பொங்கும் பரிவு கொண்ட பெரியாழ்வார்



பெரியாழ்வார் -  21.6.2021

அனந்தனைப் பாடிய பெரியவர்களும் மகான்களும் கவிகளும் கதைகளும் ஆயிரம் ஆயிரமாய் நம் பாரத நாட்டில் உண்டு. அதில் பகவான் கல்யாண குணங்
களில் ஆழ்ந்து,  சதா சர்வகாலமும் அவருடைய பெருமையைத் தவிர, வேறு எதையும் தமிழால் பாடாத பெருமக்களை “ஆழ்வார்கள்” என்று அழைக்கின்றோம்.
“நாக் கொண்டு மானிடம் பாட வந்தேன் அல்லேன் என்று இருந்தவர்கள்.அந்த ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் பெரியாழ்வார் தனிச்சிறப்பு உடையவர்.

பெரும்பாலான ஆழ்வார்களுக்கு இயற்பெயர் இருக்காது. அவர்கள் செயல்களாலும் குணங்களாலும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றார்கள். அப்படித்தான்
பெரியாழ்வாருக்கும் “விஷ்ணுசித்தர்” என்றும், பட்டர்பிரான் என்றும் பல நாமங்கள். இவைகளெல்லாம் காரணப் பெயர்களே.“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்பது பிரசித்தி பெற்ற வாசகம்.எல்லாவற்றையும் பகவான் கிருஷ்ணரின் சொரூபமாக நினைத்து, அதே சித்தத்தில் இருப்பவர் என்பதால் இவருக்கு விஷ்ணு சித்தர் என்று பெயர்.

இதைவிட இன்னும் சுவாரஸ்யமான ஒரு பொருளும் வைணவ உரையாசிரியர்கள் கூறுவதுண்டு. விஷ்ணு இவர் சித்தத்தில் இருப்பவர் என்பதைவிட, “மத் பக்த: மக்கத பிராண;”  என்று பகவான் கீதையில் கூறியபடி, “என்னுடைய பக்தனை நான் சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றபடி விஷ்ணுவின் சித்தத்தில்  எப்பொழுதும் இருப்பதால் இவருக்கு விஷ்ணுச் சித்தர் என்று பெயர். இன்னொரு திருநாமம் பட்டர்பிரான். வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்று தன்னைப்பற்றிதானே பாசுர பலச் சுருதியில் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

வில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை நடத்தி வந்தார்.திருமகள்நாதனின் அருளால் அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே விஷ்ணு சித்தர். பட்டர் என்றாலே வேதத்தில் வல்லவர் என்று பொருள். வேதம் அத்யயனம் செய்பவர், வேதத்தின் பொருளைச் சொல்பவர், வேதத்தின் கருத்தின்படி நடப்பவர் என்று பொருள்.

அவர்களுக்கெல்லாம் இவர் தலைவராகவும் உபகாரம் செய்பவராகவும் இருந்ததால் இவருக்கு பட்டர்பிரான் என்று பெயர். பிரான் என்பதற்கு தலைவர் என்றும் உபகாரகன் என்றும் இரண்டு வகையாகப் பொருள் சொல்லலாம். இரண்டுமே இவருக்குப் பொருந்தும். வேதத்தின் சிறந்த பொருளை, தலைமைப் பொருளை இவர் எடுத்து ஓதியதால் இவர், மற்ற வேத வல்லுனர்களுக்குத்  தலைவராக இருந்தார் என்று ஒரு பொருள்.வேதத்தின் பொருளை மற்றவர்கள் துல்லியமாக உணராத பொழுது வல்லப பாண்டியன் அவையிலே அப்பொருள்களை எல்லாம் கிரமமாகச் சொல்லி, மற்றவர்களும் அறிந்து கொள்ளும்படி உபகாரம் செய்ததால் இவருக்கு பட்டர்பிரான் என்று பெயர்,இவருக்கு பெரியாழ்வார் என்கிற பெயர் எப்படி வந்தது?பெரியாழ்வார் என்கிற பெயர் அவர் பாடிய நாலாயிரப் பிரபந்தத்தில் அல்லது ஆண்டாள் தன்னுடைய தகப்பனாரை பற்றிக் குறிப்பிடுகின்ற பாசுரங்களில் இல்லை.

பின்னால்,இவ்வாழ்வாரின் மிகச்சிறந்த சிறப்பு குணத்தை ஆராய்ந்து,வைணவ ஆச்சாரியர்கள்பெரியாழ்வார் என்று குறிப்பிடுகின்றார்கள்.இவருக்குப்  பெரியாழ்வார் என்கின்ற பெயர் எப்படி வந்தது என்கின்ற ரகசியத்தை மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தினமாலை என்கின்ற நூலிலே மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.எல்லா ஆழ்வார்களும் எம்பெருமானைப் பாடிப் பரவி, அவருடைய பெருமையைப் பரப்புவதில் ஆழங்கால் பட்டவர்கள். வாழ்த்து சொல்லி வழி நின்றவர்கள். இறைவனுக்குச்  சொல்லுகின்ற வாழ்த்துக்கு பல்லாண்டு பாடுதல் என்று பெயர்.ணவ பரிபாஷையில் “மங்களாசாசனம் செய்தல்” என்று சொல்வார்கள்.

எம்பெருமானிடத்திலே கொண்ட பரிவால் இந்தக்  குணம் எல்லா ஆழ்வார்களுக்கும் உண்டு. ஆனால், மற்ற ஆழ்வார்களை விட, விஷ்ணுசித்தரான இவருக்கு அந்தப் பரிவு எல்லையைக் கடந்து பொங்கி வழிந்தது. இப்பரிவின் மேன்மையை நோக்கி இவருக்கு பெரியாழ்வார் என்கின்ற திருநாமம்ஏற்பட்டது.

மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும்
பிரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்
பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்”
(மாமுனிகள் உபதேச ரத்தின மாலை 18).

பெரிய என்பதற்கு வயதில், ஞானத்தில், அன்பில், அரவணைப்பில், பரிவில், பிரேமையில் பெரியவர் என்று சொல்லலாம். விஷ்ணுவின் பரத்துவத்தை பாண்டியன் அவையில் நிர்ணயம் செய்த பெரியாழ்வாருக்கு கருடாரூடனாய்க் காட்சி தந்தான், எம்பெருமான். இந்தக்  காட்சிக்காக மற்ற ஆழ்வார்கள் எல்லாம் தவித்துப் பதிகம் பாடினர்.ஆனால், யானையின் மீது அமர்ந்து ஊர்வலத்தில் இருந்த பெரியாழ்வாருக்கு இக்காட்சி சந்தோஷத்தை விட அச்சத்தை தந்தது. ‘‘அஸ்தான பய சங்கை” (தேவையில்லா இடத்தில் பயம்) என்று இந்த உணர்வைச் சொல்வார்கள்.

காலம் நடை ஆடுகின்ற இந்த தேசத்தில் எம்பெருமான் காட்சி தருகின்றனே! இவனுக்கு என் வருமோ? என்ன ஆபத்து வருமோ? எவர் கண்ணெச்சில் படுமோ? என்றெல்லாம் வயிறு கலங்கி அவருக்கு மங்களங்களை பாடலால் வழங்கினார். பெரியவனான எம்பெருமானுக்கே ஆசி வழங்கி அன்பில் பெரியவனானதால், ‘‘பெரியாழ்வார்” என்று பெயர் பெற்றார். மெய்யான இறைவன் இக்காட்சியை ஆழ்வாருக்கு அருளிய இடம் கூடலழகர் சந்நதிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு திறந்தவெளி. அந்த வெளிக்கு “மெய் காட்டும் பொட்டல்” என்று பெயர். அங்கே பெரியாழ்வாருக்கு கருட வாகனத்தில் எம்பெருமான் காட்சி தரும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகின்றது.

இந்த ஆழ்வாரின் பெருமைக்கு இன்னும் சில சிறப்புகளைச்  சொல்லலாம்.பூமாதேவியின் அம்சமான கோதாதேவி, ஆழ்வாராக இந்நிலவுலகில் தோன்றி தமிழிலே பாசுரங்களை
அருளிச் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.  யாருக்கு மகளாக இருப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தபொழுது பொங்கும் பரிவு மிகுந்த பட்டர்பிரான் நினைவுக்கு வருகிறார். தனக்குத்  தந்தையாக கூடிய தகுதியைப்  பூரணமாக படைத்தவர் என்று கருதி பெரியாழ்வாருக்கு பெண் பிள்ளையாகப் பிறந்தாள். பூமி தேவிக்கு தந்தை என்கிற பெருமையும் இருந்ததால் இவருக்கு “பெரியாழ்வார்” என்று பெயர்.

எம்பெருமானுக்கு பெண் கொடுத்து மாமனார் ஆன பெருமை இரண்டு ஆழ்வார்களுக்கு உரியது. ஒருவர் பெரியாழ்வார். தன் மகளான கோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஆனார். மாமனார் தந்தையின் ஸ்தானம். பெருமாளுக்கு மாமனார் என்பதால் பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயர். அதைப்போலவே குலசேகர ஆழ்வாரும் தன்னுடைய மகளான சேரகுலவல்லி நாச்சியாரை அரங்கனுக்கு மணமுடித்து மாமனார் ஆனார். அதனால்தான் குலசேகர ஆழ்வாரை “குலசேகரப் பெருமாள்” என்று வைணவம் உலகம் போற்றுகின்றது.
கண்ணனைப் பிள்ளையாக நினைத்து தாயன்பில் பல்வேறு பருவங்களைதமிழிலே பதிகமாக்கிப்   பிள்ளைத்தமிழ் பாடிய பெருமை பெரியாழ்வாருக்கு உண்டு.

ஒரு குழந்தையை வளர்க்கும் கலையை அப்பாடல்களில் நாம் காணலாம். பெரியாழ்வாரை, “பிள்ளைத்தமிழ்” என்கின்ற இலக்கியத்தின் முன்னோடி என்று  தமிழ் இலக்கிய உலகம் போற்றுகின்றது.தாயாகி பிள்ளைத்தமிழ் பாடியதாலும் பெரியாழ்வார். பெரியாழ்வார் பாடிய இரண்டு பிரபந்தங்கள். ஒன்று திருப்பல்லாண்டு. இரண்டு பெரியாழ்வார் திருமொழி.
திருப்பல்லாண்டு என்பது பிரணவம்போல. வேதத்தை ஓதுகின்ற பொழுது முதலில் பிரணவத்தைச் சொல்லியே “ஹரி: ஓம்” என்று ஆரம்பிப்பர். அதைப்போலவே வேதத்தை முடிக்கின்ற பொழுதும் பிரணவ சப்தத்தோடு முடிப்பார்கள். வைணவ மரபில் தமிழ் வேதமாகிய பிரபந்தத்தை ஓதுகின்ற பொழுது பிரணவ சப்தத்தின் பொருளாகிய திருப்பல்லாண்டுப் பதிகத்தைப் பாடியே தொடங்குவார்கள். நிறைவாக வழிபாட்டை முடிக்கும் சாற்றும் பாடல்களில் திருப்பல்லாண்டு ஓதியே முடிப்பார்கள்.

இந்த மரபை மணவாள மாமுனிகள் குறிப்பிடுகின்றார்
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்தான் மங்களம் ஆதலால்இந்த ஆழ்வார் வில்லிபுத்தூரில் 1200 ஆண்டுகளுக்கு முன் ஓர் குரோதன ஆண்டில் ஆனித் திங்கள், வளர்பிறையில் பொருந்திய ஏகாதசி திதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில்  கருடாமிசராய் அவதரித்தருளினார். இவருடைய திருநட்சத்திர வைபவம், ஆனி ஸ்வாதியின் எல்லா திருக்கோவில்களிலும், திருமடங்களிலும், அடியார் திருமாளிகைகளிலும் மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்படும்.

இவர் வில்லிபுத்தூரில் வட பெருங்கோயிலுடையான் சந்நதியில் ஒரு நந்தவனம் அமைத்து, திருமாலை கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கும் கைங்கரியத்தை செய்து வந்தார். கையில பூ மாலை. வாயிலே பாமாலை. எப்பொழுதும் பகவானின் நினைவு என்பது இவருடைய கொள்கை. எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அந்தக் கஷ்டத்தை ஒரு நிமிடம் எம்பெருமானை நினைத்து போக்கிக் கொள்வேன் என்பதை “நினைத்திருந்து சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே’’ என்ற  பாடலிலே தெரிவிக்கின்றார்.
பெரியாழ்வாரால் பாடப்பெற்றதலங்கள்:

1. திருவரங்கம், 2. திருவெள்ளாறை,3. திருப்பேர்நகர், 4. கும்பகோணம், 5. திருக்கண்ணபுரம், 6. திருச்சித்திரக்கூடம்,7. திருமாலிஞ்சோலைமலை, 8. திருக்கோட்டியூர், 9. வில்லிபுத்தூர்,10. திருக்குறுங்குடி, 11. திருவேங்கடம், 12. திருவயோத்தி, 13. சாளக்கிராமம்,14. வதரியாச்சிரமம், 15. திருக்கங்கைக் கரைக்கண்டம், 16. துவாரகை, 17. வடமதுரை,18. திருவாய்பாடி, 19. திருப்பாற்கடல், 20. பரமபதம்முதலியனவாகும்.

ஆனி ஸ்வாதி அன்று திருக்கோயில்களில் பெரியாழ்வாருக்கு திருமஞ்சன வைபவம் நடைபெறும். பெருமாள் மங்களாசாசனம் முடிந்து மாலையில் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, கோயில் திருவாய்மொழி, ராமானுஜர் நூற்றந்தாதி பாசுரங்கள் பாடுவார்கள். பிறகு தளிகை அமுது செய்யப்படும். சாற்று முறை நடக்கும். பெரியாழ்வாருக்கு பகுமானம் செய்வார்கள். அன்றைய தினம் உபதேசரத்தின மாலை அறையில் பெரியாழ்வார் சம்பந்தமான ஐந்து திருப்பாட்டுக்களை பாடி, உத்தர சாந்தி வாழி திருநாமத்துடன் நிறைவு செய்வார்கள். கோஷ்டிக்குத் தீர்த்த விநியோகம் ஆகும்.

இவருடைய கடைசி காலம் திருமாலிருஞ்சோலையில் கழிந்தது. இன்றும் இவர் திருவரசை அழகர் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். பெரியாழ்வார் வாழித்திருநாமம் இது.

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற் றறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லறிய வானிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாளை தொழுமப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போல சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழி யறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான்
மேதினியில் வாழியே.

விருச்சிகன்