திருமூலர் திருமந்திரம் சுட்டும் சிவவடிவங்கள்



திருக்கயிலாய மலையின் பெருங்காவல் தலைவராகிய திருநந்திதேவரின் திருவருள் பெற்ற சீடர்களில் ஒருவனாகவும் அணிமா முதலிய எட்டு வகையான சித்துக்களும் கைவரப் பெற்ற சிவயோகியார் ஒருவர் தென்னாடு நோக்கி சென்றபோது தில்லை தரிசனம் கண்டார். பின்பு காவிரியில் நீராடி அதன் தென்கரை வந்தடைந்தனர்.
அவர் சேர்ந்த அப்பதி சாத்தனூர் என்னும் திருவூராகும்‌‌. அவரின் புறத்தே சாத்தனூராரின் பசுக்களை மேய்த்தமூலன் என்பவன் இறந்து கிடக்க, அவன் சவத்தினைச் சூழ்ந்து பசுக்கள் கதறி நிற்பதைக் கண்டார்.

பசுக்களின் துயர்களைய விரும்பிய அச்சிவயோகியார் தன் சித்து வலிமையால் தன் உடலை ஒருமறைவு இடத்தில் கிடத்தி விட்டு பரிகார பிரவேசம் எனும் தகைமையால் இறந்து கிடந்த மூலன் உடலுள் தன் உயிரைச் செலுத்தினார். மூலன் எழுந்தது கண்டு பசுக்குலம் மகிழ்ந்தன.

பசுக் கூட்டத்தோடு அன்றைய நாளை மூலன் வடிவில் கழித்த அச்சிவயோகியார், மாலை வந்ததும் பசுக்களோடு சாத்தனூர் சென்றாள். உரியவர்கள் இல்லங்களுக்கு பசுக்கள்செல்ல நிறைவாக மூலன் இல்லத்திற்கே சிவயோகியார் அவன் வடிவிலேயே செல்லும் நிலை ஏற்பட்டது. அவரை மூவரின் மனைவி தீண்ட முற்பட்டபோது விலகியே நின்றார். அந்நிலை கண்ட அப்பெண்ணும் சுற்றத்தாரும் வருத்த முற்ற போது மறுநாள் பசுக்கூட்டத்தோடு முதல் நாள் தன் உடலை மறைத்து இடத்திற்குச் சென்றார். அங்கு அது காணப் பெறவில்லை. ஈசனின் செயல் அது வென் மனநிலை நெளிந்தான்.

மூலனின் சுற்றத்தாரிடமும் உண்மை நிலையினை எடுத்துரைக்க அவர்களும் அவ்விடம் விட்டகன்றனர். அருகிலிருந்த ஆவடு தண்துறை (திருவாவடு துறை)சிவாலயம் நோக்கிச் சென்றார். பெருமானை வணங்கி கோயிலின் முன்பிருந்த படர் அரசு எனும் அரசமரத்தின் கீழ் அமர்ந்து சிவயோகம் பெற்று ‘‘திருமந்திரம்” எனும் மூவாயிரம் செய்யுட்கள் அடங்கிய நூலைப் பாடினார். மூலனின் உடலின் கண் இருந்தவாறு அவர்பாமாலை சூட்டினால் திருமூலர் என்ற பெயரையே நிலையாகப் பெற்றார்.

திருக்கயிலத்திலிருந்து சாத்தனூர்வந்த சிவயோகியாரின் மறைத்து வைத்த உடலை சிவபெருமான் ஏன் கண்ணில் அகப்படா வண்ணம் இணைத்தார் என்பதற்கான காரணத்தைச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் தெளிவு பட விளக்கியுள்ளார். சிவபெருமான் நமக்காகத் தந்த ஆகமத்தின் பொருள் தனை உத்தவர் அழகு தமிழில் அறிந்து உணர வேண்டும் என்பதற்காகத்தான் அச்செயல் நிகழ்ந்தது எனப் பதிவு செய்துள்ளார்.

“தண் நிலவாய் நடையாய் தாம்தந்த ஆகமப் பொருளை.
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்புகள்
 கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் தரப்பிற்கு
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசன் அருள் என உணர்ந்தார்”
 - என்பதே சேக்கிழார் வாக்காகும்.

திருவாவடுதண்துறை சிவாலயத்தில் முன்பு திருமந்திரம் அருளப் பெற்ற இடத்தில் இன்றும் படர் அரசமரம் பசுமையோடுதழைத்து நிற்பது அரிய காட்சியாகும். அத்திருக்கோயிலிலும், அறுபத்து மூவர் பிரதிமங்கள் இடம் பெற்றுள்ள சிவாலயங்கள் அனைத்திலும் திருமூல நாயனாரின் திருவுருவம் கல்லிலோ அல்லது செம்பிலோ வடிக்கப் பெற்று இடம் பெற்றுத் திகழ்ந்த போதும், தாராசுரம், திருப்பழனம், தீர்த்தாண்டதானம் ஆகிய சிவாலயங்களில் காணப் பெறுகின்ற திருவிழாக்கள் குறிப்பிடத்தக்கவைகளாகும்‌‌. இரண்டாம் இராஜராஜ சோழனால் பெரியபுராணத்திற்குக் காட்சி வடிவம் தர வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பெற்ற தாராசுரம் சிவாலயத்தின் ஸ்ரீவிமானத்தின் சுவரில் முப்பதாவது காட்சியாக திருமூலரின் உருவம் காட்டப் பெற்றுள்ளது. திருவாவடுதுறை கோயில் எதிரே படர் அரசூமரம், இடையே பத்மாசனத்தில் அமர்ந்தவாறு யோகம்செய்பவராகத் திருமூலர் திகழ்கின்றார்.

தாடியின்றி, நீள் செவிகளுடன் காணப்பெறுகின்றார்.
திருப்பழனம் சிவாலயத்தில் பசு ஒன்று சிவலிங்கத்திற்குப் பால் சொரிய அருகே அரசமரத்தின் கீழ் தாடி மீசையுடன் பத்மாசனத்தில் அமர்ந்த யோகியாகத் திருமூலர் காணப்பெறுகின்றார். இராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானம் சிவாலயத்தில் உள்ள சிற்பக் காட்சியில் பசு ஒன்றுசிவலிங்கத்திற்கு பால் பொழிந்து நாவினால் வருடி அருகேயுள்ள அரசமரத்தின் கீழ் நீண்ட‌ தாடி, விரிந்த சடைகள் ஆகியவற்றோடு பத்மாசன கோலத்தில் மிக அழகோடு திருமூல தேவ நாயனார் காட்சி நல்குகின்றார். பன்னிரு திருமுறைகளும் ஒன்றான திருமந்திரம் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப் பெற்று விளங்குகின்றது. ஆகமங்கள் கூறும் அனைத்தும் இந்நூலில் அடங்கியுள்ளன‌. சதாசிவலிங்கம் பற்றியும் ஞான லிங்கம் பற்றியும் பல பாடல்கள் விரிவும் கூறுகின்றன.

“உருவும் அணுவும் உருவோடருவும்
 மருவு பரசிவன் மன் பல்லுயிர்க்குங்
குருவு மென நிற்கும் கொள்கையன் ஆகும்
 தருவு என நல்கும் சதாசிவன் தானே ”(1763)
 -என்ற பாடல் வாயிலாக உருவம், உருவத்துடன். அருவம், பின்பு அருஉருவம் மூன்றாகப் குரு நிலையில் சதாசிவன் விளங்குகின்றான் என்பது அவர் காட்டும் சதாசிவன் வடிவமாகும்.
“தன்மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும்
 தன் மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்கும்
 தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம்
 தன் மேனி தானாகும் தற்பரந்தானே”
 (1750)

- என்று சதாசிவ வடிவத்தின் தகைமைதனை விவரித்துள்ளார்‌.அந்த சதாசிவத்தின் வடிவந்தனை நாம் கண்டு களிக்க வேண்டுமாயின் இரண்டு தலங்களுக்குச் செல்ல வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் எனப் பெறும் மூன்று கோயில்களில் ஒருகோயிலின் ஸ்ரீவிமானத்தின் உச்சியிலே உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று மூன்று நிலைகளிலே சதாசிவன் காணப் பெறுகின்றார். இடபத்தின் மீது சாய்ந்த வண்ணம்,ஒருகையில் மானையும், ஒருகையில் சுவடியையும் ஏந்தி தோளில் உள்ள சிவலிங்கத்தை ஒருகையால் தாங்கிய வண்ணம் பெருமான் காணப் பெறுகின்றார். விமானத்தின் உச்சிக்கு மேல் உள்ள ஆகாசம் அவர்தம் சூக்கும் உருவமாகும்.

கொடும்பாளூர் கோயில் ஸ்ரீவிமானத்தின் உச்சியிலே கண்ட காட்சியோடு மேலப் பழூவூர் கீழையூர் சிவாலயத்திற்கு வந்து அங்கு திகழும் ஸ்ரீவிமானத்தைக் காண்போமாயின் அங்கும் சிவ பெருமான் தோளில் சிவலிங்கத்தைத் தாங்கிய வண்ணம் ஒருகரத்தில் சுவடி, ஒரு கரத்தில் அக்க மணிமாலை ஆகியவை தரித்தவாறு அமர்ந்த கோலத்தில் காணப் பெறுகின்றார். இவ்விரு கோல சிவபெருமானின் திருவடிவினை தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாது‌. திருமூலர் கூறுவது போன்று குருவாய் திகழ்பவராக இருப்பதால்இச்சிற்பங்களில் ஓலைச் சுவடியையும், அக்கமணி மாலையையும் நாம் காண முடிகிறது.

திருப்பூந்துருத்தி பொயாயிலியப்பர் திருக்கோயிலில் இடம் பெற்றுள்ள ஒரு சிற்பக் காட்சி குறிப்பிடத்தக்கதாகும். தசமுகனாகிய காட்சி குறிப்பிடத்தக்கதாகும். தசமுகனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயலும் போது உமையுடன் அமர்ந்துள்ள சிவபெருமான் பின்புறமுள்ள சிவலிங்கத் திருமேனியைத் தோளில் தாங்குகிறார். காஞ்சிபுரத்து சிவாலயங்களில் உள்ள பல்லவர்கால இரு சிற்பங்களில் சிவபெருமான் தன் அருவுருவ வடிவமான லிங்க வடிவத்தினை தாங்கியுள்ளனர். இத்தகைய அரிய சிற்ப வடிவங்களை ஆகமச் சான்றுகளோடு விவரிக்கும் ஒரே தமிழ் நூல் திருமந்திரமேயாகும்.

திருவாரூர் பெரிய திருக்கோயிலின் வளாகத்தினுள் கமலாம்பிகைக்கு என்று ஒரு தனிக் கோயில் உண்டு. அதன் திருச்சுற்று மாளிகையில் ஒரு அரிய சிவலிங்கவடிவம் உள்ளது. சதுர பீடத்தின் மீது தீச்சுடர்களுடன் கல்லால் ஆன திருவாசியுள்ளது‌. திருவாசியின் மத்தியில் அருவமாக லிங்க வடிவம் காணப் பெறும். இங்கு இலிங்க பாணம் இல்லை. இருப்பினும் வெற்றிடமே லிங்க பாணமாகக் காட்சிஅளிக்கின்றது. வரிசையாகக் காணப்பெறும் தீச்சுடர்களுக்கு உட்புறம் திருவாசியில் அ, ஆ ஆகிய எழுத்துக்களில் தொடங்கி அம், அஹ என்ற எழுத்துக்கள் ஈராகப் பதினைந்து உயிரெழுத்துக்களாகிய கிரந்த எழுத்துக்கள்‌.

கல்வெட்டு எழுத்துக்களாகக் காணப் பெறுகின்றன. அருவமாக (உருவம் இல்லாமல்) சோதிக்கும் , பதினைந்து உயிர் எழுத்துக்களுக்கும் மத்தியில் லிங்க உருவம் திகழ்வதை உலகில் எந்தக் கோயிலிலும் காண முடியாது. இவ்வடிவிற்குரிய விளக்கத்தை திருமூலர் திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் விளக்கியுள்ளார்.

“ஓதும் எழுத்தோடு உயிர் கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுன
நாத எழுத்திட்டு நாடிக் கொள்வீரே” (963)
என்றும்,“நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே”
(947)

என்றும் கூறி அருவமும் சிவம், எழுத்தும் சிவம்,சோதியும் சிவம் என்றே கூறியுள்ளார். அதனைத் தான் ஆரூர் ஆகாச லிங்கத்தில் நாம் சிவனை இவ்வாறெல்லாம் காண முடிகின்றது.

படர் அரசு என்பதுதான் போதி மரம், போதி மரத்தின் கீழ் இருந்து தான் பலர் ஞானம் பெற்றனர். அதே போதி மரத்தின் கீழ் இருந்து தான் மூவாயிரம் பாடல்களை உடைய திருமந்திரத்தை திருமூலர் அருளினார். தமிழர்களுக்கு குறிப்பாக சைவர்களுக்கு திருமந்திரம் எனும் நூல் ஞானப் பெட்டகமே . திருமந்திரப் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கும்,அவை அடிப்படையில் தான் ஆலயங்கள் அமைந்துள்ளன என்பதை நாம் அறிந்து கொள்வதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். நல்லாசான்கள் அமைய வேண்டும். அதற்குச் சிவனருள் சிந்திக்க வேண்டும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்