சுகமான வாழ்வு அருளும் சுதர்சனர்



சுதர்சனர் என்றாலே சு + தரிசனம் என்று பொருள் கொள்ளவேண்டும். தரிசனம் என்பது காட்சி. சு என்பது நல்ல. சுதர்சனர் என்பது நல்ல சேவை அல்லது நல்ல காட்சி  என்று பொருள். இது தவிர அழகானவர், நல்ல பார்வையைத் தருபவர், ஞானத்தைத் தருபவர், பெருமாளைக் காட்டித் தருபவர் என்று பல அர்த்தங்கள் பொருந்தி வரும். சுதர்சன பகவானை நாம் ஒருமுறை பார்த்தாலே, நாம் கேட்காமலேயே நல்லது நடந்துவிடும். சுவாமி தேசிகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்கிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்கிறார்.
1.சுதர்சன வடிவங்கள்சுதர்சன வடிவங்கள் பல உண்டு. பல திருக்கோயில்களில் இவருக்கு சந்நதி உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கோயிலில் உள்ள ஏதோ ஒரு தூணில் இவர் சிற்ப வடிவில் இருப்பார். அவருக்கு வழிபாடு நடக்கும். சுதர்சனர் உக்கிர வடிவினர். வரப்பிரசாதி.

பற்பல பிரசித்தி பெற்ற கோயில்களில் சுதர்சனரின் பல்வேறு விதமான வடிவங்களைக் காணலாம். பெரும்பாலும் அவர் சக்கரத்தின் மத்தியில் 16 கரங்களோடு பல்வேறு ஆயுதங்களுடன், போருக்குப் புறப்படும் அவசரக் கோலத்தோடு காட்சி தருவார். பெரும்பாலும் அவருடைய இடது திருவடி முன்னே நிற்கும். இதிலும் ஒரு நுட்பமான கருத்து உண்டு. போருக்குப் புறப்படும் பொழுது அல்லது எதிரில் எதிரியை எதிர்கொள்கின்ற பொழுது, இடது காலை எடுத்து வைத்தால் அது வெற்றிக்கு அடையாளம். இதைத்தான் இப்பொழுதும் நம்முடைய ராணுவத்தில் முதலில் இடது காலை வைக்கின்ற (left right march) முறையைப் பின்பற்றுகின்றார்கள்.

2.கோடி சூரியர்களின் திரண்ட ஒளிசுவாமி வேதாந்த தேசிகர் பஞ்சாயுத ஸ்தோத்ரம் என்று இறைவனின் ஐந்து ஆயுதங்களுக்கும் ஒரு சிறிய துதிப் பாடலை இயற்றியுள்ளார். அதில் சக்கரத்தின் மகிமையை முதலாவதாக அவர் பாடுகின்றார்.

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!
தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்
படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

3. சுதர்சன தரிசனத்தால் கிடைக்கும் பலன்கள்

வேதாந்த தேசிகர் எட்டு பாடல்களால் வடமொழியில் சக்கரத்தாழ்வாரைப்பற்றி எழுதிய நூல் சுதர்சன அஷ்டகம். 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள். அப்போது வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப்பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது. அந்த மகிமைமிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மை
களும் கிடைக்கும். இந்த அஷ்டகத்தை தினசரி மாலை வேளையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து பாராயணம் செய்பவர்களுக்கு எல்லாவிதமான பீடைகளும் நீங்கி நன்மை பெருகும். கிரக தோஷங்கள் அடிபட்டு விடும். ஜாதகங்கள் நேர்மறையில் செயல்படும்.

ஆயுள் தோஷங்கள்கூட அடிபட்டுப் போய்விடும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும். எதிரிகளால் வருகின்ற ஏவல், பில்லி, சூனியம், கண்ணேறு முதலிய வித  விதமான தோஷங்களும் சுதர்சன அஷ்டகம் சேவிப்பதால் நீங்கி விடும்.

அதில் முதல் ஸ்லோகம் இது
ப்ரதிபட ஸ்ரேணிபீஷண, வரகுணஸ்தோமபூஷண
ஜநிபயஸ்தாந தாரண, ஜகதவஸ்தாநகாரண,
நிகில துஷ்கர்ம கர்ஸந, நிகமஸத் தர்மதர்ஸந,
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந, ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந
பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவருமான சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் பற்பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன். சுதர்சனரின் மகிமையை ஆழ்வார்
களும் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடியிருக்கிறார்கள்.

4. சுதர்சன சதகம்

ஸ்ரீமகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக “சுதர்ஸன சதகம்” விளக்குகிறது. சுதர்சனின் பெருமையை இந்நூல் விஸ்தாரமாக எடுத்துரைக்கிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்குத் துன்பங்கள், ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான். அவற்றைப் போக்கி மனஅமைதியைத்  தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார்.

5. பிரயோக அவசரத்தில் போர்க்கெழும் கோலம்

வலது 8 கையில் சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, அக்னி, மாவட்டி, தண்டம், சக்தி எனும் ஆயுதங்களும், இடது கையில் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் போன்ற 8 ஆயுதங்களை கையில் ஏந்தியிருப்பார். எண் கரங்கள் கொண்ட சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், ‘சில்பரத்தினம்’ குறிப்பிடுகிறது. ஆலயங்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயோக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் பெரும்பாலும் காணப்படுகிறார்.

6. சுதர்சன உபாசனை

இவரை ஆலயங்களில் வழிபடுவதுடன், வீட்டில் எந்திர வடிவில் வைத்தும் வழிபாடு செய்யலாம். பூஜைசெய்யும் பொழுது, அபிஷேகம் அர்ச்சனை, சுதர்சன அஷ்டகம் முதலியவற்றைச் சொல்லி கற்பூரதீபம் காட்டும் பொழுது சுதர்சனருக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உத்தமம். காயத்ரி மந்திரத்தை தினமும் 108 தடவைச் சொல்லி வருவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.

7. சுதர்சன யந்திரம்

தீவிரமாக யோகமார்க்கத்தில் வழிபடும் எந்த உபாசனையிலும், உபாசனைக்கு உரிய தேவனை யந்திர வடிவில் அமர்த்தி வழிபடுவது உண்டு. சுதர்சன வழிபாட்டில் யந்திர உபாசனை மிக முக்கியமானது. சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இருவகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பில் பரம்பொருளின் வடிவைக் கண்டு வழிபடுவது ஒரு முறை. சக்கரத்தில் சுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை மற்றொரு வகை.
சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன்களையும் கீழ்க்காணும் ஸ்லோகம் வர்ணிக்கிறது:

சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம்
ஜ்வாலா கேசம் த்ரிநேத்ரம்
ஜ்வல லலனனிபம் ஹார கேயூர வக்த்ரம்
வந்தே ஷட்கோண சக்ரம்
சகல ரிபுஜன ப்ராணா ஸம்ஹார சக்ரம்
‘சுதர்சன சதகத்தை ’  நெறி தவறாது முறைப்
படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய
ஆபத்திலிருந்தும் விடுபடலாம்.

8. அவதாரங்களில்  சுதர்சனர்

எல்லா அவதாரங்களிலும் சுதர்சனர் ஏதோ ஒருவிதத்தில் எம்பெருமானோடு இணைந்து இருப்பார். வராக அவதாரத்தில் அவர் எம்பெருமான் கோரைப்பற்களின் பிரவேசித்து இருந்தார். வாமன அவதாரத்தில் ஒரு தர்ப்பைப் புல்லின் நுனியில் அவர் ஆவேசித்திருந்தார். நரசிம்ம அவதாரத்தில் விரல் நகங்களில் பிரவேசித்து இரணியனை வதம் செய்தார். திரிவிக்கிரம அவதாரத்தில் எம்பெருமான் எழுவதற்கு முன் அவருடைய கைகளில் இருந்து சுதர்சனம் எழுந்தது என்பதை ‘‘ஆழி எழ” என்னும் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுகின்றார். பரசுராம அவதாரத்தில் கோடாலி நுனியில் சக்கரம் மறைந்திருந்தது. ராம அவதாரத்தில் அவர் விட்ட அம்புகளில் ஆவாஹனம் ஆகியிருந்தது.

இதை நிரூபிப்பதற்கு ஆழ்வாரின் பாசுரமும் உண்டு. ‘‘ஏழு மாமரம்துளை படச்  சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான்” என்ற பாசுரம் இந்த ரகசியத்தைத்  தெரிவிக்கும். வில் கையிலிருக்கும். அம்புதான் விடுபட்டு எதிரியை சாய்க்கும். அதைப்போல கையாழி கையிலிருந்து விடுபட்டு எதிரியைச் சாய்க்கும். ராமர் வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது. இந்த அவதாரங்களில் மறைந்திருந்த சக்கரத்தாழ்வார், கண்ணனுடைய அவதாரத்தின் பிற்பகுதியில் அவருடைய திருக்கரங்களில், அடிக்கடி அமர்ந்து எதிரிகளை அழித்தார் என்பதை மகாபாரதமும், பாரதமும் எடுத்துக் கூறுகின்றது.

9. திருமோகூர் சக்கரத்தாழ்வார்

மதுரை அழகர் கோவில், திருமோகூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி கோவில் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சிறப்பாகச் சேவை தருகிறார். முன்புறத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இங்கே காளமேகப் பெருமாள் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார். அளவற்ற சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம் இக்கோயிலில் உள்ளது. ஒருபுறம் ஸ்ரீயோக நரசிம்மர், மறுபுறம் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இக்கோயிலில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சக்கரத்தாழ்வார், 16 கைகளுடனும், 16 வகையான ஆயுதங்களுடனும் காட்சி தருகிறார். நரசிம்மர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் சந்நதியில், ஒரு கல்லில் சக்கரத்தாழ்வாரை சுற்றி 154 எழுத்துக்களும், 48 கடவுள்கள் உருவங்கள், 6 வட்டங்களுள் பொறிக்கப்பட்டுள்ளன.

10. திருவரங்கம்

ஸ்ரீரெங்கநாயகி சமேத அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தென்மேற்கில் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் தனிச் சந்நதியாக அருள்பாலித்து வருகிறார். கிழக்கு முகமாக சக்கரத்தாழ்வாரும், மேற்கு முகமாக யோகநரசிம்மரும் ஒரே கல்லில் அமைந்துள்ளது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இங்கும் எண்ணற்ற மக்கள் சிறப்பு வழிபாடு செய்வதைக் காணலாம்.

11. என்ன கிழமை ஏற்றது?

சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசிமாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய்தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும். மேலும், திருமணத்தடை அகன்று  விரைவில் திருமணம் கூடும். சுதர்சன மூர்த்தி சூரியனைப்போல் பிரகாசிப்பதால் அவரை வழிபட ஞாயிற்றுக்கிழமையும், சித்திரை நட்சத்திரத்தில் அவதாரம் செய்ததால் செவ்வாய்க்கிழமையும், வைகாசி மாதத்தில் அவதாரம் செய்ததால்
சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையும் ஏற்றது.

12. சக்கரத்தாழ்வார் பின்பக்கம் நரசிம்மர்

சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசிக்க ஏதுவாக, கருவறைச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் சந்நதியில் கண்ணாடி பொருத்தப்பட்டிப்பதைக்  காணலாம்.

13. பரமேஸ்வரன் சொன்ன பெருமை

சக்கரத்தாழ்வாரின் பெருமையை முதல் முதலில் கூறியவர் சாட்சாத் பரமேஸ்வரன். அகிர் புத்ந்ய சம்ஹிதை என்ற நூல் பரமேஸ்வரனின் உபதேசங்கள் அடங்கிய நூல். அதில் அவர் சக்கரத்தாழ்வார் பிரபாவத்தையும் அவரை வழிபடுகின்ற முறையையும் விஸ்தாரமாக எடுத்துரைக்கின்றார். அகிர் புத்ந்யன் என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும்.

14. இடது கரத்தில்...

சக்கரத்தாழ்வாருக்கு நேமிநாதன், சுடராழி, பொன்னாழி, இடஸ்பதி, ஹேதிராஜன், திகிரி என்று பல திருநாமங்கள் உண்டு. பெருமாள் வலது கரத்தில் எப்பொழுதும் சுடர்விட்டு பிரகாசிக்கும் சுதர்சனமூர்த்தி திருக்கோவிலூரில் இடது கரத்தில் காட்சி தருகின்றார். திருக்கண்ணமங்கையில்
பிரயோக சக்கரமாகக்  காட்சி தருகின்றார்.

15. சங்கு சக்கரங்கள் ஏந்திய கருடன்

திருவெள்ளியங்குடி தலத்தில் கருடன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை கருடனிடம் தந்து விட்டு, கோலவில்லி ராமனாகக் காட்சி தருகிறார். இந்த தலத்தில் மட்டும் கருடாழ்வார் கையில் சங்கு சக்கரங்கள் இருக்கும்.

16. சுதர்சன சாளக்கிராமம்

சாளக்கிராமங்களில் சக்கரரேகை உடைய சுதர்சன சாளக்கிராமம் மிகமிக சக்தி வாய்ந்த சாளக்கிராமம் ஆகும். இந்தச் சாளக்கிராமத்தை பூஜையறையில் வைத்து முறையாக வழிபட்டால் அவர்களுக்கு வேண்டிய விருப்பங்கள் நிறைவேறும்.

17. ஸ்ரீசுதர்சன காயத்ரி

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும். நேத்ராதிபத்ய தோஷம், குரு சாபம், கோசார தோஷம், பாலாரிஷ்ட தோஷம், அப மிருத்யூ தோஷம், சர்ப்ப சாபம், கோ சாபம் முதலிய கடுமையான தோஷங்கள் நீங்கும். இல்லங்களில் தகுந்தவர்களைக் கொண்டு சுதர்சன ஹோமம் செய்வது நல்லது. பல கிரக தீமைகளை போக்கும். வியாபார விருத்தி ஏற்படும்.

தினசரி வழிபாட்டில் உச்சரிப்பு பிழை இன்றி இம்மந்திரங்களை சொல்லலாம்.

“ஓம் சுதர்ஹநாய வித்மஹே மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்”
சகல கார்ய சித்தி தரும் சுதர்சன மாலா  மந்திரம் இது.
ஓம் ஸ்ரீம்  ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய
கோபீஜன வல்லபாய பராய பரமபுருஷாய பரமாத்மனே!

பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ராணி  ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய
ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்சனாய
தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக்க்ஷோபனகராய
ஹும்பட்ப்ரஹ்மணே  பரம் ஜ்யோதிஷே  ஸ்வாஹா”
ஆனி மாதத்தில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் (20.6.2021) சக்கரத்தாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. இருப்பினும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் போது சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதோடு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மிகவும் விசேஷ தினமாகும்.

விஷ்ணுபிரியா சுதர்ஷன்