அவசரமாய் அருளும் அருளாளன்
காஞ்சிபுரம் - அஷ்டபுஜ பெருமாள்
அட்டபுயக்கரம் அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கே ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
 ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த வரதராஜப் பெருமாள் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு. மேலும் இத்தலத்திலே தான் கஜேந்திரனுக்கு முக்தி அளிக்க எட்டுகைகளுடன் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோயிலைக் கட்டினான்.
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திர வரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
தாயார் அலர்மேல் மங்கை, பத்மாசனி என வணங்கப்படுகிறாள். தல தீர்த்தமாக கஜேந்திர புஷ்கரணியும் தல விமானமாக ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வியோமாகர விமானமென்றும் அழைக்கப்படுகிறது.108 வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே திருமால் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார். இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது. தொண்டை மண்டலத்து வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது. திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்றது இத்தலம். மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்பமுரி திரை மாகடல் போல் முழங்கி மூவுலகும் முறையால் வணங்க எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறாஅரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே திருமங்கையாழ்வார் இவரைத் தரிசித்தபோது, இவரின் வித்தியாசமான அமைப்பைக் கண்டு, இவர் யார்? என்று மனதில் நினைக்க,, பெருமானும்,”அட்டபுயகரத்தான்’ என்று பதில் கூறியதாகவும்; அன்று முதல் அப்பெயராலேயே இப்பெருமாள் காட்சியளித்து வருவதாகவும் செய்திகள் உண்டு.வைணவத் திருக்கோயில்களில் திருமால் பொதுவாக நின்ற - இருந்த- கிடந்த கோலங்களில் நான்கு கரங்கள் கொண்டவராகக் காட்சியளிப்பதைக் காணலாம்.
ஆனால் காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் என்ற திவ்ய தேசத்திலோ பெருமாள் எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதைத் தரிசிக்கலாம். இதுபோன்ற காட்சியை வேறெந்த திருக் கோயிலிலும் காண முடியாது. பொதுவாக சக்கரத்தாழ்வார்தான் 4, 8, 16 கரங்களுடன் காட்சியளிப்பார். எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் இப்பெருமாளுக்கு சக்கரதரர் என்ற திருநாமமும் உண்டு.
கஜேந்திர மோட்ச வைபவம் இங்கு நடந்ததாகவும், அதனால் இங்குள்ள திருக்குளத்திற்கு கஜேந்திர புஷ்கரணி என்று பெயர் வந்ததாகவும் சொல்வர். இப்பெருமாளின் சந்நதியில் கருடாரூடராக ஒரு பெருமாள் காட்சியளிக்கிறார். வைபவம் இங்கு நடந்தமைக்குச் சாட்சியாய் விளங்குகிறதுஇத்திருக்கோயிலில் உற்சவமூர்த்தி சதுர்புஜம், அபய ஹஸ்தம் கொண்டு, இடக்கரத்தில்கதை யைத் தாங்கிய வண்ணம் தேவி- பூதேவியருடன் காட்சியளிக்கிறார்.
உற்சவர் அஷ்டபுஜ பெருமாள், தனிக் கோயிலில் தாயாரான புஷ்பவல்லி வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். வராகப் பெருமான் தனி சந்நதியில் காட்சியளிக்க, ராமபிரானும் கலையம்சம் கொண்டவராகக் காட்சி தருகிறார். அனைத்து ஆழ்வார்களும் ஆசார்யப் பெருமக்களும் காட்சியளிக்கும் இத்தலத்தில் ஆண்டாள், அனுமன் சந்நதிகளும் அமைந்துள்ளன.
தினம் தினம் திருவிழா காணும் தலமாக விளங்கும் இத்தலம் பரிகாரத்தலமாகவும், பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கும் துலாபாரப் பிரார்த்தனை செய்ய வசதி உள்ளது. அவசர உதவிக்கு அருளும் அருளாளன் என்று இப்பெருமாளை சுவாமி தேசிகன் தன் அஷ்ட புஜாஷ்டகத்தில் போற்றுகிறார்.
ந.பரணிகுமார்
|