வெஃகாமை



குறளின் குரல்: 149

பிறர் பொருளைக் கவர விரும்பக் கூடாது என்ற கருத்தை விளக்குவதற்கென்றே வள்ளுவர் ஒரு தனி அதிகாரத்தைப் படைக்கிறார். வெஃகாமை என்பது அந்த அதிகாரத்தின் தலைப்பு. (இன்று வெஃகாமை என்ற சொல் புழக்கத்தில் இல்லை.) நமக்கிருப்பது போதும் என்கிற தன்னிறைவை இந்த அதிகாரம் வலியுறுத்துகிறது.
`நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.’
(குறள் எண் 171)

பிறருடைய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடி கெடும்.
குற்றமும் அவனுக்கு வந்து சேரும்.
`படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.’
(குறள் எண் 172)

நீதிக்கு அஞ்சுபவர்கள் பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழிதரும் எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்.
`சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்!’
(குறள் எண் 173)

அறத்தினால் வரும் நிலையான இன்பங்களை வேண்டுவோர், நிலையில்லாத இன்பங்களை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறமல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
`இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.’
(குறள் எண் 174)

ஐம்புலன் ஆசைகளையும் வென்றவர்கள் ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என்று நினைத்துப் பிறர் பொருளைக் கவர மாட்டார்.
`அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.’
(குறள் எண் 175)

மற்றவர் பொருள் மீது ஆசை கொண்டு அறிவற்ற செயல்களைச் செய்தால், பலநூல் பயின்று பரந்த அறிவு பெற்று என்ன பயன்?
`அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.’
(குறள் எண் 176)

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால் அவன் கெட்டழிய நேரிடும்.
`வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.’
(குறள் எண் 177)

பிறர் பொருளைக் கவர்ந்து வளம் பெற ஒருவன் விரும்புவானேயானால் அந்த வளத்தின் பயன் நன்மை தருவதாக இருக்காது.
`அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன் கைப்பொருள்.’
(குறள் எண் 178)

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளாமல்
இருத்தலாகும்.
`அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறனறிந் தாங்கே திரு.’
(குறள் எண் 179)

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்று எண்ணும் அறிவுடையோரின்
பெருமையை அறிந்து திருமகள்தானே அவரிடம் போய் இருப்பாள்.
 `இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்
ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு.’
(குறள் எண் 180)

விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அது அழிவைத் தரும். அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமையானது எப்போதும் வெற்றியைத் தரும்.நம் குடும்பத்துத் தாய்மார்கள் பலரும் போதும் என்ற மனம் படைத்தவர்கள்தான். கணவருக்கும் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறிவிட்டு இறுதியில் எஞ்சியதையே அவர்கள் உண்கிறார்கள். தங்கள் ஆசைகளைக் குறைத்துக் கொண்டு குழந்தைகளின் ஆசைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். குழந்தைகளுக்குப் புதுத்துணி எடுத்துக் கொடுத்து விட்டு, தங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பழைய துணியே போதும் என நினைக்கும் தகப்பனார்களும் நம்மிடையே நிறையப் பேர் உண்டு. முன்னெல்லாம் மக்கள் பகட்டிலும் ஆடம்பரத்திலும் நாட்டம் செலுத்தியதில்லை. எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதில் மனநிறைவு கண்டார்கள். எளிய வாழ்க்கை போற்றத்தக்க கலாச்சாரமாக முன்பு கருதப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
ராமாயணத்தில் குகன், சபரி இருவரும் போதும் என்ற மனமுடைய பாத்திரங்கள்.

இராமபிரானின் உடன் பிறவாத் தம்பியர் மூவர். குகன், சுக்கிரீவன், வீடணன்.சுக்கிரீவன் ராமனுடன் கொண்ட நட்பு ஒப்பந்த நட்பு. வாலியைக் கொன்று என் மனைவியை என்னுடன் சேர்த்து வை, உன் மனைவியைத் தேடிக் கண்டடைய நான் உதவுகிறேன் என்பதே சுக்கிரீவன் மனநிலை. வீடணன் ராமனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் ராமன் இலங்கை அரசை அவனுக்குப் பரிசாகத் தந்தான். இலங்கைக்கு வீடணனை மன்னனாக்கினான்.  ஆனால், குகன் எதையும் கேட்கவுமில்லை.

எதிர்பாராமல் அவனுக்கு எதுவும் கிட்டவு மில்லை. ராமனது அன்பே போதும் என்று நினைத்தது அந்த வேடனின் கள்ளம் கபடமற்ற மனம்.  அதுபோலவே சபரி ராமன் மேல் கொண்ட அன்புக்காகவே அன்பு செலுத்தினாள். ராமனிடம் அவள் எதையும் கேட்டுப் பெறவில்லை. எச்சில் கனி கொடுத்த அவள் எதிர்பார்த்ததெல்லாம் ராமனின் அன்பை மட்டுமே.  குகன், சபரி இருவரும், போதும் என்ற மனம் படைத்தவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கான உதாரணங்கள்.

சங்க காலம் தொட்டே `போதும் என்ற
மனத்துடன் வாழ்வதே சிறந்தது` என்ற சிந்தனை நம் தமிழ் மரபில் உண்டு.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய
புறநானூற்றுப் பாடலும் இதே கருத்தையே வலியுறுத்துகிறது.
`தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’
(புறநானூறு 189)

உலகம் முழுவதையும் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டுவந்து ஆண்டு அனுபவிக்கிறான் ஓர் அரசன். இன்னொருவன் பகலிரவு பாராமல் தன்னுடைய உணவுக்கு வேட்டையாட விலங்கினைத் தேடிக் கொண்டிருக்கிறான். இவர்களில் யாராய் இருந்தால்தான் என்ன? இருவரும் உண்பது ஒரு நாழி உணவே. உடுத்துபவை மேலாடை கீழாடை என இரண்டு ஆடைகளே. மற்றவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது.

அப்படியிருக்கையில் செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்வது? துய்க்கலாம் என்றால் மிஞ்சித் தப்பிவிடுபவை பல. செல்வத்துப் பயன் என்பது ஈதல்தான் என்ற உயரிய கருத்தை உணர்த்துகிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.ஒரு துண்டுப் பென்சில் காணாமல் போனபோது மகாத்மா காந்தி அதைக் கஷ்டபட்டுத் தேடிக் கண்டுபிடித்துப் பின்னர் அதையே பயன்
படுத்தத் தொடங்கினார் என்பது காந்தியின் வரலாற்றில் வரும் ஒரு சம்பவம். சம்பவம் அதிக முக்கியத்துவம் இல்லாததுபோல் தோன்றும் சிறிய சம்பவம்தான். ஆனால், அது நமக்குச் சொல்லும் கருத்து மிகப் பெரியது.

எந்தப் பொருளையும் வீணாக்காமல் நம்மால் இயன்றவரை அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். போதும் என்ற மனத்தின் வெளிப்பாடுதான் அது.  அதோடு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பலரது உழைப்பு கலந்திருக்கிறது. ஒரு பொருளை அரைகுறையாகப் பயன்படுத்தி வீண் செய்யும்போது, நாம் அந்தப் பொருளை உற்பத்தி செய்ய உழைத்த அத்தனை பேரின் உழைப்பையும் அவமதிக்கிறோம் என்றாகிறது. அடுத்த மனிதர்களின் உழைப்பை மதிக்காது அலட்சியப்படுத்துவது சரியல்ல.

நூறாண்டு வாழ்ந்த தவமுனிவரான காஞ்சி மகாசுவாமிகள் குடிசையிலேயே வசித்தார். பல நேரங்களில் மாட்டுத் தொழுவத்தின் அருகில் அவர் தன் இருப்பிடத்தை அமைத்துக்
கொண்டார். ஆடம்பரத்தை முற்றாகத் தவிர்த்தார்.  அவருடைய அன்றாடத் தேவைகள் மிக மிகக் குறைவு. ஒரே ஒரு பிடி அவலைச் சாப்பிட்டுவிட்டு நாள் முழுவதும் வேறு எதையும் சாப்பிடாமலிருக்க அவரால்தான் முடியும். தன்னைத் தேடிவந்த செல்வத்தைத் தேவைப்படும் அன்பர்களுக்கு அப்படியே கொடுத்துவிடும் உயர்ந்த மனம் அவரிடம் இருந்தது.

பற்றாற்றான் பற்றைப் பற்றிய அவர் பொருட்பற்றை அறவே துறந்தவர். போதும் என்ற மனமே அவர் பெற்ற மாபெரும் செல்வம்.  துறவிகளுக்குப் போதும் என்ற மனம் தேவை என்பதற்கும் அவர்கள் பணம் சேர்ப்பதில் ஆசை கொள்ளக் கூடாது என்பதற்கும் அண்மைக் காலத்தில் மிகச் சிறந்த உதராணமாகத் திகழ்ந்தவர்கள் மகாசுவாமிகள், மகரிஷி ரமணர், சேஷாத்ரி பரப்பிரம்மம் போன்றோர். ஒருசிறிதும் பொருட்பற்றே இல்லாமல் வாழ்ந்த மெய்ஞ்ஞானிகள் அவர்கள்.

காலஞ்சென்ற எழுத்தாளர் பெரியசாமித் தூரன் பல அருமையான தமிழ்க் கீர்த்தனைகளின் ஆசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள், குழந்தைகளின் மனநலம் தொடர்பான நூல் எனப் பல வகைகளில் தமிழ் மொழியைத் தம் எழுத்துக்களால் அணிசெய்தவர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். வாழ்நாள் முழுதும் துறவு மனநிலையிலேயே பற்றற்று வாழ்ந்து வந்தார்.  பள்ளியில் ஆசிரியராக இருந்தார் அவர். அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது.

இக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக இருக்குமாறு அவிநாசிலிங்கம் கேட்டுக் கொண்டதன்பேரில் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார் தூரன். அந்தப் பணிக்கு இன்ன சம்பளம் என நிர்ணயித்துப் பணி நியமன உத்தரவை அனுப்பினார் செட்டியார். உத்தரவைப் பெற்றுக் கொண்ட தூரன் உடனே அவிநாசிலிங்கம் அவர்களை நேரில் சந்தித்தார். தனக்கு அவ்வளவு பணம் தேவைப்படாது என்றும் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லியும் வேண்டுகோள் விடுத்தார்! அவிநாசிலிங்கம் அடைந்த வியப்பிற்கு ஓர் அளவே இல்லை. தூரனின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிறகு அவருக்குக் குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டது!

இப்படியெல்லாமும் கூடத் தமிழகத்தில் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழிக்குப் பெரியசாமித் தூரன் வாழ்வல்லவா விளக்கம் தருகிறது!ஒரு சகோதரி மிக உயர்ந்த மனம் படைத்தவர். தொண்டுள்ளம் கொண்டவர். தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரியும் அவர் மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் தனக்கு அந்த மாதச் செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் கணக்கிட்டு எடுத்து வைத்துக் கொள்வார். எஞ்சிய பணம் முழுவதையும் பார்வையற்ற சகோதர, சகோதரிகளின் செலவுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

அவரின் எதிர்காலத் தேவைக்காகக் கொஞ்சமேனும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டாமா எனக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:`என்றோ வரப்போகிற என் எதிர்காலம் இருக்கட்டும். இப்போது கண்ணெதிரில் இந்தப் பார்வையற்றவர்களின் நிகழ்காலமே சிக்கலாக இருக்கிறதே?'எத்தகைய மனப்பக்குவம் இருந்தால் இத்தகைய ஒரு பதிலைச் சொல்லத் தோன்றும்?`மக்களைப் பெற்ற மகராசி' திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன்
குரலில் ஒலிக்கும் `மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி..' என்ற புகழ்பெற்ற பாடலை அனைவரும் அறிவர். அந்தப் பாடலில் வரும் சில வரிகள் நம் சிந்தனைக்குரியவை.  

`சேத்த பணத்தை சிக்கனமா
செலவு செய்ய பக்குவமா
அம்மா கையில கொடுத்துப் போடு
செல்லக்கண்ணு
அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு..'
-என்பது போதுமென்ற மனத்தின்
அடையாளம் தானே?

அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுவதால் நிகழும் சிக்கல்களை இன்றைய நாளிதழ்கள் நிறையப் பேசுகின்றன. இதே காலகட்டத்தில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவில் பயணிகள் மறந்து தவறவிட்ட தங்க நகைகளையும் பெரும் தொகையையுமெல்லாம் தாங்கள் எடுத்துக் கொள்ள ஆசைப்படாமல் காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகளையும்
அதே நாளிதழ்கள் பதிவு செய்கின்றன.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படலாகாது என்ற உயரிய நற்குணம் எளியவர்கள் பலரிடம் இன்னமும் இருக்கிறது.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் மாபெரும் பரிசு என்பது மன நிம்மதி. பிறர் பொருளைக் கவராமல், மன நிம்மதியோடு வாழ வழிசொல்கிறது வள்ளுவம். வெஃகாமை என்னும் நற்குணத்தைப் பயின்று வள்ளுவர் வழி நின்று மன நிம்மதி பெறுவோம்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்