முதுவேனிற்காலம்



அடர்ந்த இரவைப் போர்த்திக்கொண்டு
பறவைகள் உறங்கிக் கிடந்த
அதுவொரு முதுேவனிற்காலம்
தன்னை நகர்த்திக் காட்டும்
கடிகாரச் சத்தத்தினும்
மெல்லிதாய் நிகழ்ந்தது
ஆரவாரிக்கும் சொற்களை அறிந்திராத உன் வருகை.
ஆயிரம் கரங்களை ஏந்திச் சுடர்விடும்
செஞ்சூரியனைப் போல் எனதருகில் வந்து
நீர்சுரக்கும் பாட்டிசைத்தாய்
நிலம் கமழும் யாழிசைத்தாய்
யாருமற்ற இப்பூவுலகில்
தேசாதி தேசமெல்லாம்
தனித்தலையும் உயிர்களாகி
நான் உன்னையும் நீ என்னையுமாய்
சரண் புகுகின்றோம்.
பசித்த பள்ளத்தாக்கில்
அசையாத ஓருயிராய்க் கிடக்கும் என்னை
வருடும் மூச்சுக்காற்று
பூனைமயிர்களைக் கூச்சிடுகிறது
கிழக்கிலிருந்த பறவைகள்
மேற்கு நோக்கி சடசடத்துச்
சரேலெனப் பறந்தன
சப்தம் கொலைவாளெனப் பாய்கையில்
விழி திறக்கின்றேன்
நின்னைக் காணோம்
யானோ
மதம்கொண்ட காட்டானையைப் போல்
கறுத்துத் திரண்டிருக்கும் பலிபீடத்தில்
கழுத்தை நீட்டியபடி காத்திருக்கிறேன்
ஒரு மீட்பனைப் போல் வந்து மறைந்த
உனது அறைக்குள்ளும்
பறந்து கொண்டிருக்கலாம்
எனது மயிர்க்கற்றைகள்



-உமாதேவி