நம்ம ஊர் கோஹினூர்!



அடிமைப்படுத்திய தேசங்களிலிருந்து கவர்ந்து சென்ற கலைப் பொக்கிஷங்களை வல்லரசுகள் திருப்பித் தரும் சீஸன் இது. இப்படி ‘‘கோஹினூர் வைரத்தை பிரிட்டன் இந்தியாவிடம் திருப்பித் தர வேண்டும்’’ என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் சொன்னதும் பிரதமர் மோடியே அதைப் பாராட்டியதும் வைரலாகியது. சமீபத்தில் கோஹினூர் வைரம் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தம் எனக் கிளம்பியிருக்கிறார் ஜாவித் இப்ராஹிம் ஜாஃபரி எனும் வழக்கறிஞர். பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும் இதைத் திரும்பப் பெறுவதற்காக இரண்டு தேசங்களிலிருந்தும் விரைவில் வழக்குகள் பாயக்கூடும். அதற்குமுன், கோஹினூர் பற்றி ஒரு ஃபிளாஷ்பேக் பார்வை!



1300

தற்போதைய தெலங்கானா மாநிலம் கொல்லூரில்தான் கோஹினூர் வைரத்தைக் கண்டெடுத்ததாக நம்பப்படுகிறது. ‘யார் கோஹினூர் வைரத்தை வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்த உலகை ஆளுவார்கள்’ என ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால், ‘இதனை கடவுளோ அல்லது பெண் ஒருவரோ அணிந்தால்தான் இதன் துரதிர்ஷ்ட விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியும்’ என்பதும் ஒரு நம்பிக்கை. இதனால்தான் காகதீய அரசர்கள் இந்த வைரத்தை வாராங்கல் பத்ரகாளியின் இடது கண்ணில் பொருத்தியிருந்தார்கள்.

1323

டெல்லி சுல்தானான துக்ளக்கின் படைகள் கோஹினூர் வைரத்தைக் கவர்ந்து சென்றன.

1526

அதன்பின் இது குவாலியர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. பானிபட் போரில் இப்ராகிம் லோடியை வீழ்த்தி முகலாயப் பேரரசை இந்தியாவில் உருவாக்கிய பாபருக்கு இதைப் பரிசாக அளித்தார் குவாலியர் மகாராஜா. ‘பாபர் நாமா’ இதைக்  குறிப்பிடுகிறது.

1628

முகலாய மன்னன் ஷாஜஹானின் மயில் அரியணையில் இருந்த இரு மயில்களில் ஒன்றின் கண்ணில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டது.

1739

பெர்ஷிய நாட்டைச் சேர்ந்த நாதிர் ஷா தனது படையுடன் வந்து  கோஹினூர் வைரம் உட்பட முகலாயர்களின் பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.

1747

கோஹினூரின் துரதிர்ஷ்டம் தாக்க, நாதிர் ஷா படுகொலை செய்யப்பட்டார். வைரமானது படைத்தளபதி அகமத் ஷா துரானியிடம் சென்றது.

1813

துரானியின் வழியில் வந்த ஷா சுஜா, தனக்கு ராணுவ உதவி செய்த சீக்கிய மன்னரான ரஞ்சித் சிங்கிற்கு கோஹினூரைப் பரிசாக வழங்கினார்.

1849-50

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படையிடம் பஞ்சாப் அரசு போரில் வீழ்ந்தது. குழந்தை இளவரசர் தலீப் சிங்கை கோஹினூர் வைரத்தோடு பிரிட்டனுக்கு அனுப்பி வைத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ராணி விக்டோரியாவிடம் வைரத்தை ஒப்படைக்க இளவரசர் தலீப் சிங் வற்புறுத்தப்பட்டார்.

1852

கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்திற்கு ஏற்ப, நீள்வட்ட வடிவில் வெட்டப்பட்டது. ராணி விக்டோரியா, ‘பெண் மட்டுமே இதனை அணிய வேண்டும்’ என்று ஆணையிட்டார்.

2012

இளவரசர் தலீப் சிங்கின் வாரிசுகள் கோஹினூருக்கு உரிமை கொண்டாடினர். கட்டாயப்படுத்தி வாங்கிய வைரத்தை பிரிட்டிஷ் மகாராணி திருப்பித் தர வேண்டும் எனக் கோரினர்.

2015

கோஹினூரை பிரிட்டன் திருடிவிட்டதாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் பிரிட்டன் இந்த வழக்குகளை நிராகரித்துவிட்டது.

2016

ஏப்ரலில், 90 வயதாகும் எலிசபெத் மகாராணி ஓய்வு பெறுகிறார். அதன்பின் கோஹினூர் பதித்த கிரீடத்தை யார் அணிவார்?

கோஹினூரைப் போலவே மதிப்பு மிக்க சில இந்திய வைரங்கள்...



டார்யா ஐ நூர்
கொல்லூர் வைரச்சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட பளபள பிங்க் நிற வைரம் இது. எடை 175 - 195 கேரட். ஷாஜஹானின் மயில் அரியணை மயிலின் ஒரு கண்ணாக கோஹினூர் இருக்க, இன்னொரு கண்ணாக இருந்தது! ஈரான் தலைநகரம் டெஹ்ரானிலுள்ள ஈரான் மத்திய வங்கியில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆர்லாவ்
ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தலை கிரீடத்தில் இருந்த இந்த வைரம், பிரெஞ்சு படை வீரர் ஒருவரால் திருடப்பட்டது. 189.60 கேரட் எடையுள்ள இந்த வைரத்தை, கிரிகரி ஆர்லாவ் என்ற பிரபு விலைக்கு வாங்கி, ரஷ்ய மகாராணி கேத்தரினுக்கு பரிசாக வழங்கினார்.

டிரெஸ்டென் பச்சை
பச்சை வைரமான இது, கோல்கொண்டா சுரங்கத்தில் கிடைத்தது. 1741ம் ஆண்டு போலந்து அரசரின் கைக்குச் சென்றது. இப்போது போலந்து அரச குடும்ப நகைக் காப்பகத்தில் உள்ளது.

ரீஜென்ட்
1701ம் ஆண்டு தெலங்கானாவின் கோல்கொண்டா சுரங்கத்தில் கிடைத்த 410 கேரட் எடை கொண்ட வைரம் இது. துரதிர்ஷ்டக் கல் என்று நம்பப்பட்டதால் பல கை மாறி பயணித்தது. 141 கேரட் எடை கொண்டதாக பட்டை தீட்டப்பட்டு மாவீரன் நெப்போலியனின் வாளில் பதிக்கப்பட்ட இது, தற்போது  பாரீசிலுள்ள லூவர் மியூசியத்தில் உள்ளது.

ஹோப்
112 கேரட் எடை கொண்ட இந்த நீல வைரம் இந்தியக் கோயில் ஒன்றிலிருந்து திருடப்பட்டது. இதை வாங்கிய 21 உரிமையாளர்களும் மர்மமான முறையில் இறந்து போயினர். இதில் பிரான்ஸ் மன்னர் 16ம் லூயியும் அடக்கம். இப்போது இது அமெரிக்காவில் உள்ள ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கருப்பு ஆர்லாவ்
‘பிரம்மாவின் கண்’ என கூறப்படும் இந்த 195 கேரட் எடை கொண்ட கறுப்பு வைரம், 19ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரி அருகிலிருந்த கடவுள் சிலை ஒன்றிலிருந்து திருடப்பட்டது. இது துரதிர்ஷ்டம் தரும் என்பதால், மூன்றாக உடைக்கப்பட்டு 67.5 கேரட் எடை கொண்டதாக மாற்றப்பட்டுவிட்டது.

- ச.அன்பரசு