பலம் தரும் பீம ஏகாதசி-பீம ஏகாதசி 21.6.2021



ஒவ்வொரு ஏகாதசிக்கும் பின்னால் ஒரு கதை உண்டு. அந்தக் கதைக்குப் பின்னால் சில தத்துவங்களும், தர்ம சாஸ்திர நுட்பங்களும் உண்டு. அந்தக் கதையின் மூலம் இந்த நுட்பங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆனி மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்று பெயர்.
அதென்ன பீமனுக்கு தனி ஏகாதசி என்று நினைக்கலாம். பீம  ஏகாதசியின் கதையை ஊன்றிக் கவனித்தால்  அதில்  தர்மசாஸ்திரமானது எத்தனை எளிமையாக ஏகாதசி பற்றியும், உபவாசம் குறித்தும் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது என்பதைத்  தெரிந்து கொள்ளலாம்.ஏகாதசி என்பது உபவாசம் இருப்பது. உபவாசம் என்பதற்கு அன்று முழுவதும் உணவு உண்ணாமல் பட்டினியாய் இருப்பது என்று மட்டும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவிதத்தில் அது உண்மைதான். ஆனால், இது புறம்சார்ந்த விஷயம். காரணம், உணவு என்பது உடலுக்கானது.

இந்த உடல் ஏகாதசி போன்ற விரதம் இருக்க ஒரு கருவியே தவிர, ஏகாதசி விரதம் இருந்து, அதனுடைய பலனை அடைவது இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய ஆன்மாதான் என்பதை உணர வேண்டும். உபவாசம் என்பதற்கு இறைவனை நினைத்துக் கொண்டு அவன் அருகில் இருப்பது அல்லது இறைவனுக்கு அருகில் நம்மை கொண்டுபோய் சேர்ப்பது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஏகாதசி உபவாசம் என்பது இறைவனிடத்திலே கொண்டுபோய்ச்  சேர்க்கக்கூடிய உபவாசம். அன்றைக்கு உண்ணக் கூடாது. உறங்கக்கூடாது என்று உடலுக்கும் சில விதிமுறைகளை வகுத்துத் தந்தார்கள்.

உண்ணாமல் இருப்பதும், உறங்காமல் இருப்பதும் எல்லோருக்கும் முடிகின்ற காரியமா? முடியாதவர்கள் இந்த விரதத்திற்குத் தகுதி இல்லாதவர்களாகப் போய்விடுகிறார்களா என்று பல கேள்விகள் எழுகிறது.

அதற்குத்தான்  “பீம  ஏகாதசி” கதை விடை சொல்லுகின்றது.நம்முடைய சாஸ்திரம் விதிகளைச் சொல்லுகின்ற பொழுதே விதி விலக்குகளையும் சொல்லுகின்றது.தினசரி நீராடுவது அவசியம் என்று சொல்லுகின்ற தர்ம சாஸ்திரம், ஒருவனுடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காத பொழுது, மந்திர ஸ்தானம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்கிறது. ஏகாதசி விரதம் என்பது சில உடல்நிலைக்  குறைபாடு உள்ளவர்களால் இருக்க முடியவில்லை என்கிற நிலையில், என்ன செய்வது என்பதற்கான  விதிவிலக்கைச்  சொல்கிறது.

பஞ்சபாண்டவர்களில் பீமனுக்கு வ்ருகோதரன் என்று பெயர். அதிகம் உண்பவன். ஒரு வேளை கூட, உணவு இல்லாமல் அவனால் இருக்கவே முடியாது. அவனுடைய வயிறு பெரியதாக இருக்காது. ஆனால், அவனுக்கு மிக அதிகமான உணவு தேவைப்படும்.அதனால்தான் குந்திதேவி, பஞ்சபாண்டவர்கள் எடுத்துவந்த பிச்சையின் பெரும்பகுதி உணவை, இவனுக்கு அளித்துவிட்டு, மீதி இருக்கக்கூடிய சிறிய பகுதி உணவை  மற்றவர்களுக்குப்  பிரித்துத் தருவது வழக்கம்.

பஞ்சபாண்டவர்கள் ஒருமுறை, “மனிதன் துன்பப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் ?” என்கின்ற நீதி சாஸ்திரத்தை  ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, வியாசர்  வந்தார்.அவரிடம் இந்தக்  கேள்வி கேட்கப்பட்டது.அப்பொழுது, “யாரொருவர் ஏகாதசி விரதத்தை  முழுமையாகக்  கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு பாவங்கள் தீயினில் தூசாகும். பாவங்களால் தான் துன்பங்கள் வருகின்றன. பாவங்கள் தீரும் பொழுது துன்பங்கள் தீர்ந்து விடும்.

எனவே, ஏகாதசி விரதத்தை ஒவ்வொருவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்” என்று சொல்லி, அந்த ஏகாதசி விரதத்தைக்  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அவர்களுக்கு உபதேசித்தார்,தசமி அன்று ஒரு பொழுது உணவு கொண்டு, ஏகாதசி முழு நாளும் உணவு கொள்ளாமல் இறைவனை நினைத்து, சகஸ்ரநாமங்களையும் சொல்லி வழிபட்டு, மறுநாள் துவாதசி சூரிய உதயத்தின் பொழுது இறைவனை வணங்கி, உணவை உட்கொள்கின்ற பாரணை செய்ய வேண்டும், அன்றும் முழுமையாக இறைவனைச்  சிந்தித்து உறங்காமல் இருக்க வேண்டும் என்றெல்லாம், ஏகாதசி விரதத்தின் வழிமுறைகளை போதித்தார் வியாசர்.

அப்பொழுது பீமன் மிகுந்த வருத்தத்தோடு காணப்பட்டான். அவனுடைய வருத்தத்திற்குக் காரணத்தை கேட்டார் வியாசர்.பீமன் பதில் சொன்னான்.
“முனிவரே!  நீங்கள் சொல்லுகின்ற இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைக்  கேட்க கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அதனை நான் கடைபிடிக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

ஆனால், என்னுடைய வயிறு அதற்கு ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. ஒரு வேளை கூட, உணவு இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியுமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கின்றபொழுது நான் கிட்டத்தட்ட நான்கு வேளைகள், உணவு இல்லாமல் எப்படி இருக்க முடியும்? எனவே, என்னைப் போன்றவர்களுக்கு ஏகாதசி விரதங்கள் சாத்தியமில்லையோ என்று நினைக்கின்றேன். இந்த ஏகாதசி விரதத்தின் புண்ணியத்தை அடைய எனக்கு ஏதேனும் வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.

உடனே வியாச பகவான் அவருக்குச் சொன்னார். “இதோ பார் பீமா! விதிகளைச் சொல்லும்  தர்ம சாஸ்திரங்களில் விதிவிலக்குகளும் இருக்கின்றன. நீ கவலைப்பட வேண்டாம். வருகின்ற ஆனி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் சிறப்புடையது. மற்ற 12 மாதங்களில் வருகின்ற ஏகாதசிகளை  விட இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு.

இந்த ஏகாதசி விரதம் ஒருவர் இருந்துவிட்டால் , மற்ற ஏகாதசி விரதங்கள் அத்தனையும் அனுஷ்டித்தால் என்ன பலன் கிடைக்குமோ,  அந்தப்  பலன் கிடைத்துவிடும். எனவே, பீமா! நீ வருகின்ற ஏகாதசி ஒரே ஒருநாள் மட்டும் விரதத்தை இருந்துவிடு. இதன் மூலமாக மற்ற ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்த பலன் உனக்கு கிடைத்து விடும்” என்று சொன்னவுடன், மகிழ்ச்சியோடு பீமன்  ஏகாதசி விரதத்தை இருந்தான்.

12 மாதங்களில்  வருகின்றன 24 ஏகாதசி களின் பலனை இந்த ஒரு ஏகாதசியில்பெற்றான். வியாச பகவான் சொல்லி, பீமன் இந்தப்  பலனை அடைந்தான்.
எனவே, இந்த ஏகாதசி அவன் பெயராலேயே “பீம ஏகாதசி” என்று வழங்கப் படுகின்றது. இந்த ஏகாதசி விரதத்தை தேவாதி தேவர்களும் கடைபிடித்து பலன் அடை கின்றார்கள். சாட்சாத் பகவானே ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பதாகச்  சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

இந்த ஏகாதசியில் நீரை கூட உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு “நிர்ஜல ஏகாதசி” என்று ஒரு பெயரும் உண்டு.இந்த ஏகாதசியில்தான் பிரம்மா குபேரனைத்  தோற்றுவித்தார். அவனுக்குச்  சகல நிதிகளையும் தந்தார்.  எனவே, இந்த ஏகாதசி உபவாசம் இருப்பவர்களுக்கு, குறைவற்ற செல்வம் நீங்காமல் இருக்கும் என்ற பலச்சுருதி சொல்லப்பட்டிருக்கிறது.

விஷ்ணுபிரியா சுதர்சன்