பெரிய ஹீரோக்களுக்கு ரஜினியின் அட்வைஸ்!
நான் உங்கள் ரசிகன் - 24
மனோபாலா
‘ஊர்காவலன்’ கதை ஆர்.எம்.வீ. சாருக்குப் பிடிச்சுப் போச்சு. ‘‘இந்தக் கதையை ரஜினி சார்கிட்ட சொல்லணும். நாளைக்கு ரெடியா இருங்க’’னு ‘சத்யஜோதி’ தியாகராஜன் சொன்னார். எனக்கு உள்ளூர கொஞ்சம் உதறல். ஒரு மாஸ் ஹீரோவை சந்திச்சு கதை சொல்றது சாதாரண விஷயம் இல்லையே. ஆனா நான் எதையும் வெளிக் காட்டிக்காம ரஜினிகிட்ட கதையைச் சொன்னேன். கதையைக் கேட்ட ரஜினி ரொம்ப இம்ப்ரஸ் ஆகி, ‘‘உங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்’’னு கேட்டார். அப்பல்லாம் ஒரு படம்னா எழுபது நாள் கூட ஷூட்டிங் போயிருக்காங்க. பெரிய ஹீரோ படங்களுக்கு இப்படி தேவைப்படறதுண்டு. அதை மனசில வச்சு, ரஜினி அந்தக் கேள்வியைக் கேட்டார். ஆனா நான், ‘‘45ல இருந்து 50 நாட்கள்ல முடிச்சிடுவேன்’’னு சொன்னேன்.
மைசூர்ல படப்பிடிப்பு. சென்னையில இருந்து நாடக நடிகர்கள், காமெடியன்கள்னு முந்நூறு பேர்கள்கிட்ட மைசூருக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன். ஷூட்டிங் பிரேக்ல நாடக நடிகர்கள் ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு வச்சு, அடிக்கடி பேசிக்கிட்டே இருந்தார் ரஜினி. இடை இடையே நான் என்ன பண்றேன்னு என்னையும் கவனிச்சுக்கிட்டே இருந்தார்.
‘‘ரஜினி என்னை கவனிச்சுக்கிட்டே இருக்கார். எனக்கு எப்படி ரீயாக்ட் பண்ணணும்னு தெரியல’னு நான் ராதிகாகிட்ட சொன்னேன். ‘‘என்ன வோய்... கூச்சப்பட்டுக்கிட்டு? போய் பேசுவோய்ய்ய்ய். அவர் நல்லா ஃப்ரெண்ட் ஆகிடுவார்’’னு ராதிகா எனக்கு தைரியம் குடுக்க, அதன் பிறகுதான் ரஜினிகிட்ட ஃப்ரெண்ட்லியா பேச ஆரம்பிச்சேன். அவரைப் பாதிச்ச விஷயங்களைச் சொல்லுவார். நான் பார்த்த, கேட்ட விஷயங்கள், படிச்ச கதைகளை அவர்கிட்ட ஷேர் பண்ணிக்குவேன்.
அந்தப் படத்துல ஒரு ஜீப்பை ரஜினி கால்ல கட்டிக்கிட்டு நிற்கிற மாதிரி ஒரு சீன் வரும். ‘‘நீ பாரதிராஜாகிட்ட இருந்து வந்துட்டு... இப்படி ஒரு சீனை வச்சிருக்கியே’’னு என் நண்பர்கள் பலரும் அந்த சீனைச் சொல்லி கலாய்க்கிறதுண்டு. ஆனா ஒரிஜினலா ரஜினிகிட்ட ‘‘அந்த ஜீப்பை ஒரு மரத்துல கட்டிட்டு, நீங்க மரத்துல கொஞ்சம் சாஞ்சு நில்லுங்க’’னுதான் நான் சொன்னேன். ‘‘மனோ சார்... ஜீப்பை நான் கால்லயே கட்டிக்கிட்டு நிக்கிறேன். படம் ரிலீஸ் ஆனதும் தியேட்டர்ல போய்ப் பார்த்துட்டு வந்து என்கிட்ட சொல்லுங்க’’னு ரஜினி சொன்னார். ‘ஊர்காவலன்’ படத்தை மொத்தமே 46 நாள்ல முடிச்சோம். படம் ரீலீஸ் ஆனதும் முதல் நாள் தியேட்டர்ல போய்ப் பார்த்தேன். என் கூட லதா ரஜினிகாந்தும் வந்திருந்தார். ரஜினி ஜீப்பை கால்ல கட்டிக்கிட்டு நிக்கிற சீன் வந்ததும், அவரோட ரசிகர்கள் காசை அள்ளி ஸ்கிரீன்ல வீசி கொண்டாடுறாங்க. ஒரு சூப்பர் ஸ்டாரோட பவர் என்னன்னு எனக்கு அப்போதான் தெரிஞ்சது.
அதன் பிறகு சுரேஷ்கிருஷ்ணா, கே.எஸ்.ரவிகுமார்னு ரஜினியும் ஆக்ஷன்ல கலக்கினார். நானும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ‘குசேலன்’, ‘லிங்கா’னு ரெண்டு படங்கள்ல அவரோட நடிச்சேன். ‘லிங்கா’வில் நான் டிரெயின் டிரைவர். மைசூருக்குப் பக்கத்துல ஷூட்டிங். அந்த ஊருக்கு வர்ற கலெக்டரா ரஜினி நடிச்சார். நான் நடிச்சது சின்ன எபிசோட்தான். ஒரு மணி நேரத்துல என் போர்ஷன் முழுக்க எடுத்து முடிச்சிட்டு என்னை அனுப்பிச்சிருக்கலாம். ஆனா, கே.எஸ்.ரவிகுமாரும் ரஜினியும், ‘அடுத்த ரெண்டு நாளைக்கு நமக்கு என்டர்டெயின்மென்ட் மனோபாலாதான்... நிறைய விஷயங்களைப் பேச வேண்டியிருக்கு’னு முடிவு பண்ணியிருப்பாங்க போல. ரெண்டு நாள் என்னை இருக்க வச்சிட்டாங்க. அவங்களோட பேச அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது மறக்க முடியாத மொமன்ட். அந்த டைம்ல நான் தயாரிச்ச ‘சதுரங்க வேட்டை’ ரிலீஸ் ஆகியிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, முக்கால் மணி நேரம் என்கிட்ட பேசினார். நான் ஸ்பாட்ல நுழைஞ்சதுமே அங்கிருந்த ரஜினி, என்னை எழுந்து நின்னு வரவேற்றார். என்னை மட்டுமில்ல... பெரியவங்க... திறமையானவங்கனு யார் வந்தாலும் எழுந்து நின்னு அவர் வரவேற்பார்.
ஒரு சூப்பர் ஸ்டார்கிட்ட யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. ஆனா, ரஜினி எவ்வளவு உயரத்துக்குப் போயிருந்தாலும், மத்தவங்களுக்கு மதிப்பு குடுத்து வரவேற்கறதைத் தொடர்கிறார். இது இண்டஸ்ட்ரியில உள்ளவங்க கத்துக்க வேண்டியது. நாலைஞ்சு வருஷங்களுக்கு முன்னால ஒரு ஷூட்டிங்ல ரஜினிகிட்ட பேசிட்டிருந்தேன். அப்போ அவர், ‘‘இப்போ உள்ள நடிகர்கள் ஏன் ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்க மாட்டேங்கறாங்க?’’னு கேட்டார். ‘‘இப்போ பிஸினஸ் பெரிய அளவில் மாறிப்போச்சு. அதனால ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க!’’னு சொன்னேன். ‘‘இல்ல மனோபாலா, நானெல்லாம் ஒரு டைம்ல ஒரு வருஷத்தில் 18 படம் நடிச்சிருக்கேன். ஹீரோக்கள் வருஷத்துக்கு அஞ்சு படமாவது குடுக்கணும். இப்ப ஒரு ஹீரோ ஒரு படம் நடிச்சு முடிச்சு, அது ரிலீஸ் ஆன பிறகே அடுத்த படம் பண்றார். ஒரு வேளை அந்தப் படத்தோட ரிசல்ட் நெகட்டிவ்வா வந்தால் ஹீரோவுக்கு அது மிகப்பெரிய சுமையா ஆகிடும். உடனே அடுத்து ஹிட் குடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அந்த ஹீரோ தள்ளப்படுவார்.
அந்தக் கட்டாயம், பல சமயம் தப்பான முடிவுகளை எடுக்க வச்சிடும். ஆனா, ஒரே டைம்ல நாலைஞ்சு படங்கள் பண்ணினா, அதுல ரெண்டு சரியா போகலைனாலும் மிச்ச ரெண்டும் காப்பாத்திக் கொடுத்துடும். அவர் தப்பிச்சிடலாம். ரசிகர்களும் ‘நம்ம தலைவர் சரியாதான் நடிச்சுக் குடுத்தார். ஸ்கிரிப்ட் சரியில்லாததாலதான் படம் ஓடலை’னு நினைச்சுக்குவாங்க. ஸோ, ஒரே டைம்ல நிறைய படங்கள் பண்றதுதான் ஹீரோக்களோட கேரியருக்கு நல்லது!’’னு ரஜினி சொன்னது மறக்க முடியாத வார்த்தைகள். அவரே தொடர்ந்து பேசினார்... ‘‘ஒரு படத்தோட கதையைக் கேக்கறோம். இப்போ எல்லாம் ஸ்கிரிப்ட்டை புத்தகமா கூட குடுத்துப் படிக்கச் சொல்றாங்க. அதை முழுவதுமா படிச்சுட்டு நம்பிக்கையோட களத்துல இறங்கினா ஹீரோக்களுக்கு பாதுகாப்பு. ஈஸியா ஷூட்டிங்... டப்பிங் முடிச்சிடலாம். கவலையே இல்லாமல் அடுத்த படத்தின் மேல் கவனம் செலுத்த முடியும்!’’னு ரஜினி சொன்னார்.
இப்போ பாருங்க... ‘கபாலி’, ‘2.ஓ’னு ஒரே நேரத்தில் ரெண்டு படங்கள் பண்றார். அதுவும் ஷங்கரும் ரஞ்சித்தும் வேற வேற பரிமாணங்கள்ல படம் பண்றவங்க. அவங்க ரெண்டு பேர் எதிர்பார்ப்பையும் ஒரே நேரத்தில் ரஜினி பூர்த்தி செய்யறார். ரெண்டு படங்களுமே வேற வேற ஃப்ளேவர்ஸ்ல இருக்கும். அந்தப் படங்களைப் பார்க்க நானும் ஆவலா இருக்கேன். அடுத்து கமல். கமல்ஹாசனோட ஆழ்வார்பேட்டைதான் எனக்கெல்லாம் சரணாலயம். நான் அவங்க வீட்லயே வளர்ந்தவன்னு சொல்லலாம். சினிமாவை நேசிக்கற, சுவாசிக்கற ஆளுங்க எல்லாரையுமே அங்கே பார்க்கலாம். தி.ஜானகிராமனோட ‘அம்மா வந்தாள்’ கதையை படமா பண்ணலாம்னு ஆர்.சி.சக்தி சார் முயற்சியில் இருந்தார். கமல்ஹாசனும் லட்சுமியும் நடிக்கணும்னு திட்டமிட்டிருந்தோம். அந்தக் கதைக்கான திரைக்கதை அமைப்பு, போக்குவரத்து வேலைகள்ல நானும் இருந்தேன். கமல், ‘சொல்லத்தான் நினைக்கறேன்’ படத்தை முடிச்ச டைம் அது. தங்கப்பன் மாஸ்டர்கிட்ட டான்ஸ் அசிஸ்டென்ட்டா இருந்தார் கமல்ஹாசன். அந்த வேலைகளும் செஞ்சுக்கிட்டு மலையாளப் படங்கள்ல நடிச்சிட்டிருந்தார். சினிமாவைப் பத்தி பேசிக்கிட்டே இருப்பார். கமலைப் பத்தின சுவாரஸ்யங்கள் நிறைய இருக்கு...
ரசிகர்கள் காசை அள்ளி ஸ்கிரீன்ல வீசி கொண்டாடுறாங்க. ஒரு சூப்பர் ஸ்டாரோட பவர் என்னன்னு எனக்கு அப்போதான் தெரிஞ்சது.
(ரசிப்போம்...) தொகுப்பு: மை.பாரதிராஜா படங்கள் உதவி: ஞானம்
|