நம்பிக்கை
முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான்.
‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியாமலோ, ரோல் மாடல் ஆயிடறார்... உனக்கு நானும், மேனேஜர் அவர் மகனுக்கும் ரோல் மாடல் ஆகறது நல்ல விஷயம். மூட்டை தூக்கறவன் தன் மகனுக்கு ரோல் மாடல் ஆகறது அப்படி இல்லை... நம்மகிட்ட இருக்கிறவங்க எதிர்காலம் நல்லா இருக்கணுமில்லையா!’’ என்றார் முருகேசன். ‘‘அதை அப்படிப் பார்க்காதீங்கப்பா! அப்பா மூட்டை தூக்கித்தான் தன்னைப் படிக்க வைக்கிறார் அப்படிங்கற உணர்வு அந்தப் பையனை நிச்சயமா உயர்ந்த நிலைக்கு ஆளாக்கும் இல்லையா?’’ என்ற மகனின் நம்பிக்கையில் உயிர் இருப்பதாக உணர்ந்தார் முருகேசன்.
வீ.விஷ்ணுகுமார்
|