ஆகாயம் கனவு அப்துல் கலாம்



இந்திய ராக்கெட்டின் சரித்திரம் - 22

தோல்வியும் வெற்றியும்

1977ல் நடந்த கட்டுப்படுத்தப்பட்ட RH-560 ஏவுதல் பரிசோதனை வெற்றியே என்றாலும், அதன் முதல் அடுக்கு செய்த அதிகப்பிரசங்கித்தன சுழற்சி கவலை தந்தது. அறுவை சிகிச்சை தோல்வி, ஆனால் நோயாளி பிழைத்துக் கொண்டதைப் போன்ற சூழல் இது. அந்த அதிகப்படி சுழற்சிக்குக் காரணம், ராக்கெட்டின் தானியங்கி ஓட்டியின் உருளல் கேந்திரத்தின் வடிவமைப்பில் இருந்த ஒரு குறைபாடே எனக் கண்டறிந்தனர். ராக்கெட்டிலிருந்த சுழலாழி (Gyros) சீரான அதிர்வெண் விளைவினைத் (Frequency Response) தரும் எனக் கருதினர். குனிவிலும், திருப்பத்திலும் குறைந்த அதிர்வெண் என்பதால் அது நிறைவேறியது. உருளலில் உயர் அதிர்வெண் என்பதால் அப்படி நடக்கவில்லை. அதிகப்படி சுழற்சி நிகழ்ந்தது.



வெற்றிகள் பரிசுகளையும், தோல்விகள் பாடங்களையும் அளிக்கின்றன. அதிலிருந்து முக்கியமான பாடம் ஒன்றினைக் கற்றோம். எந்த ஏவுகலமாய் இருந்தாலும் மூடிய தட பறத்தல் கட்டுப்பாடு அமைப்பு (Closed Loop Flight Control System) கொண்டது எனில் Hardware-in-Loop Simulation செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினர். பிற்பாடு அது இஸ்ரோவில் பழக்கமாகவே ஆகிப் போனது; பல பிசகுகளைத் தவிர்த்தது.

எஸ்எல்வி-3யின் முதல் இரண்டு அடுக்குகளின் (S1 & S2) மேற்புறம் கலப்புலோகத்தால் ஆனது. அடுத்த இரண்டு அடுக்குகளும் (S3 & S4) இழையால் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டவை. S1ல் திட செலுத்துபொருளைக் கூறாக்க வேண்டி இருந்தது. மூன்று கூறுகள். அவை தும்பாவில் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா கொண்டு வரப்பட்டன. அங்கு அவற்றை ஒருங்கிணைப்பதும் சோதிப்பதும் நடந்தேறியது. அப்பரிசோதனை முதல் 21 நொடிகள் இயல்பாகவே இருந்தது. பிறகு ராக்கெட்டின் விரிந்த முகப்பு கழன்று விழுந்தது. அது அதிகப்படியாய் அரிப்புக்குள்ளானதுதான் இதற்குக் காரணம். அதைச் சீராக்கும் வகையில் வெப்பம் சார் வடிவமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்பின் எஸ்எல்வி-3யின் எல்லா அடுக்குகளின் உண்மையான பரிமாணத்திலும் பல சோதனைகள் நடத்தப்பட்டன. படிப்படியாக ஒட்டுமொத்த ராக்கெட் ஏவுதலுக்குத் தயாரானர்கள்!

மொத்தம் நான்கு ஏவுதல்கள் திட்டமிடப்பட்டன. இரண்டு பரிசோதனை ஏவுதல்கள்; இரண்டு அபிவிருத்தி ஏவுதல்கள். இவற்றுக்கு E1, E2, D1, D2 எனப் பெயரிடப்பட்டன. ‘‘இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகலத்தை தயாரிக்கும் பணி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. முதல் ஏவுகலத்தை 1978ல் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என பிரதமர் இந்திரா காந்தி 1974 ஜூலை 24ம் தேதி நாடாளுமன்றத்தில் கம்பீர நம்பிக்கையுடன் அறிவித்தார். அவர் சொன்னதிலிருந்து ஓராண்டு தாமதமாய் அதைச் செயல்படுத்தினோம். 1979 ஆகஸ்ட் 10 அன்று காலை 7:58 மணிக்கு E1 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.

முதல் அடுக்கு எரிந்து தீரும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாம் அடுக்கு செயல்படத் தொடங்கிய பின் ஏவுகலம் கட்டுப்பாட்டை இழந்தது. 317வது விநாடியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 560 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் விழுந்தது. அட்சர சுத்தமான தோல்வி. அத்தனையையும் அதோடு முடக்கிப் போட்டு விடக்கூடிய தோல்வி. இந்திய ஏவுகலச் சரித்திரம் இத்தோல்வியின் வலியில்தான் தொடங்கியது. அந்தச் சோதனை ‘பாதி வெற்றி’ என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அது பாதி வெற்றிதான். ஏவுகலத்தின் 44 துணையமைப்புகளில் 36 வெற்றிகரமாகச் செயல்பட்டன. அது போக ஏவு வளாகம் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டது. இவை முக்கிய முன்னேற்றங்களே! ‘‘நீங்கள்தான் தோல்விக்குக் காரணம் என்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று யாரோ கலாமிடம் கேட்டார்கள். அதற்கான விடை தேட முயன்றார் கலாம். ஆனால் அவரால் தீவிரமாய்ச் சிந்திக்க முடியவில்லை. சோர்வுடன் படுக்கையில் விழுந்தார்.

மதியம் சாப்பிடவே இல்லை அவர். அன்று மாலை யாரோ இதமாய்த் தன் தோளில் தொடுவதை உணர்ந்து எழுந்தார் அப்துல் கலாம். அது பிரம்ம பிரகாஷ். ‘‘சாப்பிடப் போகலாமா?’’ எனக் கேட்டார். சாப்பிடும்போது பொதுவான விஷயங்களையே கதைத்தார் பிரகாஷ். மறந்தும் ஏவுகலம் பற்றி ஏதும் அவர் பேசவே இல்லை. அது கலாமுக்கு மகத்தான ஆறுதலாய் இருந்தது. அவரது அன்பில் மிக நெகிழ்ந்தார். ‘‘உயிரோடு ஆளை வீட்டுக்குக் கொண்டு வாருங்கள், அவர் பிழைத்துக் கொள்வார்’’ - இதுதான் பிரம்ம பிரகாஷின் சேதத் தடுப்புக் கோட்பாடு. அதையே அப்போது செய்தார்! அத்தோல்வியின் துக்கம் கலாமுக்கானது மட்டுமல்ல என்பதைச் சுட்டி, அவரோடு அத்தனை விஞ்ஞானிகளும் துணை நிற்கிறார்கள் என்பதை நினைவூட்டினார்.

தோல்விக்கான காரணத்தை ஆராயும் பணி தொடங்கப்பட்டது. ஏவுதலுக்கு அடுத்த நாளே இதற்கான ஒரு கூட்டம் நடந்தது. 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். எம்.ஆர்.குரூப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. எஸ்.கே.ஆதித்தன் தலைமையிலான குழுவும் இதில் ஈடுபட்டதாக கலாம் குறிப்பிடுகிறார். இரண்டாவது அடுக்கை மேல்நோக்கிச் செலுத்தப் போதுமான சக்தி கிட்டவில்லை. அதனால் மூன்றாம் அடுக்கு எரியூட்டப்படும் முன்பே ஏவுகலம் கீழே விழுந்தது. 250 கிலோ எடை கொண்ட இரட்டைச் செலுத்துபொருளில் (RCS) நேர்ந்த கோளாறுதான் இதன் காரணம் எனக் கண்டறியப்பட்டது. பரிசோதனைகளின்போது திறந்து கொண்ட RCS அமுக்கியின் வால்வு ஒன்று மூடிக்கொள்ளவில்லை. இதன் காரணமாக அதனுள் நிரப்பப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றி கசிந்தது; 8 நிமிடக் கசிவு. முழுக்கக் காலியானது. அது கவனிக்கப்படவில்லை. ஒருவேளை முன்பே அது கண்டறியப்பட்டிருந்தால் ஏவுதல் நிறுத்தப்பட்டிருக்கும். அப்படி நிகழவில்லை. விதி எப்போதும் அப்படித்தான். அது பரீட்சை வைத்து விட்ட பின்பே பாடங்களை நடத்துகிறது!

உண்மையில் அதற்கு முன்பே பரிசோதனைக் காலகட்டத்தின்போது இந்த நைட்ரிக் அமிலம் ஓர் அசம்பாவிதத்தை நிகழ்த்தி இருந்தது. அவ்வாண்டின் முதற்பாதியில் எஸ்எல்வி-3யின் நிலைப்பரிசோதனைகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த சமயம். இச்சோதனையின்போது ஏராளமான வெப்பம் வெளிப்படும் என்பதால் தொலைவிலிருந்தே இதைக் கட்டுப்படுத்துவர். ராக்கெட்டை தரையில் படுக்க வைத்திருப்பர். பின்னோக்கி வெளியேற்றும் உந்து சக்தி கொண்டு ராக்கெட் முன்னோக்கி நகர்கிறதா எனப் பார்ப்பதே இச்சோதனை. இச்சமயத்தில் ராக்கெட் நகர்ந்து விடாதவாறு அது தரையில் பிணைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் பாதுகாப்பாய் சற்று தூர நிற்பர். சோதனை தொடங்க 15 நிமிடங்கள் இருந்தபோது 12 வால்வுகளில் ஒன்று செயல்படாததைக் கண்டுபிடித்தனர். அதனால் கவலையடைந்தவர்கள் அதன் அருகே சென்றனர். அப்போது மேற்சொன்ன நைட்ரிக் அமிலம் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டின் ஆக்ஸிஜனேற்றித் தொட்டி வெடித்துச் சிதறியது. அருகே பார்க்கப் போனவர்கள் மீது அமிலம் தெறித்ததால் மோசமான காயங்கள் ஏற்பட்டன.

அவர்களைத் தூக்கிக்கொண்டு கலாமும் குரூப்பும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓடினார்கள். காயம்பட்டவர்களில் சிவராமகிருஷ்ண நாயரும் ஒருவர். அதிகாலையில் நினைவு திரும்பியதும் அவர் சொன்ன முதல் விஷயம், அதற்கு வருத்தம் தெரிவித்து விட்டு அந்த விபத்தினால் ஏவுகலத் திட்டத்தில் ஏற்பட்ட தடங்கலைச் சரி செய்வதாய் உறுதியளித்ததுதான். கலாம் அச்சொற்களில் சிலிர்த்தார். இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி இதுபோன்ற கடமை உணர்வும் நம்பிக்கையும் மிக்க துடிப்பான இளைஞர்களின் கையில் மிகப் பத்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார். பெரும் நிறைவாய் உணர்ந்தார். இப்படி பரிசோதனைகளின்போதே விஞ்ஞானிகளுக்கு தண்ணீர் (நெருப்பென்றும் சொல்லலாம்) காட்டியிருந்த நைட்ரிக் அமிலம்தான் நிஜ ஏவுதலிலும் எமனானது. ஏவுதலில் வால்வு ஏன் மூடவில்லை என ஆராய்கையில், 40 மைக்ரான் அளவிலான மாசுத் துகள் ஒன்று அதில் சேர்ந்திருந்ததே காரணம் எனத் தெரிந்தது. அத்தனை பிரமாண்ட ஏவுகலத்தின் தலையெழுத்தை அந்தச் சிறு தூசுதான் கிறுக்கியது. யானை காதில் புகுந்த எறும்பு போல்! பிறகு அந்தளவு சிறிய மாசுகளைக் கண்டறிந்து விலக்கும் நுண்மையான வடிகட்டிகளைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

பிறகு இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர்மட்ட விஞ்ஞானிகள் கூட்டத்தில் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ‘தோல்வியைத் தடுக்கக்கூடிய எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன, அதையும் மீறி நடந்த விஷயம் இது’ என்பதுதான் அதன் சாரம். அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் கலாமுக்கு உள்ளூர அதற்கு மனம் ஒப்பவில்லை. அவர் எழுந்தார். ‘‘தொழில்நுட்பக் காரணங்கள் சொல்லி என் நண்பர்கள் தோல்வியை நியாயப்படுத்தினாலும் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன். கவுன்ட் டவுன் சமயத்தில் நைட்ரிக் அமிலக் கசிவு நேர்ந்தது. அதில் அதிகக் கவனம் செலுத்தாமல் போனதற்கு நான்தான் பொறுப்பு. அதைக் கண்டறிந்து திட்ட இயக்குநர் என்ற முறையில் ஏவுதலை நிறுத்தி இருக்க வேண்டும். ஏவுகலத்தைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இத்தகைய சந்தர்ப்பங்களில் திட்ட இயக்குநர் தன் வேலையை இழக்க நேரிடும். எனவே எஸ்எல்வி-3 தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்’’ என்றார்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர். கூட்டம் நிசப்தமானது. தவான் எழுந்து, ‘‘கலாம் சுற்றுப் பாதையில் நீடிப்பார்’’ என்று சொல்லி விட்டு கூட்டம் முடிந்து விட்டதை உணர்த்தும் முகமாய் அங்கிருந்து வெளியேறினார். அன்று தவான் எடுத்த அந்த நல்ல முடிவு, இந்திய ராக்கெட்டின் சரித்திரத்தையே தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது. ஓராண்டு கழித்து 1980 ஜூலை 18 அன்று எஸ்எல்வி-3யின் E2 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இம்முறை எல்லா அடுக்குகளும் திட்டமிட்டபடி சீராய்ச் செயல்பட, ஏவப்பட்ட 11 நிமிடங்கள் கழித்து RS-1 என்ற 40 கிலோ செயற்கைக்கோளை பூமத்திய ரேகைக்கு 45 பாகை சாய்ந்த வாக்கில் அமைந்த நீள்வட்டப் பாதையில் கொண்டு போய் நிறுத்தியது. ‘‘சக்சஸ்! சக்சஸ்!’’ என ‘பராசக்தி’ படமுதல் காட்சியில் வரும் சிவாஜி போல் அன்று கலாமும் விஞ்ஞானிகளும் கூவியிருக்கக்கூடும்! தொடர்ந்து D1, D2 ஆகிய அபிவிருத்தி ஏவுதல்களும் வெற்றிகரமாய் நடந்தேறின. ஒவ்வொரு முறையும் ஏவுகலத்தில் ஏதேனும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினர். சவுண்டிங் ராக்கெட்டிற்கு அடுத்த மிகப்பெரிய அடியை இந்தியா எடுத்து வைத்தது!

தவான் எழுந்து, ‘‘கலாம் சுற்றுப் பாதையில் நீடிப்பார்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார். அந்த நல்ல முடிவு, இந்திய ராக்கெட்டின்  சரித்திரத்தையே தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது.

(சீறிப் பாயும்...)