராவின் வெற்றி ரகசியம் குறித்து பிரபலங்களிடம் பேசினால், பிரமிக்க வைக்கிறார்கள். விக்ரமுடன் ‘இருமுகன்’, கார்த்தியுடன் ‘காஸ்மோரா’, இயற்குநர் சற்குணம் தயாரிப்பில் ஒரு த்ரில்லர் படம்... இன்னும், தெலுங்கு, மலையாளம் என 2016ல் நயன் கால்ஷீட் பிஸி. இவை தவிர, ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’ இரண்டும் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு ரெடி!



‘‘நான் இதுவரைக்கும் பல டாப் ஹீரோயின்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். ஆனா, ஸ்டோரி நாலேட்ஜ்ல டாப்னா அது நயன்தாராதான்!’’ எனத் துவங்குகிறார் இயக்குநர் மோகன் ராஜா. ‘‘ ‘தனி ஒருவன்’ படத்தோட முழுக்கதையையும் கேட்டாங்க. என்னடா இவ்வளவு தூரம் அழுத்திக் கேக்கறாங்களேன்னு எனக்கே சலிப்பா இருந்துச்சு. ஆனா, கதை விவாதம், காட்சி அமைப்பில் அவங்க பங்கெடுத்துக்கிட்ட அந்த அக்கறை என்னை ஆச்சரியப்பட வச்சிடுச்சு. நிறைய ஹீரோயின்கள் தமிழ்ல நல்லா பேசுவாங்க. ஆனா, நயன்தாராவுக்கு தமிழ் நல்லா எழுதவும் தெரியும்!’’ என அதிசயிக்கிறார் மோகன் ராஜா.

‘‘இண்டஸ்ட்ரியில நயன்தாரா சீனியர். அதனால அவங்களோட நடிக்கும்போது ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, முதல் நாளே அந்த எண்ணத்தை அடிச்சு நொறுக்கிட்டா ங்க. நான் கூட பிரேக்ல கேரவன் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன். ஆனா, ஒரு மணி நேரம் பிரேக் விட்டா கூட நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு நகர மாட்டாங்க. அவ்வளவு டெடிகேஷன்!’’ என வியக்கிறார் விஜய் சேதுபதி. ஜீவாவுடன் ‘திருநாள்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார் நயன்தாரா. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் இயக்கிய பி.எஸ்.ராம்நாத்தின் அடுத்த படம் இது. ‘‘அவங்களோட தொழில் பக்தி, சின்ஸியாரிட்டி, அர்ப்பணிப்பு... இதெல்லாம்தான் அவங்க வெற்றிக்குக் காரணம். நயன்தாரா மேடம்கிட்ட நான் பிரமிச்ச விஷயம், ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் இடையே  காஸ்ட்யூம் மாத்தறேன்னு யூனிட்டை காக்க வைக்க மாட்டாங்க. டக்குனு ரெடியாகிடுவாங்க. சினிமாவில் ஒவ்வொரு நொடியும் பணம் செலவாகிட்டே இருக்கும்... அது தன்னால வீணாகக் கூடாதுனு நினைப்பாங்க. அதனாலதான் இவ்வளவு பெரிய இடத்தை அவங்களால அடைய முடிஞ்சது!’’ என சிலாகிக்கிறார் ராம்நாத். 

‘‘தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஜெயிக்க முக்கியமான காரணங்கள் மூணு... மொழி, கலாசாரம், உடல்வாகு. அப்படிப் பார்த்தா மும்பையை விட கேரளாவுக்கும் நமக்கும் மொழி ரீதியாவும், உடை, ரசனைனு கலாசார ரீதியாவும் பல ஒற்றுமைகள் இருக்கு. அப்புறம் ஒரு நடிகையோட அனாடமி சரியா இருக்கணும். ‘சத்யம்’ படத்துல நயன்தாரா சிக்ஸ் பேக் வச்ச மாதிரி இருப்பாங்க. ஒரு கதாநாயகிக்குத் தேவையான உடல்வாகை கச்சிதமா அவங்க பராமரிக்கிறாங்க. இன்னொரு முக்கியமான  விஷயம்... ஹீரோக்களின் குட் புக்கிலும் நயன்தாராவுக்கு ஸ்பெஷல் இடம் இருக்கு. அவங்க பர்த் டேவுக்கு விஷ் பண்ற ஹீரோக்களின் லிஸ்ட் மொழி கடந்தது!’’ என்கிறார் கேரள நடிகை ஒருவர்.



‘‘நயன்தாரா மேடத்தை முதல் தடவையா சந்திச்சு, கதை சொல்லப் போயிருந்தேன். ‘இதுக்கு முன்னாடி நீங்க என்ன படம் பண்ணியிருக்கீங்க?’னு கூடக் கேக்கல. நேரடியா கதையைத்தான் கேட்டாங்க!’’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார் ‘மாயா’ இயக்குநர் அஸ்வின் சரவணன். ‘‘காலை ஆறு மணிக்கு ஷூட்டிங்னா, அஞ்சே முக்கால் மணிக்கே நயன்தாரா மேடம் ரெடியாகி இருப்பாங்க. வொர்க்கை ரொம்ப நேசிப்பாங்க. ரொம்ப புரொஃபஷனல். முடிஞ்சவரை ரீடேக் தேவைப்படாத மாதிரி நான் ஷாட்ஸை எடுத்து முடிச்சேன். இயக்குநருக்கு டென்ஷன் ஏற்படுத்தாத ஒரு ஆர்ட்டிஸ்ட் அவங்க!’’ என அப்ளாஸ் அள்ளி வீசுகிறார் அஸ்வின். ‘‘தமிழ்ல முன்வரிசையில இருந்த அசின், த்ரிஷா ரெண்டு பேரும் பாலிவுட் கனவில் மிதந்த நேரம்... இங்கே மார்க்கெட்டை தக்க வச்சிக்க மறந்துட்டாங்க.

இப்பவும் தமிழில் மட்டும் கவனம் செலுத்துற பெரிய நடிகைகள் யாரும் இல்லை. அந்த இடத்தை நயன் கெட்டியா பிடிச்சிட்டாங்க!’’ என்கிறார் சினிமா விமர்சகர் ஒருவர். ‘‘நயன் ரெண்டு கோடிக்கு மேல சம்பளம் வாங்குறதா சொன்னாலும் அதுல ஒரு பகுதியை எடுத்து தன்னோட உதவியாளர்கள் பலருக்கும் கார், வீடுனு வாங்கிக் குடுத்து சந்தோஷப்படுத்துவாங்க. ஸ்பாட்டுக்கு வந்துட்டா, அந்தச் சூழ்நிலை நிசப்தமா  இருக்கணும்னு நயன்தாரா எதிர்பார்ப்பாங்க. தொந்தரவு குடுக்கற  மாதிரி யாராவது பேசிக்கிட்டே இருந்தா கடுப்பாகிடுவாங்க. ‘சைலன்ஸ்’னு  ரொம்ப சவுண்டா சொல்லிடுவாங்க. எப்பவும் அவங்க உண்டு, அவங்க வேலை உண்டுனுதான் இருப்பாங்க. ஒரு வார்த்தை கூட எக்ஸ்ட்ராவா பேச மாட்டாங்க. டேக் சரியா வரலைன்னா முகம் சுளிக்க மாட்டாங்க. ரிஸ்க்கான சீன்கள்ல  இயக்குநர்களே டூப் வச்சு பண்ணிக்கலாம்னு நினைச்சா கூட வேண்டாம்னு சொல்லிடுவாங்க. சோதனையான காலகட்டங்கள்ல யார் கைவிட்டாலும் அவங்க நேசிச்ச  சினிமா அவங்களைக் கைவிடலை. அப்படி நேசிக்கறதாலதான் நம்பர் ஒன்னா நயன்தாரா இருக்காங்க!’’ என்கிறார்  தயாரிப்பாளர் ஒருவர். எந்த மொழி சினிமா விலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நம்பர் ஒன் நடிகைகளும் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், நயன்தாராவுக்கு இந்த விதி பொருந்தாது போல!

- மை.பாரதிராஜா