இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-69 தமிழ் ஞானப் பழம்



கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாகத் தமிழ் இனம் தலை நிமிர்கிறது.செம்மொழித் தமிழின் தெய்வமாக செவ்வேள் முருகன் போற்றப்படுகிறார். கல் என்றால் மலை, மலை தோன்றியது. உடன் அதில் முருகன் தோன்றினான்!சங்கத் தமிழின் கடவுள் வணக்கமாக திருமுருகாற்றுப் படை நூல்தான் திகழ்கிறது. செம்மாந்த புலமை கொண்ட நக்கீரர் இயற்றிய நூல் அது.பழுத்து முது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்.இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழிகாணும்
என்று அருணகிரிநாதர் ‘தமிழ்ப்பலகை கவிப்புலவன் இசை’ என்று திருமுருகாற்றுப் படையைப் புகழ்கின்றார். தமிழ் எழுத்துக்கள்

வல்லினம்; மெல்லினம், இடையினம் என்று ஒலிக்கேற்பப் பிரிக்கப்பட்டுள்ளது.‘முருக’ எனும் நாமத்தில்
‘மு’ - மெல்லினமாகவும் ‘ரு’ இடையினமாகவும் ‘க’ வல்லினமாகவும் அமைந்துள்ளது.உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு. முருகப்பெருமானுக்கு ஆறிரு (6x2 :12) தடந்தோள்கள்.
மெய்யெழுத்துக்கள் பதி னெட்டு, முருகனுக்கு விழிகளாக அமைந்துள்ளன. (முகங்கள் ஒவ்வொன்றிலும் நெற்றிக் கண் உள்ளது)

ஆயுத எழுத்துக்கு நிகராக வேல் ஆயுதம் அமைகிறது.
இன எழுத்துக்கள் ஆறு ஆறு என அமைந்திருப்பது.
முருகனின் ஆறு முகங்களைக் குறிக்கிறது.

எனவே முருகனே தமிழ் என கந்தபுராணம் போற்றி மகிழ்கின்றது.
கண்நிகர் மெய்யும் சென்னி
கணநிகர் இனத்தின் கூறும்
திண் அமை தோள்களே போல்
திகழ் தரும் உயிரும், வேறொன்று
எண்ணுதற்கு அரிய தான
எஃகமும் இயலிற் காட்டும்
புண்ணிய முனிக்கோன் செவ்வேன்
பொற்பதத்து  அடிமை தானே!

தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்து ‘தகப்பன் சாமி’ யாக முருகன் திகழ்கின்றான்.
பிரணவத்தின் பொருளைத் தமிழில் தான் விவரித்தார் முருகப் பெருமான்
என்கிறார் அருணகிரிநாதர்.

‘கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே….. என்றும்
‘இருசெவிகுளிர இனியதமிழ் புகலவோனே….
என்றும் பாடுகின்றார். மேலும்,

‘அருணதலி பாதபத்மம் அது நிதமுமேே துதிக்க
அரியதமிழ் தான் அளித்த மயில்வீரா!
அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வமுத்திஉனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே!
என்றும் மொழியோடு தொடர்பு
படுத்தியே முருகனைப் போற்றுகின்றார்.
‘ஒம்’ என்னும் பிரணவத்தின் பொருளை விரித்து உரைத்ததால்
தமிழ் ஞானப்பழமாகக் கந்த பெருமானைக் கவிஞர்கள்
வாழ்த்துகிறார்கள்.

பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

உலகைச் சுற்றிவந்தும் பழம் பெறாத காரணத்தால் கோபித்துக் கொண்டு பழனிமலையில் கோவணாண்டியாக நிற்கிறான் குமரன் என்ற கதையை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் தண்டபாணிபதிகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் கற்பனை நலம் துலங்க அற்புதமாகக் கூறுகிறார்.

பிரணவம் என்னும் ஞானப் பழத்தின் சாரத்தை சிவபெருமானுக்குத் தந்தவர் முருகப்பெருமான். அத்தகைய முருகனுக்குப் போய் நாவிற்கு மட்டுமே இன்பம் தரக்கூடிய இப்பழத்தைத் தருவதற்கு நாணப்பட்டுத் தான் சிவபிரான் தரவில்லை. என்றும் ஒரு பழம் முருகனுக்குக் கிடைக்கவில்லையே தவிர, அதற்கு மேலாக உலகிலுள்ள
அத்தனைக் கனிகளின் சாரமும் இணைந்து பஞ்சாமிருதமாகப் படைக்கப்படுகிறது என்றும் சுங்கரதாசர் பாடுகின்றார்.

‘ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு
நாம் உண்ணவும் கொடுத்த
நல்ல குரு நாதன் உனக்கு என்னவிதம்
இக்கனியை
நாம் ஈவது என்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை’

‘ஒரு கனி நீ தரவில்லை ஆயினும் என்றனுக்கு
உலகுதனில் கனிவகைகள்
உள்ளன எல்லாம் உரித்து ஒன்றாய்த் திரட்டி உடன்
உயர்ந்த கற்கண்டு முதலாய்
வரும் மதுரமான எல்லாம் பிசைந்து அன்பர் தினம்
வந்து வந்து இடைவிடாமல்
வந்தனா்ச்சனைகளோடு அபிஷேகமும் செய்யும்
வண்மையைப் பாராய்!

தண்டமிழ்க் கொடை கொடுத்து அண்டினோர்க்கு அருள் உதவும்
தண்டபாணித் தெய்வமே
தமிழ் முனிவன் அருணகிரி பணிய அருள்
புரியும் ஒரு
தண்டபாணித் தெய்வமே!

தமிழ் ஞானப் பழமாக விளங்கும் பழனி மலைப் பரமனை வணங்குவோம். ‘அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை’ என்று
அருணகிரியார் பாடுகின்றார்!
அது என்ன அதிசயம்?

மூலவர் விக்ரகம் கல்லோ, பஞ்ச உலோகமோ, அதைச் சிற்பமோ அல்ல! நவபாஷாணம்! அரிய மருத்துக் கலவை முதல் அதிசயம் இது.ஒரு கனி கிடைக்காது மலையில் ஒதுங்கிய பாலகனுக்கு உலகில் உள்ள எல்லாக் கனிகளும் பஞ்சாமிருதமாக அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இரண்டாவது
அதிசயம்.

காவடி, மொட்டை, விபூதி இவை தொடரும் அதிசயங்கள் குறிப்பிடத்தக்க மேலான அதிசயம். கோவணாண்டியாக விளங்கும் பால தண்டாயுத பாணி.
தன்னை வணங்கி வழிபடும் பக்தர்களைக்
கோடீஸ்வரர் ஆக்குகிறார்!

தமிழ் ஞானப் பழமான தண்டாயுத பாணியை
தலைபணிந்து வணங்குவோம்!.

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்