கால்நடைகள்தான் என் உலகம்!
உருகும் சாதனா எம்.பி.பி.எஸ்.
அந்த நிலப்பரப்பெங்கும் கால்நடைகளின் வாசனை... ஒருபுறம் அசந்து அசை போட்டபடி சொக்கி நிற்கின்றன நூற்றுக்கணக்கான மாடுகள்... இன்னொரு பக்கம் நாய்கள்... மற்றொரு திசையில் சிறிய நீரோடையில் மேய்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாத்துக் கூட்டம். மற்றொரு பகுதியில் பல நூறு கோழிகள்...
மாடுகளுக்கு மத்தியில் அமர்ந்து, வியர்க்க விறுவிறுக்க சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார் 70 வயது சாதனா. சீரும், சிறப்பும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். லண்டனில் மருத்துவம் படித்தவர். அதற்கான சாயல் துளியும் அவர் முகத்திலோ செய்கைகளிலோ இல்லை. விலங்குகள்தான் அவரின் உலகம். அடிபட்டுக் கிடக்கிற, கைவிடப்படுகிற விலங்குகளை அள்ளி எடுத்துவந்து பிள்ளைகளைப் போல வளர்க்கிறார். அவற்றுக்கு மத்தியிலேயே வாழ்கிறார்.
சாதனாவின் பூர்வீக வேர் காஷ்மீரத்தில் ஊடோடிக் கிடக்கிறது. தாத்தா காலத்தில் கர்நாடகாவுக்கு வந்த குடும்பம், அப்பா காலத்தில் சென்னைக்கு வந்திருக்கிறது. ‘‘எங்க அம்மாவழி தாத்தா பேரு சிவபட். புகழ்பெற்ற வழக்கறிஞர். பெரிய பணக்காரரும் கூட. அம்மாவுக்கு 40 கிராமங்களும், செவர்லே காரும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாராம். வினோபா பாவே பூமிதான இயக்க பிரசாரத்துக்காக வந்தபோது, அம்மா 39 கிராமங்களை அவர்கிட்ட கொடுத்துட்டாங்க. 1 கிராமத்தை வேலை செஞ்சவங்களுக்கு பிரிச்சுக் கொடுத்திட்டு சென்னைக்கு வந்தோம். இங்கே வரும்போது எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும். எங்க அப்பாவோட அப்பா ரகுராம், காந்திஜியோட பிரைவேட் செக்ரட்டரிகள்ல ஒருத்தர். அப்பா அரசாங்க எஞ்சினியர். என் உடன்பிறந்தவங்க நாலு பேர்.
சிவபட் தாத்தா இந்த விஷயத்துல எனக்கு முன்னோடி. விலங்குகள் மேல அவ்வளவு ஈடுபாடா இருப்பார். நிறைய விலங்குகள் வீட்டுல இருக்கும். பிள்ளைகளும், விலங்குகளும் வித்தியாசம் இல்லாம வளர்ந்த வீடு. எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அவரை மாதிரியேதான் நானும். விலங்குகள் மேல என்னையறியாத ஈர்ப்பு. எல்லா நேரமும் நாய், பூனை, ஆடு, மாடுன்னு விலங்குகள் கூடவே இருப்பேன். இந்த உலகத்துல எல்லாமே ஒண்ணை ஒண்ணு சார்ந்துதான் இருக்கு. மனுஷன் மட்டும் தன்னை மேன்மையானவனா நினைச்சுக்கிட்டு மற்ற உயிரினங்களை எல்லாம் தள்ளி வைக்கிறான். உண்மையைச் சொல்ல ணும்னா, மற்றவை மாதிரி மனுஷனும் சக உயிரினம். அவ்வளவுதான். அந்த யதார்த்தத்தை புரிஞ்சுக்கிட்டா எல்லாருமே மற்ற உயிரினங்களோட இணைஞ்சு வாழத் தொடங்கிடுவோம்.
பள்ளிக்கூட காலங்கள்லயே விலங்குகளுக்காக ஒரு இல்லம் அமைக்க ஆசைப்பட்டேன். ஆனா வீட்டுல தயங்கினாங்க. ‘முதல்ல படி... அதுக்குப் பிறகு நீ என்ன நினைக்கிறியோ செய்...’னு சொன்னாங்க. லண்டன்ல போய் மருத்துவம் படிச்சேன். படிப்பை முடிச்சுட்டு இந்தியா வந்ததும் எனக்கு மருத்துவத் தொழில் மேல நாட்டம் வரலே. மனிதர்களுக்கு மருத்துவம் செய்ய வீதிக்கு வீதி மருத்துவர்கள் இருக்காங்க. கைவிடப்படுற விலங்குகளைக் காப்பாற்ற ரொம்பவே கொஞ்சம் பேர்தான் இருக்காங்க. நான் என்னை அதுக்காகவே அர்ப்பணிச்சுக்க விரும்பினேன். வீட்ல இப்போ என்னை நம்பினாங்க.
காயம்பட்ட விலங்குகள், கால்நடைகள்னு நிறைய சேரத் தொடங்குச்சு. வீட்டைச் சுற்றிலும் இடம் ஒதுக்கி எல்லா விலங்குகளையும் வச்சு பராமரிச்சேன். கூட இருந்த நண்பர்கள், இதையெல்லாம் காலம் முழுவதும் வச்சுக் காப்பாத்தணும்னா ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கணும்னு சொன்னாங்க. அந்த தருணத்துல சொத்து பாகப் பிரிவினை நடந்துச்சு. என் பங்கா 92 லட்ச ரூபாயும், நகைகளும், நிலங்களும் கிடைச்சுச்சு. அதையெல்லாம் வச்சு டிரஸ்ட் ஆரம்பிச்சேன். சங்கர்தேவ், பத்மநாபன்னு சில நண்பர்கள் உறுதுணையா நின்னாங்க. முதல்ல மயிலாப்பூர்ல ஒரு கோசாலை ஆரம்பிச்சேன்.
என்னோட செயல்பாட்டைக் கவனிச்ச என் அண்ணன்கள் வி.எஸ்.ராவ், சி.டி.ராவ் ரெண்டு பேரும் அவங்களுக்கு பாகப் பிரிவினையில கிடைச்ச தலா 92 லட்சத்தையும் எனக்கே கொடுத்தாங்க. 1982ல 92 லட்சம்ங்கிறது எவ்வளவு பெரிய தொகைன்னு யோசிச்சா மலைப்பா இருக்கு. அதுக்குப் பிறகு மந்தைவெளி, நீலாங்கரைன்னு வாய்ப்புக் கிடைச்ச இடங்கள்ல விலங்குகள் இல்லம் அமைச்சேன். திருவள்ளூர் பக்கத்துல வெங்கடாபுரம்ங்கிற கிராமத்துல விரிவா கொஞ்சம் நிலம் கிடைச்சுச்சு. அங்கே நான் விரும்பின மாதிரி ஒரு கோசாலையை உருவாக்குனேன். இப்போ 1300 மாடுங்க இருக்கு. ஆயிரத்துக்கு மேல கோழிங்க இருக்கு. 165 வாத்துகள் இருக்கு. நாய்கள், பூனைகளும் நிறைய இருக்கு. என் உலகம்... என் வாழ்க்கை எல்லாமே இவங்கதான். வாரத்துல மூணு நாள் நீலாங்கரையில தங்குவேன். நாலு நாள் வெங்கடாபுரத்துல தங்குவேன். இங்கே இருக்கிற ஒவ்வொரு விலங்கோடவும் எனக்கு தனிப்பட்ட புரிதல் இருக்கு.
விலங்குகள் அன்புக்கு ஏங்கக்கூடியவை. எந்த சூழல்லயும் மத்தவங்களுக்கு துன்பம் விளைவிக்க நினைக்காது. மத்தவங்களை அடிமைப்படுத்தத் துடிக்காது. அன்பு, நன்றி, கருணை, கனிவுதான் விலங்குகளோட பண்பு. இதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். என் வாழ்க்கை ரொம்பவே எளிமையானது. எனக்கான சமையல் உள்பட எல்லாத்தையும் நானே பாத்துக்குவேன். என் பிள்ளைகளைப் பராமரிக்க 50 பேர் வேலை செய்யிறாங்க. அவங்களுக்கு சம்பளம் மட்டுமே ஒன்றரை லட்சம் வருது. சிரமத்தோடதான் இதை நகர்த்திக்கிட்டு இருக்கேன். இப்போ எனக்கிருக்கிற ஒரே கவலை, எனக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளை கவனிச்சுக்க ஒருத்தர் வேணும்ங்கிறதுதான். இறைவன் அனுப்பி வைக்கப் போற அந்த நபருக்காக காத்துக்கிட்டிருக்கேன்...’’ - காலைச் சுற்றும் கன்றை தாய்மை ததும்ப வருடியபடியே சொல்கிறார் சாதனா.
விலங்குகள் அன்புக்கு ஏங்கக்கூடியவை. எந்த சூழல்லயும் மத்தவங்களுக்கு துன்பம் விளைவிக்க நினைக்காது. மத்தவங்களை அடிமைப்படுத்தத் துடிக்காது.
- வெ.நீலகண்டன் படங்கள்: நாகராஜ்
|