நன்றி
சுந்தரத்துக்கு நல்ல பசி. காரை விட்டு இறங்கியதுமே, ‘சாந்தி பவன் உயர்தர உணவகம்’ என்ற போர்டைப் பார்த்ததும் ஆறுதலாய் இருந்தது. பசி தீர சாப்பிட்டான். சாப்பாடு மிகவும் அருமை. வீட்டில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு. பல ஊர்களில் ஹோட்டலில் சாப்பிட்டவன் என்பதால், இது வயிற்றைக் கெடுக்காத இயல்பான ருசியுள்ள உணவு என்பது அவனுக்கு புரிந்தது. சர்வரைக் கூப்பிட்டான். ‘‘இங்க சாப்பாடு தயார் பண்ற சமையல்காரர் யாரு? அவரோட பேசணும்!’’ ‘‘ஏன் சார்?’’
‘‘சாப்பாடு ரொம்பப் பிரமாதம். அவரைப் பாராட்டணும்!’’ ‘‘வழக்கமா சமைக்கிறவர் இன்னைக்கு திடீர்னு லீவு. அதனால இன்னிக்கு சமையல் நான்தான் சார்!’’ ‘‘சாப்பாடு ரொம்ப பிரமாதம். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் தேவை. நல்ல சம்பளம் கொடுப்போம். தங்கறதுக்கு இடம், சாப்பாடு, தீபாவளிக்கு போனஸ் எல்லாம் உண்டு. வர்றீங்களா?’’ ‘‘மன்னிக்கணும் சார். ஒரு காலத்துல பிழைப்புக்கு வழியில்லாம தற்கொலை செய்ய முயற்சித்த நேரத்துல எனக்கு வேலை கொடுத்து, உயிரைக் காப்பாற்றினவர் இந்த ஓட்டல் முதலாளி. நீங்க தர்ற வசதிக்காக உங்களோட வந்துட்டா அவருக்கு நான் துரோகம் செய்தவனாவும் நன்றி கெட்டவனாவும் ஆகிடுவேன். உங்க அழைப்புக்கு நன்றி!’’ ‘இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு எஜமான விசுவாசமா?’ - எண்ணி வியந்தபடியே கிளம்பினான் சுந்தரம்.
வி.ந.ஸ்ரீதரன்
|