உற்சாகம் தந்த உற்சவம் சிறப்பிதழ்பணம் தேடும் போராட்ட அலைச்சலில் ந(ா)ம் உறவுகளின் தொடர்பை இழந்தோம். அலைபேசி போதையில் தனிமையானோம். பொறுப்பாசிரியர் சொன்னபடி கோயில் திருவிழாக்களில் சென்று பாருங்கள். திரளாக ஜனங்களை பார்ப்பதும், அவர்களோடு கலப்பதும், ஒரு கொண்டாட்டமாகும். உற்சவம் என்பதே ஆயக்கலைகள் கலந்த அழகியல் என்றது சாலப் பொருத்தம். அதனால் உற்சவங்களில் கலந்துகொள்ளுங்கள். மனஅழுத்தம் போக்கும் உற்சவரை உற்று நோக்குங்கள். தியானம் போலாகும். திருவிழாக்கள் தரும் பக்தி, ஞானம் நம்மை கர்ம மார்க்கத்தில் எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்ற தலையங்கத்தை இனியாவது முயற்சிப்போமா!
அ.யாழினி பர்வதம், சென்னை-78

இருக்கன்துறை கன்னியர் குறை போக்கும் கன்னி தெய்வம் பாலம்மாள் திருத்தல வரலாறு நெஞ்சை நெகிழ வைக்கிறது. இவ்வம்மனின் மகத்துவத்தைப் படித்து பரவசம் அடைந்தோம்
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

அக்கினிக்கு விடை, வருணனுக்கு வரவேற்பு கொளுத்தும் கோடை வெயிலுக்கு மனதை குளிர வைத்தது. குடந்தை வசந்தோற்சவம் திருவஹீந்தரபுரத்து வசந்தோற்சவம். இரண்டும் நல்லதோர் விளக்கம். ராவணன் எப்போது வெல்லப்பட்டான்? பல ஐயங்களை போக்கிய விஷயம் முழுவதும் வாசித்தபின் ஒரு தெளிவை உணர முடிந்தது. காளியைப்பற்றி விளக்கமாகத் தந்து அவளது பிரசாதத்தையும் சுவை பட தந்தது பக்திப் பரவசம். நன்றி
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

பல ஆலயங்களில் அரங்கேறி வரும் வசந்த உற்சவம் குறித்த கட்டுரை, ஆன்மிகச் சிறப்புக்களை எடுத்துரைத்திருந்தது. அக்னிக்கு விடை கொடுப்போம், வருணனை வரவேற்போம் என்ற கட்டுரை வசந்த உற்சவம் பக்தி ஸ்பெஷலிற்குப் பெருமை சேர்த்திருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

குடந்தையே குதூகலிக்கச் செய்யும் வசந்த உற்சவம் குறித்த கட்டுரையும் வண்ணப்படங்களும் மனதிற்கு அளித்தது உற்சாகம். அல்லல் தந்த அக்னிக்கு விடை தந்து இனிய வசந்தம் அருளுகின்ற வருணனை வரவேற்போம் என்று பரசை.ச.அருண வசந்தன் எழுதிய கட்டுரை படித்து பரவசம் ஏற்பட்டது.‘வாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா’வின் சிறப்புக்களை விவரித்த முனைவர் மா.சிதம்பரம் அவர்களின் கட்டுரை மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. மொத்தத்தில் வசந்த உற்சவ சிறப்பு மலராக வந்த சென்ற இதழ் ஆனந்த அனுபவம்.
- அயன்புரம்த.சத்திய நாராயணன், சென்னை-72

‘‘திருமஞ்சனம் நடைபெறும் திருமலையப்பன் கட்டுரையில் மலையப்ப சாமியின் திருமஞ்சனக் காட்சியை வெளியிட்டு திருமால் அடியார்கள் மட்டுமல்லாமல் அனைத்து பக்தர்களும் பயனடையச் செய்து விட்டீர்கள். வாசகர்களின் மனத்தில் திருப்பதியை சென்று தரிசித்த நிறைவை ஏற்படுத்திய ஆன்மிகம் பலன் ‘வாசகர்களின் மனம் நாடும் இதழ்’ என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
- K. சிவக்குமார். சீர்காழி-609110.

உற்சவ விழாக்கள் என்பது பொழுதைப் போக்கிட மட்டுமல்ல; அதில் பல்வேறு நற்பண்புகள் அடங்கியுள்ளது என்பதை
விளக்கிய தலையங்கத்திற்கு பாராட்டுக்கள்.
- ப.மூர்த்தி, பெங்களூரு - 97.

தெளிவுபெறு ஓம் பகுதியில் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி சடங்கு போன்ற அர்த்தபுஷ்டியான கேள்விக்கு  K.B. ஹரிபிரசாத் சர்மா பதில் சொன்ன விதம் ஆழங்காற்பட்டது. மந்திரத்தின் பொருள் தெரியாமல் திருமணம் செய்து கொண்டவர்கள் தெரிந்து கொள்ளவும், இனி திருமணம் செய்துகொள்ளவுள்ள புதுமணத்தம்பதிகள் பொருள் பொதிந்த கருத்துக்களை உள்வாங்கி உன்னதம் பெறவும் உதவிய ஆன்மிகம் பலன், பரிமளித்தது பரிணமித்தது.
- செ.கண்ணப்பன், ஆக்ஸ்போர்டு நகர், சிவகங்கை.