ஆஸ்கர் போராளி!
ஆறாவது முயற்சியில் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டார் லியனார்டோ டிகாப்ரியோ. ‘டைட்டானிக்’ சாக்லெட் லவ்வர் பாய் இப்போது ‘தி ரெவனென்ட்’ படத்தில் வேறு உச்சம் தொட்டு, சிறந்த நடிகர் விருது வென்றிருக்கிறார். வட அமெரிக்காவின் மிசௌரி நதியை ஒட்டிய பனிப் பிரதேசத்தில் 1833ம் ஆண்டில் நிகழ்ந்த நிஜ சம்பவமே இந்தப் படம். பனிக்காடுகளில் விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் முடியை கம்பளத்துக்காக எடுப்பது அப்போது தொழில். இப்படிப் போன ஹக் கிளாஸ் என்பவரை கரடி கொடூரமாகத் தாக்க, உடன் சென்றவர்கள் அவரை ஆபத்தில் விட்டுவிட்டு ஓடுகிறார்கள். அந்தப் பாத்திரத்தில் டிகாப்ரியோ நடித்திருக்கிறார். மரணத்தின் விளிம்பில் தனிமைப் பனிக்காட்டில் நடக்கவே முடியாமல் தவழ்ந்தபடி 200 மைல் கடந்துவந்து, தன்னை தவிக்கவிட்ட துரோகிகளை பழி வாங்கும் கதை. ஒரு பெரிய ஹீரோ விருது வாங்கும்போது டிரெண்டிங் கலக்கும். டிகாப்ரியோ விருது வாங்கிய கணத்தில், ட்விட்டரில் ஒரு நிமிடத்துக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ட்வீட்டுகள் பறந்தன. உலகம் முழுக்க மூன்றரை கோடிப் பேர் பார்த்துக்கொண்டிருந்த லைவ் டி.வி. ஷோவை அக்கறையான ஒரு விஷயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் டிகாப்ரியோ.
‘‘இந்தப் படம் இந்த உலகில் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வெளிப்படுத்துகிறது. பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டான 2015ல் படத்தை வெளியிட்டோம். பூமியின் சூழல் மாறுகிறது. நம் கண்ணெதிரே பூமி சூடாகிறது. ஒட்டுமொத்த மனித இனமும் சந்திக்கும் அச்சுறுத்தல் இது. தாமதிக்காமல் நாம் உடனே ஏதாவது செய்தாக வேண்டும். உலகைக் குப்பைகளால் நிறைக்கும் பெரிய நிறுவனங்களுக்காகப் பேசாமல், மனிதம் பேசும் தலைவர்களின் ஆதரவு நமக்குத் தேவை. பழங்குடி மக்களும், கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களும் இதில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளின் பேராசையால் அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. நம் குழந்தைகளின் குழந்தைகளுக்காக இந்த நிலையை மாற்ற வேண்டும்’’ என்றார் டிகாப்ரியோ. சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்காக தன் அறக்கட்டளை மூலம் 101 கோடி ரூபாய் வழங்கியுள்ள டிகாப்ரியோ, கடந்த ஜனவரியில் நடந்த டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டிலும் அரசியல் பேசினார். ‘‘நிலக்கரி, எண்ணெய், எரிவாயு எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையே மனித இனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக மாறிவிடக் கூடாது. சுற்றுச்சூழல் சீர்கெட இவர்களே காரணம். வரலாறு எல்லா ஆதாரங்களையும் இவர்களின் காலடியில் கொண்டுவந்து கொட்டும்’’ என கொதித்தார் அப்போது! நம்ம ஊரில்தான் நடிகர்கள் அரசியல் பேசினால், வீட்டில் பவர்கட் செய்கிறார்கள்.
- அகஸ்டஸ்
|