நின்றபடியே நிற்காமல் பெய்யும் கருணை மழை



ஆழ்வார்களில் தலையானவர் நம்மாழ்வார். இவரைப் பிரபன்ன ஜன கூடஸ்தர் என்று அழைக்கிறோம். அதாவது சரணாகதி பண்ணக் கூடிய ஜனங்களுக்கு மூல புருஷர் எனும் பொருளில் அழைக்கின்றோம்.
இவர் நான்கு பிரபந்தங்களை அருளியுள்ளார். முதல் பிரபந்தம் - திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்), இரண்டாவது - திருவாசிரியம் (யஜூர் வேத ஸாரம்), மூன்றாவதாக பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்), கடைசியாக திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்). எல்லாவற்றிலுமே அத்திரிகிரிப் பேரருளாளனை வணங்கிக் கொண்டே பிரபந்தத்தைத் தொடங்குகின்றார்.

வைணவ சம்பிரதாயத்தில் மூன்று முக்கிய திவ்ய தேசங்களாக, கோயில் திருமலை பெருமாள் கோயில் என்பர். கோயில் என்றாலே திருவரங்கம்தான். திருமலை என்றால் திருவேங்கடமுடையான். பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதன்தான் என்பது சம்பிரதாயமாகும். கோயில் = கோ+ இல் (கோ என்றால் அரசன் அவன் வாழுமிடம் என்பது வியாக்யானம்.

அதாவது ராஜாதிராஜன் - ரங்கராஜன். மேலும் மந்திரங்களுக்குள் சிறந்தது திருமந்திரம். இதனை உணர்த்துவது போலுள்ளது திருவரங்கம். திருமலை என்றதனால் திருமலை விளக்குவது த்வயம் எனும் மந்திரத்தை சொல்கிறது என்பது ரகசிய தாத்பர்யம். சரம ஸ்லோக எனும் நுட்பமான திருமந்திரத்தின் விளக்கமாக பெருமாள் கோயில் உள்ளது. ஆக இம்மூன்றும் சேர்ந்திருப்பதை முமுக்ஷுப்படி என்று ஆன்றோர்கள் கூறுவர். அதாவது மோட்சத்தில் இச்சை உடையவன் எவனோ அவன் இந்த மூன்று ரகசியங்களையும் அறிய வேண்டும் என்பது மகான்களின் வாக்காகும்.  

காஞ்சி வரதராஜனின் வலக்கரத்தில் மாசுச - அஞ்சாதே என்று குறிப்பிட்டபடி அருட்பாலிப்பார். பகவத் கீதையில் வரும் சரம ஸ்லோகமான...
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ
- என்கிற வாக்கியத்தில் விளக்கமாகவே இங்கு அத்திகிரி பேரருளாளன் உறைகிறார்.

நம்மாழ்வார் திருவிருத்தத்தில் முதல் பாட்டிலேயே ‘‘இமையோர் தலைவா மெய்நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே’’ எனப் பாடுகிறார். இமையோர் தேவர்கள். இவர்களின் தலைவன் மந் நாராயணன், அதாவது தேவாதிராஜன். ஆகவே, முதல் பாட்டிலேயே சரணாகதி செய்து தன்னை திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு அத்திகிரிப் பேரருளாளனை வணங்கி வழிபடுகிறார்.

 சரீரம் அழுக்குடையது. அதாவது பாவங்களால் நிரம்பியது: இதை நீக்கி இந்த ஆத்மாவை தடுத்தாட்கொண்டு உன் திருவடியில் சேர்த்துக் கொள் என வேண்டுகிறோம். இவரிடம் ஏன் வேண்டுகிறோம் என்றால் இவரின் திருநாமமே வரதன் என்பதாகும். ‘‘வரம் ததாதி இதி வரத’’ என்று சொல்வார்கள். வேண்டிய வரத்தை தகுதி பார்க்காமலே அள்ளித் தருபவர் என்று பொருள். ஆகையால்தான் பேரருளாளன் (பேர் + அருளாளன்) என்றாயிற்று. மேலும் மெய்நின்று கேட்டருளாய்’’ என்பதில் உள்ள மர்மம் உணரத்தக்கது.

1)  மேகம் நின்று மழை பெய்யும்  - இவரும் நின்று நின்று கருணை மழையைப் பொழிவார்.
2)  மேகத்துக்கு வாசம் மலை - அத்திகிரி என்பதும் மலைதானே... (ஹஸ்தி கிரி = யானை மலை) ஆகையால், இவருக்கும் வாசம் மலைதான். வேதத்தில் ‘‘விஷ்ணூ பர்வதானாம் அதிபதி என்று வருகிறது. அதாவது மலைகளுக்கெல்லாம் தலைவன் விஷ்ணுவே.
3)  மேகத்தில் மின்னல் கொடி உண்டு - பெருந்தேவித் தாயார் என்கிற கொடி இவருக்கு உண்டு
4)  மேகத்தில் வானவில் உண்டு - இவர் கையில் சார்ங்கம் என்கிற வில் உண்டு.
5)  மேகத்திற்கு தண்ணீர் சொந்தம் கிடையாது - இவருக்கும் கருணை சொந்தம் கிடையாது. ஏனெனில், மேகம் கடலிலிருந்து தண்ணீரை முகர்ந்து பிறகு பொழியும். இவரும் ராமானுஜர் கொண்டு வந்த தண்ணீரைக் குடித்து பிறகு கருணை மழையைப் பொழிகிறார்.
6) மேகம் கர்ஜிக்கும் (இடி)  - இவர் பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கினால் கர்ஜிப்பார்.
7)  மேகம் தண்ணீரைக் கொட்டித் தீர்க்கும் - இவரோ எப்போதுமே கருணை மழையை கொட்டித் தீர்ப்பார்.

இவ்வாறாக அத்திகிரிப் பெருமான் மேகத்துக்கு சமமானவர். இதனால் ‘‘நின்று கேட்டருளாய்’’ என்றதனால், வரதன் நின்று நின்று கருணையைப் பொழிவதால். என் விஷயத்தையும் நின்று கேட்டு கருணையைப் பொழிய வேண்டும் என்கிறார், நம்மாழ்வார்.  

திருவாய் மொழி முதல் பாட்டான...
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் எத்தனை முறை எவர் பேசினாலும், எவர் விளக்கினாலும் இன்னும் விளக்கியிருக்கலாமோ என்றுதான் தோன்றும். எனவே, இதில் முதல் வரியான உயர்வற.... என்று தொடங்கி அயர்வறும் அமரர்கள் (அதிபதியானவன்) அதிபதி என்பதானால் தேவாதிராஜன் என்கிற திருநாமத்தால் அத்திகிரி எம்பெருமாளை அழைத்து அப்பேர்பட்டவர், துயரறு சுடரடி உள்ளவர் என்பதை தெரிவிக்கிறார்.

இவ்விடத்தில் அடியார்களின் துயர் அறுக்கும் சுடர் அடி எண்ணாமல், அடியார்களைக் கண்டால் எம்பெருமானுக்கு உள்ள துயர் அறும் என்ற படி பாடி அவன் உள்ளத்தை உகப்பிக்கிறார். திருவிருத்தத்தில் அடியார்களை நோக்கிக்கான் என்கிறார். கடைசி பிரபந்தத்தின் ஆரம்பத்தில் அடியார்களை நோக்குவதால் அவனுக்கு துயர் அறும் என்கிறார். இது பிதா - புத்திர சம்பந்த உணர்ச்சியைக் காட்டும். எம்பெருமானுக்கு சயன திருக்கோலம் என்றாலே நச்சு நாகணையை (ஆதி சேஷனை) படுக்கையாகக் கொண்டவர் என்பதால்...  

‘‘கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது.’’
 - என்று அழகாகவும் மிகமிக நேர்த்தியாகவும் விவரிக்கிறார். காலட்சேபம் பெருமை பேசீர் என்கிறார். அதாவது (கார் - என்று மேகம்) மேகம் கலந்த மேனியான் என்றால் கருணையே உருவானவர் என்றும், கையில் சக்ரம் சங்கம் ஏந்தி ஞானத்தைக் கொடுப்பவர் என்றும் தன் வயிற்றில் பாரெல்லாம் உள்ளொடுக்கியவன் என்றும் கூறி இவன்தான் பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டவன் (இவ்விடத்தில் ரஹஸ்யம் என்னவெனில் ஆதி சேஷனே ராமானுஜனாக அவதரித்ததால், இவர்மேல் உறங்குவான் என்றால் ராமானுஜனே பேரருளாளனைக் கொண்டவர் என்றதாயிற்று) இப்பேரருளாளன் சொன்ன ‘‘மாசுச’’ என்கிற வார்த்தையை நினைத்தபோது போக்குங்கோள் அதாவது காலட்
சேபம் செய்யுங்கள் என்கிறார், நம்மாழ்வார்.

சுவாமி தேசிகன் பார்வையில் பேரருளாளன்....
‘‘வந்தே தம் யமினாம் துரந்தரமஹம் மானாந்தகாரத்ருஹா
பந்தானம் பரி பந்தினாம் நிஜத்ருசா ருந்தானமிந்தானயா
தத்தம்யேன தயாஸூதாம் புரிதினா பித்வா விசுத்தம் பய:
காலேன கரிசைல க்ருஷ்ண ஜலத: காங்ஷாதிகம் வர்ஷதி.

இது யதிராஜ ஸப்ததியில் ராமானுஜரின் பெருமையைக் கூறும் காலத்து அத்திகிரிப் பேரருளாளனின் பெருமையை விவரிக்கிறார். கரி என்றால் யானை. இந்த யானை மலைக்குள் உறையும் எம்பெருமானை (ஹஸ்தி கிரி) சரணாகதி பண்ணியவுடன் வேண்டிய எல்லாவற்றையும் வர்ஷிக்கும், என்கிறார் தேசிகன்.சாலைக் கிணற்றிலிருந்து தண்ணீரை ராமானுஜர் தினமும் கொண்டு வந்து மடப் பள்ளியில் சேர்த்தார். இந்த ஜலத்தைக் கொண்டு செய்யும் பிரசாதத்தை பேரருளாளன் உண்டு உண்டு கருணை மழையை வர்ஷிக்கிறான். (கொட்டித் தீர்க்கிறான்) என்கிறார். ஆக, பேரருளாளனின் கருணைக்கு காரணம் நம் ஆசார்யனாகிய ராமானுஜனே என்றதாயிற்று.

மேலும், அக்காலத்தில் பிரம்மத்தைப்பற்றி அங்கீகரியாமல் நாத்திக வாதம் செய்தும், பற்பல தப்பான அர்த்தங்களை கற்பனை செய்தும். வேண்டாத விவாதங்கள் செய்தும் காலம் சென்றதால் பகவானே ஆதிசேஷனை ராமானுஜராக அவதரிக்க வைத்து
கை தூக்கிவிட்டார் என்கிறார், தேசிகன்.  

‘‘குத்ருஷ்டி குஹனாமுகே நிபததம் பரப்ரம்மணோ
கரக்ரஹ கச: விஜயதே லக்ஷ்மணோயம் முனி:
இதில், கரக்ரஹ கச... என்றதால் கைகொடுத்து தூக்கி விட்டவர் என்றாயிற்று. அதாவது சத் வாதம் பண்ணி  நாத்திகர்களை வாதத்தால் அடக்கி உண்மை அர்த்தங்களை விவரித்ததால் பரப்பிரம்மத்தின் உண்மை சொரூபம் விளங்கிற்று என்றதால், சத் சம்பிரதாயத்தை ராமானுஜர் மிகமிக நன்றாக வளர்த்தார் என்று பொருளாகும்.

ராமானுஜரின் சொந்த வீடு அத்திகிரிப் பேரருளாளன் உறையுமிடம். இவருக்குப் புகுந்த வீடு திருவரங்கம். யாவருக்குமே பிறந்த வீடு என்பது இன்ப வீடு. ஒரு தகப்பன் தன் மகளை எப்படி எப்படி பார்த்துக் கொள்வானோ அதேபோல, ஹஸ்திகிரிப் பெருமான் ராமானுஜரை தன் சொந்த மகளாகவே பாவித்துக் கொண்டார். மகளைப் போல பார்த்துக் கொண்டார் என்றே கூற வேண்டும்.