பிரசாதங்கள்
காஞ்சி வரதராஜர் கோயில் - காஞ்சிபுரம் இட்லி
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
 தென்னிந்திய கோயில்கள் பக்திக்கு மட்டுமல்ல, பிரசாதங்களுக்கும் புகழ்பெற்றவை. உலகிலுள்ள வேறெந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் இந்தப் பெருமை இல்லை என்பது முக்கியம். திருப்பதி லட்டில் தொடங்கி பழநி பஞ்சாமிர்தம் வரை தெய்வத்தையும் சாப்பாட்டையும் பிரிக்கவே முடியாது. அந்த வகையில் இத்தல காஞ்சிபுரம் இட்லியும் புகழ்பெற்றது.
காஞ்சிபுரத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 வகையான இட்லி இருந்துள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாச்சாரியார் என்பவர் வரதராஜப் பெருமாளுக்கு நிவேதனமாக ‘காஞ்சிபுரம் இட்லி’யைப் படைத்துள்ளார். மருத்துவ குணம் கொண்ட பொருட்களால் இது தயாரானதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வரதராஜப் பெருமாளுக்குப் பல நூறு ஆண்டுகளாக தினமும் காலையில், இந்த இட்லி நிவேதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் இட்லி பச்சரிசி - 4 படி. உளுந்து - 2 படி. வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன். மிளகு - 5 டேபிள் ஸ்பூன். சீரகம் - 5 டேபிள் ஸ்பூன். (மிளகு - சீரகத்தைப் பொடிக்கவும்). பெருங்காயம் - சிறிதளவு. கறிவேப்பிலை - பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி. சுக்குத் தூள் - 20 கிராம். உப்பு - தேவையான அளவு. வெண்ணெய் - 1 கப்.
செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் - மூன்றையும் ஒன்றாக 3 மணிநேரம் ஊற வைத்து மணல் பதத்திற்கு அரைத்து அத்துடன் மிளகு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து, கட்டி தட்டாமல் கலந்து வைக்கவும்.‘‘முதிர்ச்சி அடையாத பசுமையான மூங்கிலை மெல்லியதாக, குடலையாக சீவ வேண்டும்.
அதில் மந்தாரை இலையை வைத்து, இட்லி மாவு கலவையை ஊற்றி பெரிய அளவு பித்தளைப் பாத்திரத்தில் இட்டு மேலே வாழை இலையை வைத்து வேக வைக்க வேண்டும். பச்சை நிற வாழை இலை வெந்து வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறும். வாழை இலையின் சாறும், மந்தாரை இலையின் வாசமும் கோயில் இட்லியில் இறங்கும். மண மணக்கும் காஞ்சிபுரம் இட்லி பிரசாதம் தயார்.
வரதராஜப் பெருமாள் பழைய சீவரம் பார்வேட்டைக்கு எழுந்தருளும் போது திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சார்பில் வரதராஜப்பெருமாளுக்கு பெருமாளுக்கு விசேஷமாக ஜீரா நிவேதிக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்: ரவை 1 கிலோ சர்க்கரை 2 கிலோ நெய் 1 கிலோ முந்திரி 1/4 கிலோ ஏலக்காய் 25 கேசரி பவுடர் 1 ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் சிறிது நெய் ஊற்றி ரவையை சிவக்க வறுத்துக்கொள்கிறார்கள். பின் இருமடங்கு தண்ணீர் ஊற்றி ரவையை நன்கு வேக வைக்கிறார்கள். ரவை வெந்ததும் சர்க்கரையை அதில் சேர்த்து கை விடாமல் கட்டி தட்டாமல் கிளறி சிறிது சிறிதாக நெய் ஊற்றி சுருண்டு வந்ததும் கேசரி பவுடரை பாலில் கரைத்து, முந்திரியை நெய்யில் வறுத்து ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்கிறார்கள். கம கமக்கும் மணத்துட ன் நெகிழும் ஜீரா பிரசாதம் தயார்.
ந.பரணிகுமார்
|