மெதுவா...



நல்லதுக்குக் காலமில்லைப்பா!’’ - நண்பன் விஜயனிடம் விரக்தியாகப் பேசினார் நாகேந்திரன்.
‘‘என்ன விஷயம்?’’
‘‘தெரிஞ்சவர் ஒருத்தருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கை மாத்து கொடுத்தேன். வீட்ல சும்மா இருக்குற பணம் அவரோட வியாபாரத்துக்கு உதவட்டும்னு ஒரு நல்ல எண்ணத்துல ‘மெதுவா திருப்பிக் கொடுத்தா போதும்’னு சொன்னேன். அவர் அதையே சாக்கா வச்சிக்கிட்டு, ‘நீங்கதான் மெதுவா கொடுத்தா போதும்னு சொன்னீங்களே’னு தட்டிக் கழிச்சிக்கிட்டே இருக்கார். அதுக்கு வட்டி கிட்டி ஏதுமில்லை. திருப்பித் தருவாரா, மாட்டாரான்னு பயமா இருக்கு! ‘கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேளுங்க’னு எங்க வீட்ல நச்சரிக்கிறாங்க!’’ - புலம்பினார் நாகேந்திரன்.



‘‘இப்படித்தாம்பா, ‘மெதுவா கொடுங்க’னு நாம யதார்த்தமா சொல்றதை சிலர் தவறா பயன்படுத்திக்கிறாங்க. இதுக்கு ஒரு ஐடியா சொல்றேன்...’’ எனக் காதைக் கடித்தார் விஜயன். அவருடைய யோசனையின்படி பணம் வாங்கிய நண்பரிடம், ‘‘சார், உங்களுக்கு பணம் கொடுத்து ரொம்ப நாளாச்சு. எனக்கு இப்ப பணம் தேவைப்படுது. நான் சொன்ன மாதிரி மெதுவாவே கொடுங்க. அதுவரைக்கும் என் தேவைக்கு வெளியில வட்டிக்கு கடன் வாங்கப்போகிறேன். அந்த வட்டியை மட்டும் நீங்க மாசா மாசம் கரெக்டா கொடுத்துடுங்க’’ என்றார் நாகேந்திரன். எண்ணி பத்தாவது நாளே கொடுத்த பணம் திரும்பி வந்துவிட்டது.                

சி.ஸ்ரீரங்கம்