தெளிவு பெறுஓம்



?ஆனித் திருமஞ்சனம் என்றால் என்ன?
- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
“சித்திரையிலோண முதற் சீரானியுத்திரமாம்
 சத்து தனுவா திரையுஞ் சார்வாரும்-பத்திவளர்
 மாசியரி கன்னி மருவு சதுர்த்தசிமன்
 றீசரபிஷேகத் தினமாம்”

என்பது நடராஜப் பெருமானுக்கு உரிய அபிஷேக நாட்களைக் குறிக்கின்ற வெண்பா பாடல் ஆகும். ஒரு வருடத்தில் ஆறு நாட்கள் நடராஜப் பெருமானுக்கு விசேஷமான முறையில் அபிஷேகம் செய்ய வேண்டிய நாட்கள் என இந்த பாடல் சொல்கிறது.
சித்திரை மாதத்தில் வருகின்ற திருவோண நட்சத்திர நாள், ஆனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திர நாள், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மூன்று மாதங்களிலும் வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் மற்றும் மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாள் ஆகியவை நடராஜருக்கு திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகின்ற அபிஷேகத்தைச் செய்ய வேண்டிய நாட்கள் ஆகும்.

இந்த ஆறு நாட்களில் ஆனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திர நாள் ஆனித் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனித் திருமஞ்சனத் திருநாளும் மார்கழி மாதத்தில் வருகின்ற ஆருத்ரா தரிசனத் திருநாளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் ஆனித் திருமஞ்சன நாள் என்பது இயற்பியல் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு மிகுதியான சக்தியைத் தரவல்லது ஆகும். அண்ட வெளியை ஆய்வு செய்கின்ற அமெரிக்க விஞ்ஞானிகளும் கூட அம்பலத்தில் ஆடுகின்ற ஆடலரசன் ஆகிய அந்த நடராஜப்பெருமானை ‘அஸ்ட்ரானமி’ எனப்படும் ஆகாய அறிவியலின் ஆண்டவனாக ஏற்றுக்கொள்கின்றனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம் ஆக விளங்குவது சிதம்பரம்.

சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

இவ்விரு நாட்களிலும் நடராஜப்பெருமானுக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று அங்கிருந்து ஆடிக்கொண்டே கனகசபைக்குள் எழுந்தருளும் தரிசனக் காட்சியினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர்.ஆனித்திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும் சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை

நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரஹத்தின் ஆளுமை பெற்ற ராசிகள். கல்விக்கு அதிபதி புதன். அதிலும் வானவியல் அறிவியல் அறிவினைத் தருவது புதன்.

ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப்பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறைய பேர் வருவதை நாம் இன்றும் காண முடியும். ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஆலங்காயம் உள்பட அனைத்து வானவியல் ஆய்வு மையங்களிலும் இந்த ஆனி மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஓய்வின்றி செயல்படுவர்.

பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும், மேலோட்டமாக அணுகாமல் அதனை ஆழ்ந்து ஆராயும் பக்குவத்தைத் தருபவர் புதன். அதனால்தான் அவரது ஆட்சியினைப் பெற்ற மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றி ருப்பர். ஆக அவரது ராசிகளில் ஆன்ம காரகன் ஆகிய சூரியனும் மனோகாரகன் ஆகிய சந்திரனும் சஞ்சரிக்கும் இந்த ஆனித் திருமஞ்சன நாள் அறிவியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஆனித் திருமஞ்சனத் திருநாளில் நடராஜப் பெருமானை தரிசிப்பவர்களுக்கு அறிவியல் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவும் ஆத்ம ஞானமும் கிட்டும் என்றால் அது மிகையில்லை.

?கடந்த மாதம் எனது தந்தையார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருடைய உடலைக் கூட எங்களால் பார்க்க இயலவில்லை. குடும்பத்தில் உள்ளோர் அனைவருக்கும் நோய்தொற்று இருந்ததால் எந்த ஒரு சடங்கையும் செய்ய முடியவில்லை. அவர் உயிரிழந்த நேரத்தில் நானும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அந்திமச்சடங்கு செய்ய இயலாமல் போய்விட்டது.

குடும்பத்தினர் அனைவரும் பரிபூரணமாக குணமடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. இந்தச் சூழலில் நான் எனது தந்தைக்கு உரிய ஈமச்சடங்கினை செய்வது எப்படி? இதுபோன்ற பிரச்சினையால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் அவதிப்படுவதாக அறிகிறேன். இதனால் பித்ருதோஷம் உண்டாகுமா? சாஸ்திர முறைப்படி இதற்கான தீர்வுதான் என்ன?
- நாராயணமூர்த்தி, கோயமுத்தூர்.

தந்தைக்கு சரியான நேரத்தில் ஈமச்சடங்கினை செய்ய இயலவில்லையே என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் இந்த நேரத்தில் பலரும் இதுபோன்ற சூழலில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. இந்நிலையில் நிச்சயமாக பித்ருதோஷம் என்பது உண்டாகாது.

சாஸ்திரத்தில் இதற்கான விதிவிலக்கு என்பது உண்டு. கடும்வறட்சி, பஞ்சம், கடும்புயல், மழை, வெள்ளம் முதலான இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள் பரவுகின்ற காலம், அரசாங்க கட்டுப்பாடுகளினால் வெளியே செல்ல இயலாத நிலை போன்ற அசாதாரணமான சூழ்நிலையில் இறந்தவருக்கு உரிய இறுதிச்சடங்குகளை செய்வதற்கு சாஸ்திரமே விதிவிலக்கு அளிக்கிறது.

தற்போது நடந்துகொண்டிருப்பது என்பது கொரோனா என்னும் கொடிய நோய்த்தொற்று அதாவது கொள்ளைநோய் பரவுகின்ற காலமாக இருப்பதால் இந்த காலக்கட்டத்தில் இறப்பவர்களுக்கு நிதானமாகவே கர்மாவினைச் செய்து முடிக்கலாம். அதனால் எந்தவிதமான தோஷமும் வந்து சேராது. அதற்காக நீண்ட காலதாமதமும் கூடாது. நமது உடல்நிலையும் கால சூழலும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தாமதிக்காது உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்துவிட வேண்டும்.

உங்கள் விவகாரத்தில் தந்தையின் உடலைக்கூட குடும்பத்தினர் யாரும் காண இயலவில்லை என்று எழுதியுள்ளீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் குணமடைவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். எல்லோரும் பூரணமாக குணமடைந்ததும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக குடும்ப சாஸ்திரிகளிடம் தகவலைச் சொல்லி ஈமச்சடங்குகளை செய்ய வேண்டும்.

சம்ஸ்காரம் செய்வதில் துவங்கி இறுதி வரை அத்தனை சடங்குகளையும் செய்ய வேண்டும். அதாவது இறந்தவுடன் உடலுக்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் அவசியம் செய்ய வேண்டும். உடல்தான் தற்போது இல்லையே என்ற ஐயம் வேண்டாம். தர்ப்பைப்புல்லில் கூர்ச்சம் கட்டி அதில் இறந்தவரை ஆவாஹனம் செய்வார்கள்.

அதற்குரிய அக்னி காரியங்களைச் செய்து அந்த கூர்ச்சத்தினை சவமாகக் கருதி அதனை நெருப்பில் இடுவார்கள். இதற்கு தர்ப்பை சம்ஸ்காரம் என்று பெயர். அதனைத் தொடர்ந்து எரிக்கப்பட்ட சாம்பலை நீர்நிலையில் கரைக்க வேண்டும். அஸ்தி கரைப்பது போல இந்த நிகழ்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து கரும காரியங்கள் அத்தனையையும் முறைப்படி செய்து முடிக்க வேண்டும்.

மூன்று மாதங்கள் கழித்துச் செய்கிறோமே, இதனால் ஏதேனும் தோஷம் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. வேறு வழியின்றி காலதாமதம் ஆவதனால் எந்த தோஷமும் உண்டாகாது. அதே நேரத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் நிச்சயமாக தோஷம் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விதிமுறைகள் உங்களுக்கு மாத்திரமல்ல, உங்களைப் போல் கர்மாவினை உரிய நேரத்தில் செய்ய இயலாமல் தவிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

ஒருவேளை தாய் அல்லது தந்தை இந்தியாவில் இறந்துபோய் கர்மாவினைச் செய்ய வேண்டிய மகன் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்து இங்கே வர இயலாமல் போயிருந்தால் அவர் வசிக்கும் நாட்டிலேயே தனது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை செய்யலாம். அவர் வசிக்கும் நாட்டிலேயே அதற்குரிய வசதி வாய்ப்புகள் இருந்தால் காலதாமதம் செய்யாமல் அந்த பகுதியில் வசிக்கும் புரோஹிதரை தொடர்பு கொண்டு அவரது ஆலோசனையின்படி சடங்குகளை முறையாகச் செய்து முடித்துவிட வேண்டும்.

இறுதிச்சடங்கு மாத்திரமல்ல, வருடந்தோறும் செய்ய வேண்டிய சிராத்தம் (திவசம்), லாக் டவுன் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக செய்ய இயலாமல் போய் இருந்தால் அதனை அப்படியே விட்டுவிடக் கூடாது. நிலைமை சீராகி உடல்நிலையும் ஒத்துழைக்கும் பட்சத்தில் அடுத்து வரக்கூடிய அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை அல்லது இறந்தவருடைய திதி இவற்றில் எது முதலில் வருகிறதோ அந்த நாளில் விடுபட்ட சிராத்தத்தையும் செய்து முடிக்க வேண்டும்.

பித்ருகர்மாக்களைப் பொறுத்த வரை மிகுந்த சிரத்தையுடனும் பொறுமையுடனும் செய்ய வேண்டும். கடமைக்கு என்று வேண்டாவெறுப்பாக செய்யக்கூடாது. ஈடுபாடின்றி செய்தால்தான் பித்ருதோஷம் என்பது உண்டாகி பரம்பரையை பாதிக்கும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வெகுவிரைவில் பரிபூரணமாக குணமடைந்து உங்கள் தகப்பனாருக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை முறையாகச் செய்வதோடு தந்தையாரின் ஆசிர்வாதத்துடன் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

?குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்த பையனுக்கு மூத்தவளாகப் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்கிறார்களே, இது சரியா?
- ஆர். சண்முகம், உளுந்தூர்பேட்டை.

‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்ற சொல் வழக்கை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்த ஆணுக்கு, மூத்தவளாகப் பிறந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவி வருகிறது. ஆணோ, பெண்ணோ ஒரு பிள்ளையோடு நிறுத்திவிடுகிற இந்த காலத்தில் தலைச்சனுக்கு தலைச்சனைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இனி வரும் காலத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மட்டுமே இருப்பார். இந்த சொல்வழக்கினை உண்மை என்று நம்பினால் எதிர்காலத்தில் யாருக்குமே திருமணம் என்பதே நடக்காமல் போய்விடுமே.. உண்மையில் இந்த சொல்வழக்கிற்குப் பொருள் என்ன தெரியுமா...

 ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்) அதே ஆனி மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி) ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல். இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவரும் தலைச்சன் பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில் ஆனி மாதம் விடுத்து பிற மாதங்களில் திருமணத்தை நடத்தலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை. உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாமல் தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா