ஸ்ரீ கிருஷ்ண அமிர்தம் - 3 (பகவத் கீதை உரை)



அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

அர்ஜுனனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். அதாவது அவன் மூலமாக உலகோருக்கு எழக்கூடிய எல்லா தர்ம சந்தேகங்களுக்கும் விடையளிக்க ஆயத்தமானான்.அர்ஜுனன் மேலும் மேலும் மாய்ந்து போனான்: ‘‘தங்களுக்குச் சொந்தமானவற்றை, ஏன் தங்கள் உயிரையும்கூடத் துறக்கத் துணிந்து என் முன் நிற்கிறார்களே, அவர்கள் மாய்ந்த பின் நான் அடையப்போகும் வெற்றிக்கு ஒரு மரியாதை இருக்குமா?

இதோ பார், இதோ பார், என் கண்முன்னே ஆசார்யார்கள், தகப்பன்மார்கள், பிள்ளைகள், பாட்டன்மார்கள், மாமன்மார்கள், மாமனார்கள், பேரன்மார்கள், மைத்துனர்கள், சம்பந்திகள் என்றுஎன் அனைத்து உறவினர்களும் பதட்டத்தோடு நிற்கிறார்களே, இவர்களை நான் எப்படி எதிர்ப்பேன், எப்படிக் கொல்வேன், எப்படி அதை ‘வெற்றி’யாகக் கொண்டாடுவேன்?’
கிருஷ்ணன் இன்னமும் அதேபுன்முறுவல் மாறாத வசீகரத் தோற்றத்துடன் அர்ஜுனன் புலம்புவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். ஆற்றாமை காரணமாகப் பொங்கிக் கொதிப்பவர்களை எந்த இடையூறும் செய்யாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாலேயே அவர்களுடைய மனப் பாரம் விலகும் என்ற மனோதத்துவத்தைப் பிரயோகித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

ஆனால் கிருஷ்ணனின் மோகனப்புன்னகை அர்ஜுனனை மேலும் மனக் கிளர்ச்சி கொள்ளவே வைத்தது. அவனுடைய மன உளைச்சல் அவ்வளவு எளிதாக அடங்குவதாக இல்லை. சாதம் கொதிக்கிறது என்றால் அது முழுவதுமாக வெந்தவுடன் கொதித்து அடங்கும். ஆனால் சுண்ணாம்புக் கிளிஞ்சல் கொதிக்கிறது என்றால் அது முற்றிலும் நீராகும்வரை கொதித்துக்கொண்டுதான் இருக்கும். அர்ஜுனனின் மனமும் கிளிஞ்சல் கொதிகலன் போலவே இருந்தது.

ஏதான்ன ஹந்துமிச்சாமி க்னதோபி மதுசூதன
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ கிம்நு மஹீக்ருதே (1:35)

‘‘மதுசூதனா, என்மீது ஏதேனும் வன்மம் கொண்டு என்னைக் கொல்ல இவர்கள் வந்தார்கள் என்றாலும், இவர்களில் யாரையும் கொல்ல, ஏன் காயப்படுத்தி என்னைத் தற்காத்துக்கொள்ளவும் நான் விரும்பவில்லை. இந்தப் போரில் வெற்றி பெறுவதன் மூலம் எனக்கு மூவுலகும் கிடைக்குமென்றால்கூட அதுவும் எனக்கு ஏற்புடையதல்ல. இது இப்படியிருக்க, ஒரு சிறு பரப்பளவுள்ள நிலத்துக்காக நான் போரிட விரும்புவேனா? வேண்டாம். எனக்கு எந்த சுகமும் வேண்டாம். வலியால் துடிதுடிக்க என் ரத்த பந்தங்கள் மாயும் கொடுமையும் நடைபெறவேண்டாம்.’’

எதிரிகளின் மீது பச்சாதாபம் காட்டும் அர்ஜுனன் தன் ஆற்றாமைப் பேச்சின் எந்த வரியிலும் தன் திறமையைக் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளாததை கிருஷ்ணன் கவனித்தான். போர் என்று வந்துவிட்டால், யார் அடுத்தவரைவிட பலசாலியோ அவர்தான் வெற்றி பெறுவார்.

அதாவது பலவீனரை மாய்ப்பார். இங்கே அர்ஜுனன் ‘அவர்களை எப்படி மாய்ப்பேன்’ என்று மறுகும் தோரணையில் அவர்கள் யாராலும் தன்னை வெற்றி கொள்ள முடியாது என்ற தன்னம்பிக்கையும், வீரமும் அடிநாதமாக இழையோடியதை மெல்லத் தலையசைத்தபடி கவனித்தான் கிருஷ்ணன். அதாவது எதிரே நிற்கும் எந்த எதிரியாலும் தன்னை வெல்ல முடியாது; தானே அவர்கள் அனைவரையும்  மாய்க்கக் கூடியவன் என்ற பெருநம்பிக்கை. அதனால் அவர்கள் ‘பிழைத்துப் போகட்டும்’ என்பதாகிய கருணையை, தான் அவர்களுக்கு எதிராகப் போராட முடியாது என்றகழிவிரக்கப் போர்வையில் வெளிப்படுத்தினான் அர்ஜுனன்.

நிஹத்ய தார்தராஷ்ட்ரான்ந கா ப்ரீதி ஸ்யாஜ்ஜநார்தன
பாபமேவாச்ரயேதஸ்மான் ஹத்வைதானாததாயின (1:36)
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ரான்ஸ்வபாந்தவான்
ஸ்வஜனம் ஹி கதம்  ஹத்வா ஸுகின ஸ்யாம மாதவ (1:37)

‘‘திருதராஷ்டிரரின் பிள்ளைகள் அனைவருமே பாபிகள்தான். (‘அதாதாயின’ என்ற பதத்தின் மூலம் பெரும் பாபிகளைக் குறிப்பிடுகிறான் அர்ஜுனன். யார் அந்தப் பெரும் பாபிகள்? குடியிருக்கும் வீட்டிற்குத் தீ வைப்பவன், விருந்தினருக்கு உணவில் விஷம் கலந்து பரிமாறுபவன், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்பவன், ஒருவனுடைய செல்வத்தை, நிலத்தை அல்லது மனைவியைத் திருடிக்கொள்ள முயல்பவன் ஆகியோரே பெரும் பாபிகள். திருதராஷ்டிரனின் புதல்வர்கள் இத்தகைய பாபச் செயல்களைக் கூசாமல் செய்யக்கூடியவர்கள்) துரியோதனனின் தலைமையில் இயங்கும் மகாபாபிகள் இவர்கள்.

இத்தகைய பாபிகளைக் கொல்வதால் எனக்கு சந்தோஷம் ஏற்படும் என்று நினைக்கிறாயா, ஜனார்த்தனா? மாறாக இந்தப் பாபிகளைக் கொன்றால் அதனால் எனக்குப் பெரும் பாபம் ஏற்பட்டுவிடுமோ என்று நான்அஞ்சுகிறேன். மாசு படிந்த குளத்தில் கைவிட்டு, கலக்கி என் கைகளையும் மாசுபடுத்திக்கொள்ள நான் விரும்பவில்லை. இவர்களில் பலர் பாபிகளாக இருக்கலாம்; ஆனால், சிலர் பாபிகளாக இல்லாமல், நல்ல மனசுக்காரர்களாக இருக்கலாம் - ஆனாலும் இவர்கள் அனைவரும் என் சொந்தக்காரர்கள். இவர்களைக் கொன்றுவிட்டு நான் மட்டும் சுகமாக இருந்துவிட முடியுமா? சொல், மாதவா! என் கண்ணெதிரிலேயே என் அம்புகளால் தாக்கப்பட்டு வலி வேதனையால் துடிதுடிக்க இவர்கள் இறக்கிறார்கள் என்றால் பின்னாளில் இந்த கோரக் காட்சி என் மனதை விட்டு நீங்காதிருக்குமே, அந்த சோகத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?’’

இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறான் இவன் என்று சிந்தித்தபடியே அர்ஜுனனைக் கனிவாகப் பார்த்தான் கிருஷ்ணன். தனக்கு ஆதரவாக கிருஷ்ணன் பேசமாட்டேனென்கிறானே என்று மேலும் ஏக்கப்பட்டான் அர்ஜுனன். அதனாலேயே தொடர்ந்து தன் மனக்குழப்பத்தை வெளிப்படுத்தினான்.

யத்யப்யேதே ந பச்யந்தி லோபோபஹதசேதஸ
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் (1:38)
கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பிர்ஜநார்தன (1:39)

‘‘எதிரே நிற்பவர்கள் பேராசைக்காரர்கள்தான். அதனாலேயே விவேகம் அழிந்தவர்கள். அதனாலேயே தலைகுனிவோடு நிற்கிறார்கள். ஒரு குலத்தை அழிப்பதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை இவர்கள் அறிந்தவர்கள் இல்லை. அதனால் தாம் பிறருக்குச் செய்யும் கேடுகள் தமக்கே திரும்ப வரும் என்பதையும் உணர்ந்தவர்கள் இல்லை. உடன் பழகியவர்களுக்கு, நெருங்கின சொந்தங்களுக்கு துரோகம் செய்வதால் எத்தகைய பாபம் சூழும் என்பதும் புரியாத அறிவிலிகள் இவர்கள்.

சரி, இவர்கள்தான் இப்படி. ஏதும் அறியாத உன்மத்தர்கள். ஆனால் நாம் அப்படியா? இவர்களுடன் இப்படி ஏட்டிக்குப் போட்டியாக நாமும் சண்டையிடுவதால் அவர்கள் மேற்கொண்டிருந்த இழிசெயல்களை நாமும் மேற்கொள்வதாகத்தானே அர்த்தம்? அதாவது அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை, அப்படித்தானே?’’பாப குணம் கொண்ட ஒருவனைஅறிவுறுத்தித் திருத்த முற்படலாம்; அவன் தன் பாபத்தை உணரச் செய்யலாம் என்று கருதுகிறான் அர்ஜுனன். ‘அவனுடைய மனமாற்றத்துக்கு நம் அறிவுரை ஒரு கருவியாக அமையலாம்; அதுவே அவன் தொடர்ந்து அதுபோன்ற பாபச் செயல்களைச் செய்யாதபடி தடுக்கலாம். அதை விட்டுவிட்டு போரை ஒரு கருவியாக கையிலெடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இப்படி இவர்களை மாய்ப்பதால் திருந்தக்கூடிய வாய்ப்பினை நாம் இவர்களுக்கு அளிக்க மறுக்கிறோம். இந்தப் போரைக் காணும் இவர்களுடைய சந்ததியினர் அல்லது இப்போரைப் பற்றிக் கேள்விப்படும் இவர்களைச் சார்ந்தவர்கள் என்ன நினைப்பார்கள்? பாபிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டது என்று கருதுவார்களா அல்லது இப்படிக் கொன்றதற்காக நம்மைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று நமக்கு எதிரான தம் வன்மத்தை வளர்த்துக் கொள்வார்களா? குலம் குலமாக இந்த சண்டை இப்படித் தொடரத்தான் வேண்டுமா? அதற்கு நாமே வழிகாட்டலாமா?

நாமேஅதற்கு  காரண கர்த்தாவாக இருக்கலாமா? போரில் தோல்வி கண்டவர்கள் அது தமக்குத் தரப்பட்ட சரியான தண்டனை என்றளவில் அமைந்துவிடுவார்களா? அல்லது நம்மை உடலிலும், உள்ளத்திலும் காயப்படுத்திவிட்டார்களே என்ற காழ்ப்புணர்ச்சியால் மேலும் மேலும் பாபங்கள் செய்யத் துணிவார்களா? தன்னால் இயலாவிட்டாலும், தமக்கு ஏற்பட்ட ‘அவமானத்து’க்குத்  தம் சந்ததி மூலம் பழிவாங்கத் திட்டமிடமாட்டார்களா?’ என்றெல்லாம் அர்ஜுனன் சிந்தித்திருக்கக் கூடும். குலக்ஷயே ப்ரணச்யந்தி குலதர்மாஸநாதனாதர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னமதர் மோபிபவத்யுத (1:40)

‘‘கிருஷ்ணா, கொஞ்சம் சிந்தித்துப் பார். ஒரு குலம் அழிகிறதென்றால் அந்தக் குலத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமா அழிகிறார்கள்? இல்லை, அதுவரை பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த புராதன குல தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்றுதானே அர்த்தம்? அப்படி தர்மங்கள் அழிகிறதென்றால் இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருக்கும் அதர்மங்கள் உடனே ஓடோடி வந்து நம்மைச் சூழ்ந்து கொள்ளாதா?

ஆதியிலிருந்து ஒரு குலம் வழிவழியாக இன்றைய சூழ்நிலைவரை வளர்ந்து வந்திருக்கிறதென்றால், அதன் மூதாதைய நாகரிகங்களும், பண்புகளும், பல நல்ல பழக்க வழக்கங்களும் கூடவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்றுதான் அர்த்தம். இப்படி ஒரு குலத்தை வேரோடு அழிப்பதென்றால், அந்த பண்புகளையும் கூடவே சேர்த்து நாம் அழிக்கிறோம் என்றுதான் பொருள். ஒரு குறிப்பிட்ட குலத்தாரை அழிக்கவும் நமக்கு உரிமையில்லை; அதனால் அவர்களுடைய அந்தப் பண்புகளை அழிக்கவும் நமக்கு அதிகாரமில்லை.

வழிவழியாக மேன்மேலும் வளர்ந்து வரவேண்டிய அந்த நாகரிகங்களைத் தொடர்ந்து பின்பற்ற அந்தக் குலத்தில் யாருமில்லாதபடி நாம் செய்வது தர்மமா? நம் சம்பிரதாயம், நம் மூதாதையர் காலத்துப் பழக்க வழக்கம் என்று நாம் வம்சம் வம்சமாக அனுசரிப்பதுபோலதானே நாம் அழிக்க நினைக்கும் குலத்தாரும் தொடர விரும்புவார்கள்? அப்படி அவர்களைத் தொடர விடாமல் தடை செய்ய நமக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று மனசுக்குள் பொங்கிப் பொங்கிக் கேட்கிறான் அர்ஜுனன்.

இதற்கும் மாயவனின் மௌனமும், மென் புன்னகையும்தான் பதிலாகக் கிடைக்கிறது அவனுக்கு. அதனால் தன் மனவேதனையை மேலும் வெளிப்படுத்துகிறான்.
அதர்மாபிவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர (1:41) ‘‘குலதர்மத்தை அழிப்பதால் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் அதர்மங்கள் என்னென்ன கொடுமையான விளைவுகளை உண்டாக்குமோ! என்னென்ன தீய செயல்களை மக்கள் மேற்கொள்வார்களோ!

முக்கியமாக பெண்கள் முறைதவறி, நெறி பிறழ்ந்து நடந்து கொள்வார்களே! அந்தக் குலப் பெண்களின் கற்புநெறி கேலிக்குரியதாகிவிடுமே! அதுமட்டுமா, பாரம்பரிய சம்பிரதாயங்களையெல்லாம்கடைபிடிக்கும் பழக்கமும் அவர்களை விட்டுப் போய்விடுமே! இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்தப் பெண்கள் எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களோ அந்தக் குலத்துக்கே பெரிய அவப்பெயர் உண்டாகுமே! ஒழுக்கம் கெட்டப் பெண்களை எல்லா குலத்தவர்களும் விலைபேசி, உரிமை கொண்டாடஆரம்பிப்பார்களே!’’

ஒரு குலத்தின் மிகப் பெரிய அநீதி அக்குலப் பெண்கள் நெறி பிறழ்வதுதான். இது அதர்மத்தின் அதிகபட்சக் கொடூரம். தன் முன்னோர்கள் கடைபிடித்துவந்த சம்பிரதாயங்கள், ஒழுக்க நெறிகளை இவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க முடியாதபடி அதர்மம் அவர்களை ஆட்கொள்ளும். அதனால் அவர்கள் தம் போக்குபோல நடந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். பொதுவாக ஒரு ஆண் தன் குலவழக்கத்திலிருந்து மாறுபடுவானானால் அவனை திசை திருப்பி, அவனுக்கு மனமாற்றத்தைஏற்படுத்தி, மீண்டும் குலவழக்கத்தை அனுசரிக்க வைக்கும் பெரும் பொறுப்பு அந்தக் குலப் பெண்ணுக்கு உண்டு. ஆனால் அவளே ஒழுக்க எல்லையை மீறினாள் என்றால் அதற்கு, அவளை அப்படி உட்படுத்திய அதர்மம்தானே காரணம்?

இப்படி அதர்மம் தலைவிரித்து ஆட நாம் அனுமதிக்கலாமா? இதற்காவது எந்த குலத்தையும் அழிக்காமல், அதன் தொடர்ச்சியாக அந்த குலதர்மத்தையும் அழிக்காமல், நாம் இந்தப் போரிலிருந்து விலகிவிடுவோம். அவர்களுடைய குலதர்மமும் அழியாது; நம்மையும் அதர்மம் தீண்டாது; தர்மம் தொலைந்த வெற்றிடம், அதர்மத்துக்கு இருப்பிடமாக அமையவும் செய்யாது “என்று மனம் குமைகிறான் அர்ஜுனன்.

ஸங்கரோ நரகாயைவ குலக்நானாம் குலஸ்ய சபதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா (1:42)‘‘யோசித்துப் பார் கிருஷ்ணா, இப்படி ஒரு நிலைமை உருவாக நாம் காரணமாக இருக்க வேண்டுமா? அப்படி நாமே காரணமாக அமைந்துவிட்டால் ஒழுக்கம் கெட்டவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனையைவிட மிகக் கடுமையான தண்டனை நமக்குக் கிடைக்கும் என்பது உனக்குத் தெரியாதா? இவ்வாறு குலத்தையும், குல ஒழுக்கத்தையும் அழிப்பவர்கள், தங்கள்பித்ருக்களுக்கு - மறைந்துவிட்ட முன்னோர்களுக்கு - செய்யும் நீத்தார் கடன் எதுவும் பயனற்றதாக அல்லவா ஆகிவிடும்?’’ஆர்ப்பரித்த அர்ஜுனனின் மனம் அடங்குவதாயில்லை; கிருஷ்ணனும் அவன் சொல்வதை முழுவதுமாகக் கேட்கும் தன்அமைதியை இழப்பதாகவுமில்லை!

(கீதம் இசைக்கும்)