நாதமுனிகளின் கழல் பணிவோம்-நாதமுனிகள் அவதார தினம் 22.6.2021



நாதமுனிகள் கிபி 823 ம் ஆண்டு ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் பௌர்ணமி நாளில் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் என்கின்ற ஊரிலே அவதரித்தார்.
இவருடைய தந்தையார் பெயர் ஈஸ்வர பட்டாழ்வார். அவதரித்த குலம் சொட்டை நம்பி குலம். இளமையிலேயே கல்வி கேள்விகளிலும், பகவத் பக்திகளிலும், வேத ஆகம சாஸ்திரங்களிலும் மிகச் சிறந்தவராக விளங்கிய நாதமுனிகள் இசையிலும் யோக சாஸ்திரத்திலும் வல்லவராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதமுனி.

இதிலே ஸ்ரீரங்கம் மறைந்து, நாதமுனி என்கிற பெயரே நிலைத்தது. நாதமுனி என்கிற பெயருக்கு ஏற்ப இவர் ஓம்கார நாதத்தினை, மனதின் உள்ளே செலுத்தி, ரீங்காரமான எம்பெருமானின் இருப்பை தன்னுள்ளே உணர்ந்தவராக இருந்தார்.திருக்கோயிலுக்குச் சென்று கைங்கரியம் செய்வது, மாலைகள் கட்டிக் கொடுப்பது, இசை பாடுவது என்கின்ற தொண்டில் முழுமையாக  ஈடுபட்டிருந்த  இவருடைய கவனத்தை ஒரு பாடல் மாற்றியது. ஒரு முறை மேல் கோட்டையிலிருந்து வந்திருந்த யாத்திரிகர்கள் இறைவன் திருமுன்பு
ஆராவமுதே அடியேன் உடலம்நின் பால் அன்பாலே
நீராய் அலைய கரைய உருக்குகின்ற
நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்
திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
- என்கிற பாசுரத்தை உருக்கமாகப் பாடினார்கள்.

இந்தப் பாசுரத்தை அவர்கள் இசை கூட்டி, அழகான குரலில் பாடியதைக்  கேட்டதும் நாதமுனிகள் செவிகள் நிறைந்தன. அவர் மனம் முழுக்க அப் பாடலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
“ஆராவமுதே” - எத்தனை அழகான சொல்.

அப்படியானனால் ஆறிய அமுதமும் உண்டோ?
பாடல் சிந்தனையைத்தூண்டியது.

அதிலும் நிறைவாக “குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்” என்கின்ற வரியில் அவர் கவனம் சென்றது.
அவர்கள் பாடி நிறுத்தியவுடன்,
நாதமுனிகள் ஆர்வத்தோடு கேட்டார்.

“ஐயா,இப்பாசுரம் யாருடையது.?”
“இதை அருளிச்செய்தவர் நம்மாழ்வார்.இப்பாசுரங்களின் தொகுப்பை திருவாய்மொழி என்று சொல்வார்கள்”“அருமை.அருமை. ஞானத் தமிழ் கேட்டு என் செவிகள் பயன் பெற்றன. இது அந்தாதி தொடையில் இருக்கிறது.இப்பாடலின் கடைசி பாசுரம் ஆயிரத்துள் இப்பத்தும் என்று வருகின்றது. மற்ற பாடல்கள் உங்களுக்குத்  தெரியுமா? “என்று கேட்க,” எங்களுக்கு இந்தப் பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்” என்று அவர்கள் சொல்ல, “அப்படியானால் மீதி 990 பாடல்கள் இருக்க வேண்டுமே” என்று அவர் மனம் நாடியது. அப்பாடல்களைத்  தேடி பலப்பல இடங்களில் ஓடியது.அது கிடைக்கும் வரை உணவும் உறக்கமும் இன்றி மனம் வாடியது.

கடைசியில் அவர் ஆழ்வாரின் அவதாரத்  தலமான ஆழ்வார் திருநகரிக்குச்  சென்றார். அங்கே பராங்குசதாசர் என்கின்ற பெரியவரைச்  சந்தித்து விசாரித்தார். அப்பொழுது நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின்12 பாடல்களையும்  அவர் தந்தார்.“இப்பாடல்களை 12 ஆயிரம் முறை ஒரே நோக்கத்தோடு நம்மாழ்வாரை தியானித்து பாராயணம் செய்தால், நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார். உங்கள் விருப்பம் நிறைவேறும்” என்றார்.

உடனடியாக அந்தப் பன்னிரெண்டு பாடல்களையும் பன்னீராயிரம் முறை பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சை யோக வழியில் நிலைநிறுத்தி ஜெபம் செய்தார் யோகீஸ்வரரான நாதமுனிகள்.

அதன் பலனாக நம்மாழ்வார் காட்சியளித்து நாதமுனிகளுக்கு அவர் விரும்பிய ஆயிரம் திருவாய்மொழிப் பாசுரங்களையும் ,மற்ற ஆழ்வார்களின் 3000 பாசுரங்களையும், அதற்கான விளக்கத்தையும் தந்து மறைந்தார். நாதமுனிகள் தான் தேடிப் போன அசல், வட்டியோடு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார்.இனி இந்தத் தங்கத் தமிழை தரணியெங்கும் பரப்புவதே தன்னுடைய தலையாய நோக்கம் என்று முடிவெடுத்தார். அப்பாடல்களை எல்லாம் ஆயிரம் ஆயிரம் பாடல்களாகத் தொகுத்து நான்காயிரமாக்கினார்.