அபிராமி அந்நாதி-சக்தி தத்துவம்-82



சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்படும்.
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பாக்கு இதுபோலும் தவம் இல்லையே
பாடல் எண் - 53.

ஸ்ரீ வித்யா உபாசனையின் மிக முக்கியமான நான்கு அம்சம் மந்திரம், பயிற்சி, தியானம், அனுபவம் இதில் மந்திரத்தை பல இலட்ஷம் ஆவர்தி ஜெபம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு தசாங்கம் என்று சொல்லக்கூடிய தர்பணம், மார்ஜனம்,போஜனம், ஹோமம், பூசனம், இவை முதலான பத்து செயல்கள் உள்ளன அவை பயிற்சி எனப்படும். அதன் பிறகே  தியானம் செய்ய சொல்லப்படுகிறது. இந்த மூன்றாவது நிலையையே இந்த பாடலில் சொல்லப்படுகிறது.

இதற்கு முன் உள்ள இரண்டு நிலைகளை அடைந்தால் தான் இந்த மூன்றாவது நிலையை அடையமுடியும்.தியானம் என்பது ஸ்ரீ வித்யா உபாசனையில் உமையம்மையின் உருவத்தை மனதில் நிலை நிறுத்துகிற புலன்கள் வெளி உணர்வுகள் இல்லாமல் உமையம்மையின் திருஉருவை சாத்திரத்தில் கூறியுள்ளபடி மனக்கண்ணால் மனதில் நிலை நிறுத்த செய்யும் செயலாகும். அந்த உருவத்தின் விளக்கத்தையே இப்பாடல் விளக்குகிறது இனிபாடலுக்குள் செல்வோம்.

‘‘சின்னஞ்சிறிய மருங்கினில்’’
என்ற சொல்லால் உமையம்மையின் இடையே வர்ணிப்பதாக நாம் கருதுகிறோம். ஜோதிட சாஸ்திரத்தில் ‘‘சாமுத்திரிகா லக்ஷணம்’’ என்ற பகுதி அங்க அமைவைப் பற்றி
தெளிவாக பேசுகிறது. அதில் இடையின் அமைப்பை கொண்டு மூன்று விதமான பலனை குறிப்பிடுகிறது.சிறியதாக அமைதல், உடுக்கை போன்ற வடிவத்தில் அமைத்தல், மென்மையாக அமைத்தல் இந்த மூன்றிற்கும் முறையே கணவன் மீது பேரன்பும், குழந்தை பேறும், மிகுந்த செல்வமும், கிட்டும் என்பதாக குறிப்பிடுகிறது.

உமையம்மையை இந்த மூன்றின் இயல்பினைக் கொண்டவளாய் அமைக்கப்பட வேண்டும் என்கிறது சிற்ப சாத்திர நூல்கள்.மந்திர சாத்திரமானது உமையம்மையை பத்து வகை. பருவரம் கொண்டவளாய் தியானிக்கிறது.

நவயௌவனா - இளமையின் துவக்கத்தில் இருப்பவள்
பாலாம்பிகா - குழந்தை பருவத்தை
கொண்டவளாய் இருப்பவள்.
இது போன்ற தியானங்களால் நன்கு உணரலாம்.

இப்படி தியானித்தால் உமையம்மையை வணங்கும் சாதகனுக்கு வெவ்வேறுபலன் கிட்டும், உமையம்மையை சின்னஞ்சிறிய இடையே உடையவளாய் தியானிக்கும் போது சாதகன் அனைவராலும் விரும்பப்படும் தன்மையை பெறுவர். மேலும்‘‘சின்னஞ்சிறி’’ என்று சக்தி வழிபாட்டு கலைச்சொல்லை விளக்குகிறார்.இது சுசும்னா என்ற நாடியை குறித்தது.இந்த நாடியை குறித்து தியானம் செய்வது ஆத்ம தரிசனத்தை நமக்கு பெற்று தரும். இந்த நாடியாகவே சிவகாமியம்மை தியானிக்கப்படுகிறாள். இந்த நாடியுடன் இடைகலா, பிங்கலா என்ற நாடியும் சேர்ந்தே இருக்கும். அதில் இலக்குமியையும் கலைமகளையும் தியானிப்பது வழக்கிலுள்ளது.

திருக்கடையூரில் காலசம்ஹார மூர்த்தியின் சக்தியான பாலாம்பிகை சுசும்னா நாடியாகவும், அலைமகள் கலைமகள் இருவரும் அவள் தோழியாகவும் எழுந்தருளியுள்ளதை
இன்றளவும் காணலாம்.மருங்கு - என்பது வயிறு என்ற உறுப்பையும் குறிக்கும். உணவின்றி தவம் செய்ததால் சுருங்கிய மெல்லிய வயிற்றை உடையவள் உமையம்மை. அது உமையம்மையின் தவக்கோலத்தை சூட்டுகிறது என்பதை ‘‘மாதத்வளே’’- 13

எதையும் (சருகுகளை கூட) உண்ணாமல் தவம் செய்பவள் என்பதனை ‘‘அபர்ணர்’’ என்கிறது சகஸ்ரநாமம்.சிலவீரட்டான தலங்களில் உமையம்மை பாலபருவம் உடையவளாகவே வழிபடப்படு கின்றாள். இது சிவபெருமானின் சினத்தை குறைப்பதற்காக பயன்படும் ஒரு ஆகம நெறியாகும். இதை வடமொழி உக்ரசமனம் என்கிறது. சித்தர்கள் உமையம்மையை தாயாக கருதி தியானிக்காமல் வாளை என்ற பெயருடைய சின்னஞ்சிறிய ருங்கினை (இடையை) பெற்ற குழந்தை பருவம் கொண்டவளாக தியானிக்கிறார்கள்.

இது மோகனம், வஷ்யம் போன்ற எட்டு சித்துக்களை அருளவல்லதாக அமைகிறது. இத்துணையும் மனதில் கொண்டே ‘‘சின்னஞ்சிறிய மருங்கினில் என்கிறார்.
‘‘சாத்திய செய்யப்பட்டு’’அபிராமி பட்டர் இப்பாடலை சேர்த்து மூன்று இடங்களில் ‘‘பட்டு’’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ‘‘பைக்கே அணிவது பன்மணி கோவையும் பட்டும்’’- 37 ‘‘ஒல்கு செம்பட்டுடையாளை’’- 84 என்பதனால் நன்கு உணரலாம்.

ஸ்ரீ வித்யா உபாசனையில் வண்ணமும், உடையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உமையம்மையின் வண்ணமும், உடையும் சார்ந்து உபாசகனே வெவ்வேறு பலனை அடையலாம்.

பட்டர் காலத்தில் அந்தணருக்கு வெண்மையும், அரசருக்கு செம்மையும் சிறந்த நிறங்களாக கருதப்பட்டது. ஓவிய சாத்திரங்கள் இறைதிருமேனிகளை வரைகிறபோது
சினத்தையும், செயலாற்றலையும் குறிக்க செந்நிறத்தை பயன்படுத்தினர்.

அமைதியையும், அறிவாற்றலையும் குறிப்பதற்கு வெண்மையை பயன்படுத்தினர். அந்த வகையில் உமையம்மையானவள் கிரியா சக்தியாக இருப்பதற்கு ஒல்கு செம்பட்டுடையாளை - 84 என்று குறிப்பிடுகிறார்.ஆகமங்கள் இறைவிக்கு சாத்தும் உடையானது எத்தனை இழைகளால் அமைக்கப்படுகிறதோ அத்தனை தேவ ஆண்டுகள் அதை அளித்தவர் சொர்க்கத்தில் வசிப்பர் என்கிறது. பட்டு, பருத்தி, மலர், இலை இவற்றைக் கொண்டும் உமையம்மைக்கு உடையாக அமைத்து வழிபடுவர். இத்தகைய வழிபாடானது கிராம தேவதைக்கு செய்யப்படுமாயின் அது
வறுமையை போக்கும் என்கிறார்கள்.

பட்டானது உமையம்மைக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இது வழிபடுவோருக்கு வளமையையும், செல்வக்கையும் அளிக்கும் என்கிறார்கள்.உபாசனை நெறியை பொறுத்தவரை உபாசகன் அணியும், அல்லது இறைவனுக்கு அணிவிக்கும் ஆடையானது மடியுடன் (துவைத்து, உலர்த்தி, காயவைத்த உடை) இருக்க வேண்டும். பட்டுக்கு மட்டும் விழுப்பு (உடுத்திய பிறகு களைந்து துவைத்து உலர்த்தி காயவைக்காத உடை) இல்லை. அது என்றென்றும் புனிதம் என்கிறது தந்திர சாத்திரம்.

பழங்கால சூழலில் செல்வந்தர்கள்

மட்டுமே அணியக் கூடியதாகவும், அதிக விலை மதிப்புடையதாகவும் இருந்தது பட்டு. அதனால் பட்டு அணிந்திருப்பதென்பது அக்கால சூழலில் செல்வ செழிப்பை உடையவர் என்பதை மறைமுகமாக நமக்கு காட்டுகிறது.உபாசகர்கள் பட்டாடை அணிந்து பூசிப்பது மிகவும் தூய்மையானதாக (மடி) கருதப்பட்டது.

‘‘சாத்திய செய்யப்பட்டு’’ என்பதனால் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறை திருமேனிக்கு துணி உடுத்துவதை சாத்தி என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள்.திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மைக்கு பட்டு சாத்தியிருப்பதையே இந்த இடத்தில் ‘‘சாத்திய செய்யப்பட்டும்’’ என்கிறார். ‘‘செய்யப்பட்டு’’ என்பதால் சிவந்த நிறம் என்பதையும் சூட்டுகிறார் பட்டர்.

மேலும், திருமணம், பூப்பெய்த சடங்கு, மந்திர உபதேசம் இவற்றிற்கும், மங்களத்தை சூட்டுவதற்கும் பட்டை இன்றளவும் பயன் படுத்துகிறார்கள். இவை அத்துனை கருத்துக்களையும் மையமாக கொண்டே ‘‘சாத்திய செய்யப்பட்டும்’’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

‘‘பென்னம் பெரிய முலையும்’’சிற்ப சாத்திரத்தில் வெவ்வேறு சக்திகளை அமைக்கும் பொழுது வடிக்கப்பட வேண்டிய மார்பின் அளவு சார்ந்து வணங்குவோர்க்கு வெவ்வேறு பலன்கள் கிடைக்கும் என்பதாக கூறப்படுகிறது.இலக்கிய மரபில் வயதை மறைமுகமாக சூட்டுவதற்கு உடல் உறுப்புகளின் வளர்ச்சியை குறிப்பிடுவார்கள்.

அந்த வகையில் உமையம்மையானவள் அனைத்துலகத்திற்கும் தாய் என்பதால் ‘‘பென்னம் பெரிய முலையும்’’ என்றார் பட்டர்.சிற்பிகளின் நோக்கில் ‘‘பென்னம் பெரிய முலை’’ மூன்று பேருக்கு அமைக்கப்படும். மனோன்மணி என்ற உடனாய என்று குறிப்பிடப்படும் அந்தந்த ஊரில் எழுந்தருளியிருக்கக் கூடிய அபிராமி, விசாலாட்சி, மீனாட்சி போன்ற சக்தி என அறிய வேண்டும்.

தாயார் என்று அழைக்கப்படும் இலக்குமி தேவியானவள் பருத்த தனங்களை உடையவளாக அமைக்க வேண்டும் என்கிறது சாத்திரம். மேலும்.நடராஜரை ஆடல் போட்டிக்கு அழைத்த அணங்காகிய காளியை பருத்த தனங்களை உடையவளாக அமைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் ‘‘பென்னம் பெரிய முலையும்’’ என்ற வார்த்தை இலக்குமி, மனோன்மணி, காளி. மற்றும் சப்த மாதர்களாகிய ப்ராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வாராகி இந்திராணி, வைஷ்ணவி இவர்களையே குறிக்கும்.தாய் என்ற உறவின் முறையை சிற்ப வழியாய் சூட்ட ‘‘பென்னம் பெரிய முலையும்’’ என்கிறார் பட்டர்.‘‘முத்தாரமும்’’ முத்து என்பது நத்தை சிப்பி வகையை சார்ந்த ஒரு உயிரினமாகும், இது காவிரிபூம் பட்டினம், தூத்துக்குடி போன்ற சில தமிழகத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. முத்தானது மணியை ஒத்தது. இது நான்கு வகையாகும். மூங்கில் முத்து, சிப்பிமுத்து, கெஜமுத்து, ஆழிமுத்து இந்த வெண்மணிகளை கோர்த்து மாலையாக அணிந்திருப்பது உமையம்மையின் தனி சிறப்பாகும்.

பஞ்சாசத் பீட ரூபின்யை - என்பது உமையம்மை எழுந்தருளியிருக்கும் பீடங்களைக் குறிக்கும். இந்த பீடங்கள் ஐம்பதும் உமையம்மையின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் தனி சிறப்பாக எண்ணி வழிபடும் இடம்.ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு பைரவர், கணபதி காவல் இருப்பர். அந்த வகையில் உமையம்மையினுடைய முத்தாரமும், தோடு முதலிய ஆபரணமும், மாங்கல்யமும், ஆடையும், ஆயுதமும் உமையம்மையின் உறுப்பாகவே எண்ணி வழிபடத்தக்கது.

அந்த வகையில் முத்து மாலை விழுந்த இடத்தை சக்தி பீடம் என்பர். அதற்கு முத்தாரம்மன் என்று பெயர்.இந்த முத்தாரம்மன் வழிபாடானது உறவினர்களை கருத்துவேறு பாடின்றி ஒருங்கிணைக்க வல்லது. ஜபம் செய்யும் போது சைவத்தில் ருத்ராக்ஷமும் வைணவத்தில் துளசி மணியும், பயன்படுத்துவது போல உமையம்மைக்கு நவரத்தின மாலையை ஜபம் செய்ய பயன் படுத்துவர்.

அதில் ஒன்பது சக்திகளையும், ஐம்பது எழுத்துக்களையும். உமையம்மையின் உருவாய் தியானித்து ஜபம் செய்து உமையம்மையின் திருமேனியில் சாத்திவைப்பர். நவரத்தினத்தில் முத்தும் ஒன்று. அடியவர்களுக்கு பேய் பிசாசு பிடிக்கின்ற போது அதை பிடித்திருப்பவரின் கழுத்தில்விட்டு அதை ஓட்டுவர்.

ஒன்பது ரத்தினங்களையும் பவளமாலை, மாணிக்கமாலை போன்ற தனித்தனி மணிகளால் மாலை அமைத்து மோகனம் (மயக்குதல்) ஸ்தம்பனம் (நிறுத்துதல்) உச்சாடனம் (விறட்டுதல்) பேதனம் (பிரித்தல்) வித்வேஷனம் (துன்புறுத்தல்) வச்யம் (வயப்படுத்தல்) மாறனம் (அழித்தல்) சர்வசமம் (ஒருங்கிணைத்தல்) என்ற பயன்களை பெறுவதற்கு அதற்குறிய மலர்
களால் ஜபிப்பர். ஜபமாலை, ஆசனம், சொல்லும், மந்திரம், அமரும் திசை, அணியும் ஆடையின் நிறம், சாத்தும் மலர், நெய் வேத்யம் இவற்றை மாற்றி அமைத்து வழிபடுவர்.

அதில் முத்தினால் அமைக்கப்பட்ட மாலையானது உமையம்மையை பற்றிய உண்மை ஞானத்தை அருளும் தன்மையுடையது இதையே ‘‘பேயேன் அறியும் அறிவுதந்தாய்’’- 61 என்கிறார்.

ஸ்ரீ வித்யா உபாசனை நெறியில் ரத்தினமாலையும் ஏதேனும் ஒன்றை உமையம்மையிடத்து உத்தரவு பெற்று அந்த மாலையினால் மட்டுமே ஜபம் செய்வர். பிறருக்கு அதை தரமாட்டார்கள். தான் மட்டுமே அதை அணிந்து கொள்வர் பூசனை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் தான் வணங்கும் உமையம்மையின் கழுத்திலோ சந்தனக் கிண்ணத்திலோ பாதுகாப்பாக வைத்திருப்பர்.

நவரத்தினமானது உமையம்மையின் இருப்பிடமாகவே கருதி வழிபடதக்கது என்கிறது சக்தி தந்திர நூல்கள்.உமையம்மையின் சிற்பத்தில் முத்துமாலையும், காதுகளில், சக்ரத்தில் நவரத்தினம் பதித்த தோடும் அணிவித்து வழிபடுவர். இது இன்றும் வழக்கில் உள்ளது.திருக்கடவூரை பொறுத்தவரை பார்கடல் துயின்றோனின் அணியே உமையம்மையாவாள். பெருமாளுக்கு இன்றளவும் முத்தங்கி சாத்துவதை கொண்டு அறியலாம். அந்த வகையில் முத்தே அபிராமியாக கொண்டு வழிபடப்படுகிறது.

‘‘பிச்சி மெய்த சன்னங்கரிய முழலும்’’பிச்சி என்பது ஒருவகை பூ. இந்த பூவை கூந்தலில் சூடிக்கொள்பவள் உமையம்மை. ஆகமங்களை பொறுத்தவரை இந்த மலரை துர்கைக்கு சாற்றி நவாக்‌ஷரி ஜெபம் செய்தால் திருமணமும், காளிக்கு செவ்வாடையும், பிச்சிபூவும் சாற்றி வழிபட்டால் வழிபடுவோருக்கு எல்லோரையும் வயப்படுத்தும் தன்மையும் வரும். அதே மலரை மனோன் மணி என்னும் உமையம்மைக்கு சாற்றி வழிபட்டால் நன்மக்கள் பேற்றை அடையலாம் என்கிறது ஆகமம்.

உலகியலில் பிச்சி பூவை சூடிக்கொள்ளும் வழக்கமில்லை பிச்சி என்பது ஒரு பெண் பேயின் பெயராகும். இது ஆடவரால் வஞ்சிக்கப்பட்ட அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் தன்னை மாய்து கொண்ட பெண் என கருதப்படுகிறது.இந்த பெண் பேய்க்கும் பிச்சி பூவுக்கும் என்ன தொடர்பு? பேய் பிடித்தவர்கள் பிச்சி கொடியை தலையில் சூடி திரிவர் அதை கொண்டு பூசாரிகள் இவருக்கு பிடித்திருப்பது பெண் பேய் என்று உணர்வர்.

இத்தகயவர்களை அந்த பேயிடத்திலிருந்து காப்பாற்றவே பண்டைய காலத்தில் பேய் மகள் வழிபாட்டில் சுடுகாட்டில் எழுந்தருளியிருக்கக் கூடிய காளிக்கு பிச்சி கொடியை சாற்றி பேய் பிடித்தவரை விடுவிப்பர். மேலும் பிச்சி என்பது மல்லியில் ஒரு வகை நறுமணப் பூவாகும், இதை கூந்தலில் சூடி மகிழ்வர்.

இப்பூவானது கூந்தலை விட்டு விலக்கிய பின்னும் நறுமணம் வீசும் பண்புடையது. இப்பூவின் வாசத்திற்கு வண்டு வலம் வரும் அது மகளிருக்கு நல்ல சகுனமாகும்.‘‘கன்னங்கரிய குழலும்’’அங்க அமைவு சாத்திரமானது ெநடிய கூந்தலானது ஆகாது என்கிறது. இது ஆத்ம பலத்தை தருவதாக கருதப்படுகிறது. ஆடவர்களுக்கு நெடிய கூந்தல் என்பது துறவு வாழ்க்கையை மேற் கொள்பவன் என்பதை அறிவுறுத்துகிறது.

பெண்களின் கூந்தல் கரியதாகவும், அடர்த்தி யாகவும், இருப்பது கணவன் மேல் உள்ள அன்பை மிகுதிபடுத்துவதாக கூறப்படுகிறது. அபிராமி பட்டர் ‘‘கன்னங்கரிய குழல்’’ என்கிறார்.
சிவனிடத்து மிகுந்த அன்பை கொண்டவள் என்பதை வலியுறுத்தவே இச்சொல்லை பயன்படுத்துகிறார்.

பெண்கள் மலர் சூடியிருக்க வேண்டும் என்பது மரபு. அப்படி சூடியிருப்பதனால் அனைவரிடத்தும் மிகுந்த அன்பையும், தெய்வத்தின் அருளையும், செல்வச் செழிப்பையும் அடையலாம் என்கிறது சாத்திர நெறி.மலர் சூடுவதையும், எந்த மலரை சூடவேண்டும் என்பதையும், எந்த அளவு  தரிக்க வேண்டும் என்பதையும் சாத்திரங்கள் வரையறுத்திருக்கிறது.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்