முகங்களின் தேசம்
ஜெயமோகன் - 9 ஓவியம்: ராஜா
நட்பின் மணம் பயணங்களில் ‘திகில்’ எப்போதும் இருந்தாக வேண்டிய அம்சம். எங்கள் பயணங்களில் அது எப்போதும் இருக்கும். காரணம், நாங்கள் செல்லுமிடங்கள் அறியப்படாதவை. பதிவு செய்யப்படாத வழிகள் கொண்டவை. அத்துடன், எங்களுக்கு இந்தி பெரும்பாலும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு கணமும் திகிலாக இருந்தது, 2014 ஆகஸ்ட் மாதம் நாங்கள் மேற்கொண்ட காஷ்மீர் பயணம்தான். காஷ்மீரின் நிலக்காட்சிகளை, மக்களை, பண்பாட்டை பார்ப்பதுதான் நோக்கம். அதற்குச் சரியான வழி என்பது, சுற்றுலாத் தலங்களைத் தவிர்ப்பதுதான். ஏனென்றால், அவை சுற்றுலாப் பயணிகளுக்காக சமைத்துப் பரிமாறப்பட்டவை. அங்கே உள்ளூர் வாழ்க்கை என ஏதுமிருக்காது. எல்லா சுற்றுலாத் தலங்களும் ஒரே போலத்தான் இருக்கும். எல்லா இடங்களிலும் அரைப் பணக்காரர்கள் எதையாவது தின்றுகொண்டும், குதிரைகளில் ஏறிக்கொண்டும், செயற்கையாகச் சிரித்தபடி சுய படம் எடுத்துக்கொண்டும் இருப்பார்கள்.
ஆகவே நாங்கள் வழக்கம் போல தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்ட வரலாற்றுத் தலங்களைப் பார்க்கத் திட்டமிட்டோம். காஷ்மீரில் உள்ள தொல்லியல் இடங்கள், இடிபட்ட ஆலயங்களும் பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த நடுகற்களும்தான். அவற்றைத் தேடித் தேடிச் சென்று பார்ப்பதற்கு ஒரு பயண வரைபடம் தயாரித்தோம். அது, பல அறியாத உள்ளூர் வழிகளுக்கு எங்களைக் கொண்டு சேர்க்கும். மக்களுடன் உரையாடச் செய்யும். செல்வதற்கு ஓர் இலக்கு இருப்பது எப்போதும் அவசியம். காஷ்மீரின் அரசியலை இந்தியாவின் பிற பகுதியினர் மிகமிகக் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையினர் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக ஆக விரும்புகிறார்கள்’ என்றும், அங்கு ‘இந்திய ராணுவம் அவர்களை ஒடுக்கி வருகிறது’ என்றும், இங்குள்ள பிரிவினை பேசும் தமிழ்த் தேசியவாதிகளும் இஸ்லாமியத் தீவிர நோக்குள்ளவர்களும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் அதுதான் பரவலாக மற்றவர்களாலும் நம்பப்படுகிறது. ஏனென்றால், காஷ்மீருக்குச் சென்று எழுதிய இதழாளர்களே இங்கே இல்லை. காஷ்மீருக்குச் சென்றதாகச் சொன்ன ஓரிரு இதழாளர்கள்கூட ஸ்ரீநகரில் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்று வந்தவர்கள்தான். சொல்லப் போனால் பலர் அங்குள்ள பிரிவினைவாத இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சென்று, அவர்களின் கருத்துக்களை மட்டுமே கேட்டு வந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீரின் உள்பகுதிகள் அனைத்துக்கும் சென்று, எல்லைகளை எல்லாம் பார்த்துவிட்டு வந்த ஒரே குழு நாங்கள்தான். பாரமுல்லா, அனந்தநாக் போன்ற உச்சகட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளுக்குக் கூட நாங்கள் சென்றோம். கலவரங்களை நேரில் பார்த்தோம். அதற்குக் காரணம், நாங்கள் அறியப்படாத யாரோவாகச் சென்றதுதான். அத்துடன் கொஞ்சம் அசட்டுத் துணிச்சலும் துணை நின்றது. காஷ்மீர் மாநிலம் என்பது உண்மையில் மூன்று பகுதிகள் கொண்டது. ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் சமவெளி. ஜம்மு இந்துப் பெரும்பான்மை கொண்டது, பாரதிய ஜனதாவின் கோட்டை. லடாக் பௌத்த பாரம்பரியமும் பெரும்பான்மையும் கொண்டது. காஷ்மீர் சமவெளியில் மட்டுமே உண்மையில் பிரிவினை நோக்கு கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களிலும் ஷியாக்கள் இந்திய ஆதரவாளர்கள், காங்கிரஸ்காரர்கள். சன்னிகள் மட்டுமே பிரிவினை கோருபவர்கள்.
அவர்களிலும் எல்லைப்புறத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் மட்டுமே தீவிர நிலைப்பாடு கொண்டவர்கள். மற்றவர்கள் அமைதியான வாழ்க்கைக்கு ஏங்கும் எளிய வணிகர்கள். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் காஷ்மீர் இஸ்லாமியர் எங்களை அன்புடன் வரவேற்று, ‘‘இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நீங்கள் உங்களூரில் சென்று சொல்லவேண்டும்’’ என்றே கோரினார்கள். கல் வீசித் தாக்கும் பாகிஸ்தானிய ஆதரவாளர்களை ‘பத்மாஷ்’ என்றே பெண்கள் சொல்வதைக் கேட்டோம். காஷ்மீர் குறித்து நம் ஊடகங்கள் மிகமிகத் தவறான செய்திகளையே சொல்கின்றன என்பதை நேரில் உணர்ந்தோம். நம் ஊடகவாதிகள் எவரும் காஷ்மீருக்குச் செல்வதில்லை. அங்குள்ள உள்ளூர் நிருபர்களையே நம்பியிருக்கிறார்கள். நிருபர்களோ, தீவிரவாதிகளை அஞ்சிக்கொண்டிருப்பவர்கள்.
காஷ்மீர் ஒரு காலத்தில் பிற இந்திய நிலப்பகுதிகளைப் போல இந்துப் பண்பாடு வளர்ந்து உச்சத்தை அடைந்த இடமாகவே இருந்தது. மாபெரும் கலைப் பொக்கிஷங்களாகிய ஆலயங்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. காஷ்மீரின் அவந்திபுரா ஆலய இடிபாடுகளும் மார்த்தாண்ட் ஆலய இடிபாடுகளும் அங்கு இருந்த மாபெரும் ஆலயங்களைக் காட்டுகின்றன. காஷ்மீரின் தொன்மையான இஸ்லாமிய வரலாற்று நூலான ‘பஹரிஸ்தான் இ ஷாகி’, காஷ்மீரின் ஆலயங்கள் இடிக்கப்பட்ட சித்திரத்தை அளிக்கிறது. பாரசீக நாட்டு சூஃபியான மீர் முகமது ஹமதானி என்பவர் தன் ஆயிரம் மாணாக்கர்களுடன் பதினான்காம் நூற்றாண்டில் காஷ்மீருக்கு வந்தார். அவர் அன்றைய காஷ்மீர் சுல்தானாகிய சிக்கந்தர் புட்சிகான் (1389-1413) என்பவரை தன் மாணவராக்கினார். அந்நாட்டில் ஒரு மாற்று மத வழிபாட்டு நிலையம்கூட இருக்கக் கூடாது என்று அவர் ஆலோசனை சொன்னார்.
‘சுல்தான் இரண்டாயிரம் ஆலயங்களை ஐந்து வருடங்களில் இடித்துத் தரைமட்டமாக்கினார்’ என்கிறது பஹரிஸ்தான் இ ஷாகி. அவரது வரலாற்றை அவரது அவைக் கவிஞரே எழுதிய நூல் இது. அதனால் வரலாற்றில் அவர் ‘சிலையுடைப்பாளராகிய சிக்கந்தர்’ என அழைக்கப்படுகிறார். காஷ்மீரில் இன்று ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ அரண்களுக்குள் மட்டுமே இந்து, பௌத்த, சமண, கிறிஸ்தவ வழிபாட்டு நிலையங்கள் செயல்பட முடிகிறது. அனைத்துக்கும் தொடர்ச்சியான மிரட்டல்கள் உள்ளன. அவ்வப்போது கல்லெறிதல் நிகழ்ச்சிகளும் உள்ளன. பல இடிந்த ஆலயங்களுக்குச் செல்வதே மிக அபாயகரமானதாக காவலர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் நாங்கள் தேடித் தேடிச் சென்றோம். எங்கள் ஓட்டுநர் ஒரு ஷியா முஸ்லிம். அந்த ஊரை நன்கு அறிந்தவர். அவரில்லாமல் அப்பகுதியில் பயணம் செய்ய முடியாது. கூடுமானவரை ஷியா முஸ்லிம்களின் ஊர்கள் வழியாகவே அழைத்துச் சென்றார். தேவையானபோது, நட்புச் சூழல் கொண்ட சன்னிகளின் கிராமங்களுக்குள் நுழைந்து, அந்த ஊர்ப் பெரியவர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அழைத்துச் சென்றார். எங்கள் பட்டியல்படி, பாரமுல்லா அருகே உள்ள இடிக்கப்பட்ட பழமையான ஆலயத்தைப் பார்க்கச் சென்றோம். அது முக்கியமான காஷ்மீர சைவ ஆலயம். காஷ்மீர்தான் சைவ மதத்தின் பிறப்பிடம். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிநவகுப்தர் என்பவர்தான் அதன் பெரும் ஞானி. ‘சிவோகம்’ என்னும் முழக்கம் அதற்குரியது. ‘சிவமே நான்’ என்று பொருள். சிவனுடன் ஒன்றாவதை ‘முக்தி’ என கற்பிப்பது அது.
நாங்கள் முந்தைய கோயிலில் பார்த்த சீக்கிய குருவான கியானிதான் அந்த ஆலயத்தைப் பற்றி எங்களிடம் சொன்னவர்.. பாரமுல்லா அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஊர். ஆனால் மிகச் சிறியது. குறுகிய சாலைகளின் வழியாகப் பயணித்தோம். ஆனால் பெரும்பாலான கட்டிடங்கள் பார்க்க பெரிதாகத்தான் இருந்தன. சன்னிகளே பெரும்பான்மையாக வாழும் ஊர். பதற்றமான இடம். சாலையெல்லாம் ராணுவ வண்டிகள், சோதனைச்சாவடிகள். ஒட்டுமொத்தச் சூழலும் வளத்தையும் வசதியையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. சாலையோர விடுதியில் இருந்த இரு முதியவர்களிடம் பஷீர் பேசினார். ஒரு கடையில் இருந்த முதியவர் ஆலயத்தை தானே வந்து காட்டுவதாக முன்வந்தார். அவர் பெயர் கிலானி. எண்பது வயது இருக்கலாம், ஆனால் இளைஞரைப் போல தாவி முன்நடந்து வழிகாட்டி அழைத்துச்சென்றார். அழகான மனிதர். தொப்பையோ, கூனலோ இல்லை. ஹூக்கா பிடித்து கறையேறிய பற்கள். நீண்ட வெண்ணிற தாடி. குளிரில் சுருங்கிய வெண் சருமம், நனைந்த பாலிதீன் தாள் போலிருந்தது. சிறிய பழுப்பு நிறமான கண்கள், முகத்தில் உறைந்த இனிய நட்பார்ந்த புன்னகை. உற்சாகமாக கையசைத்து பேசிக்கொண்டே வந்தார். அவர் பேசுவது என்ன என்று புரியவில்லை.
‘‘அவர், நாங்கள் கன்னியாகுமரியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்து உற்சாகம் கொள்கிறார்’’ என்று பஷீர் எங்களிடம் சொன்னார். காஷ்மீர் - கன்னியாகுமரி என்ற சொல்லாட்சியை எல்லாரும் அறிந்திருந்தார்கள். ஆனால் கிலானி உற்சாகம் கொண்டது, நாங்கள் கடலில் இருந்து வருகிறோம் என்று நினைத்துக்கொண்டதனால். ‘கடல்’ என்ற சொல்லே காஷ்மீரில் மிகப் பெரிய கிளர்ச்சியையும் கனவையும் உருவாக்கக்கூடியது. கடலைப் பார்ப்பது அவர்களின் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று. பாரமுல்லாவின் சிவன் கோயில் பெரியதோர் ஆலயமாக இருந்திருக்க வேண்டும். முற்றிலும் இடிந்து சிதைந்த கற்குவியலே எஞ்சியிருந்தது. பதினான்காம் நூற்றாண்டில் சிக்கந்தரால் இடிக்கப்பட்ட ஆலயத்தின் கற்களைக் குவித்து, சிறிய ஆலயம் ஒன்றை பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுப்பியிருக்கிறார்கள். அந்த ஆலயம் 1996ல் தீவிரவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அங்கிருந்த பண்டிட் வெளியேற்றப்பட்டார். இப்போது கற்குவியல்களுக்கு இடையே இரண்டு சிவ லிங்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
அந்த ஆலயத்தை தானே முன்னர் பார்த்திருப்பதாக முதியவர் சொன்னார். இப்பகுதி முழுவதும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்ததாகவும், இப்போது பத்து வருடங்களுக்கு மேலாக ஆலயங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார். ‘‘இடித்துவிட்டார்கள். குண்டு வைத்து இடித்தார்கள்’’ என்றபடி பெருமூச்சுடன் அதைச் சுற்றி வந்தார். அவரது தனிமையும் துயரமும் ஆச்சரியமூட்டுவனவாக இருந்தன. ‘‘எங்கள் தந்தையார் இக்கோயிலுக்குக் காணிக்கை கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார். அருகிருந்த ஆப்பிள் தோட்டம் கிலானியுடையது. அங்கே சென்று பச்சை ஆப்பிள்களை அவரே பறித்துத் தந்தார். காஷ்மீர் ஆப்பிள் மட்டுமே பச்சையாக சாப்பிடத் தகுந்தது. ஆப்பிள் காய், புளிப்பு குறைவான மாங்காய் போல் இருக்கும் என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். கொஞ்சம் உப்பிருந்தால் இரண்டு ஆப்பிள்கூட சாப்பிட முடியும் என்று தோன்றியது. தின்றபடியே மீண்டும் சாலைக்கு வந்தோம். முதியவருக்கு நன்றி சொன்னோம். அங்கிருந்து ஃபதேகர் ஆலயத்துக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். முதியவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொன்னதால், அவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டோம். அப்பகுதியில் பொதுப்போக்குவரத்து அனேகமாக இல்லை. ஆகவே கார்களில் புதியவர்கள் ஏறிக்கொள்வது மிகச் சாதாரணம்.
ஃபதேகர் ஆலயம், காஷ்மீரின் பிற ஆலயங்கள் அளவுக்கே பிரமாண்டமானது. இரண்டு துணைக் கோயில்களும், சுற்றுப் பிராகாரங்களும், பிரமாண்டமான மைய கோபுரமும் கொண்டது. இன்று மைய கோபுரம் மட்டுமே எஞ்சியுள்ளது, பிற அனைத்து கட்டுமானங்களும் இடிபாடுகளாக சிதறிக் கிடக்கின்றன. மையக்கோயில் அடித்தளமும், சுவர்களும் மட்டுமே கொண்டது. கற்குவியல்கள் உள்ளே விழுந்து கிடக்கின்றன. ஃபதேகர் ஆலயத்தின் ஊழியர் ஒரு திருமணத்திற்காக வெளியே சென்றிருப்பதால் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். கம்பி வேலி வழியாகச் சுற்றி வந்து கோயிலைக் கண்டோம். உள்ளே ஏராளமான இளைஞர்கள் படுத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது. ஆனால் அவர்கள் எவரும் ஆலயத்தை அவமதிப்பதாகவோ, இழிவுபடுத்துவதாகவோ தெரியவில்லை. ஊரின் நடுவில் அமைந்திருந்தாலும் ஆலயமும் அதன் வளாகமும் மிகத்தூய்மையாகவே இருந்தது.
காஷ்மீரில் நாங்கள் சந்திக்க நேர்ந்த அத்தனை முகங்களும் அன்பையும் நட்பையும் மட்டுமே காட்டுவதாக இருந்தன. ‘காஷ்மீர் பிரச்னையின் கண் மையம்’ என்று சொல்லப்படும் பகுதி பாரமுல்லா. ஆனால் நாங்கள் சந்தித்த அத்தனை மனிதர்களும் நட்பு கனிந்த புன்னகையையே எங்களுக்கு அளித்தார்கள். திரும்பத் திரும்ப ஒவ்வொருவரும் எங்களுக்கு வழிகாட்டவும், உதவவும் முன்வந்தார்கள். ஆச்சரியமான உண்மை இது. காஷ்மீரி மக்கள் எவரும் எந்த ஆலயத்தின் மேலும், எந்த வழிபாட்டின் மேலும் கசப்பு கொண்டிருக்கவில்லை என்பதை கவனித்தேன். ஆலயங்களுக்கு வழிகாட்டிச் செல்ல அனைவருமே முன்வந்தார்கள், நாங்கள் வழி கேட்ட எவருமே முகம் சுளிக்கவில்லை. தங்கள் ஊருக்கு ஒருவர் வந்து ஆலயங்களை நோக்குவதை பெருமையாகவே எண்ணினார்கள். ஒருவகையில் இதுவே இஸ்லாமின் உண்மையான முகம் என்று தோன்றியது. கருணையின் வழி மீட்பு என்பது கிறித்துவத்தின் சாரமென்றால், நட்பு வழியாக மீட்பு என்பதே இஸ்லாமின் சாரம். மதத் தலைமையின் குறுகிய போக்கினாலும், மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தும் ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளாலும் சிதைக்கப்படாமல் இருக்கையில், இஸ்லாம் நட்பின் வழியாகவே நம்மை வந்தடைகிறது. ஒவ்வொரு நாளும் அன்றைய அனுபவங்களை இணையம் வழியாகப் பதிவுசெய்துகொண்டிருந்தேன். 2014 ஏப்ரல் ஒன்பதாம் தேதி எழுதப்பட்ட குறிப்பை வாசித்தேன். ‘அப்படியென்றால் வரலாற்றில் நேற்றும் இன்றும் கசப்புகளையும் வன்முறையையும் உருவாக்குவது யார்? மதத்தை அதிகாரமாக ஆக்க விரும்புபவர்கள். நேற்று சுல்தான்களும் மதகுருக்களும் என்றால் இன்று அரசியல்வாதிகள்’! கிலானி அவரைப் புகைப்படம் எடுப்பதை மறுத்துவிட்டார். ஆனால் அவரை அருகே என பார்க்க முடிகிறது. அவரது அழகிய முகம் எனக்கு அளித்த செய்தி ஒன்றே, இஸ்லாம் எனும் நட்பு! காஷ்மீர் ஒரு காலத்தில் பிற இந்திய நிலப்பகுதிகளைப் போல இந்துப் பண்பாடு வளர்ந்து உச்சத்தை அடைந்த இடமாகவே இருந்தது. மாபெரும் கலைப் பொக்கிஷங்களாகிய ஆலயங்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன.
காஷ்மீரி மக்கள் எவரும் எந்த ஆலயத்தின் மேலும், எந்த வழிபாட்டின் மேலும் கசப்பு கொண்டிருக்கவில்லை. ஆலயங்களுக்கு வழிகாட்டிச் செல்ல அனைவருமே முன்வந்தார்கள், கருணையின் வழி மீட்பு என்பது கிறித்துவத்தின் சாரமென்றால், நட்பு வழியாக மீட்பு என்பதே இஸ்லாமின் சாரம்.
(தரிசிக்கலாம்...)
|