வரதனை விட்டால் நமக்கு யார் கதி?அத்தியூரான் புள்ளையூர்வான் அணி
மணியின்
துத்திசேர் நாகத்திகர் மேல் துயல்வான் - முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான்
தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
- பூதத்தாழ்வார்

பாசுரத்தின் விளக்கம் : கருடனை வாகனமாகக் கொண்டவனும் அழகிய மாணிக்கங்களை அணிந்து படமெடுக்கும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவனும், மூன்று அக்னிகளால் ஆராதிக்கப்படுபவனும் வேதங்களால் புகழப்படுபவனும் கடலிலிருந்து கிடைத்த நஞ்சினை உண்ட சிவபெருமானுக்கும் கடவுளாக இருப்பவனுமான எம்பெருமான் அத்திகிரியலே எழந்தருளியிருக்கிறார்.

 பூதத்தாழ்வார் மட்டுமா… எத்தனை ரிஷிகள் முனிவர்கள் ஆன்மிக ஞானிகள் என்று பெருங் கூட்டமே அத்திகிரி அருளாளனின் புகழை பெருமையை பாடிப் பரவசப்பட்டுள்ளனர். நகரேஷீ, காஞ்சி என்பார்கள் காஞ்சி நகருக்கு இணையாக இன்னொரு நகரம் பெரும் சிறப்போடு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். அத்திகிரி, அத்தியூர், வாரணகிரி, ெபருமாள் கோவில் என்றெல்லாம் வழங்கப்படும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உலகப் பிரசத்தி பெற்றது. திருமங்கையாழ்வார் தன்னுடைய தேன் தமிழால் அத்திகிரி அருளாளனைப் பாடி பரவசம் கொண்டதைப் பார்ப்போமா....
வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்
    மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
    குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
    பணி வரையினுச் சியாய் பவள வண்ணா
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி
    யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே
 

  திருமாங்கையாழ்வாரின் தமிழில் கற்கண்டு சுவையாய் இனிக்கிறது, வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ளே இருக்கிற அனந்தஸரஸ் திருக்குளத்திற்குள் அத்திவரதர் என்னும் கருணைக் கடல் படுத்து உறங்குகிறார். நாளெல்லாம் பார்க்கும் பெருமாளுக்கு மத்தியில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருகிற ஆபூர்வப் பெருமாள் இவர்.

உலகத்திலேயே இது போன்ற விசேஷ நிகழ்வு எங்கும் நடைபெறுவதில்லை. இப்படிப்பட்ட ஆபூர்வங்கள் நிறைந்த கருணைக்கடலான அத்திகிரி வரதனை தமிழ் தலைவன் என்றும் திருமழிசை ஆழ்வாருக்கு குரு என்றும் போற்றப்படுகிற பேயாழ்வார் உள்ளத்தை உருக்கும் விதமாக படைத்த இன்னொரு பாசுரத்தைப் பார்ப்போம்.
    
   சிறந்த என் சிந்தையும் செங்கணரவும் நிறைந்த
   சீர்நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
   வேங்டமும் வெஃகாவும் வேளுக்கை
பாடியுமே
   தாம் கடவார் தன் துழாயார்.
   
  காஞ்சிபுரத்தைப் பற்றி குறிப்பிடுகிறபோது நிறைந்த சீர் கச்சியுள்ளும் என்று பதிவு
செய்கிறார்.
 
    பல்லவ மன்னர்களில் முக்கியமாக கருதப்
படுகிற முதலாம் மகேந்திரவர்மன் நரசிம்மவர்ம பல்லவன் ராஜசிம்மன் என்கிற நரசிம்மவர்மன் எல்லாம் காஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு பொற்கால் ஆட்சியை திறம்பட நடத்தினார்கள் என்று கல்வெட்டுச் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
   வைணவ குருபரையில் மிக முக்கியமான
வராக கருதப்படும் வேதாந்த தேசிகர்
       ‘‘வாழி அருளாளர், வாழி அத்திகிரி
        வாழி எதிராசன் வாசகத்தோர் -
        வாழி சரணாகதியென்னும்
        சார்வுடன் மற்றொன்றை
        அரணாகக் கொள்ளாதார் அன்பு ’’.
 
- என்று உணர்ச்சி ததும்ப அத்திகிரி அருளாளனை சரணடைய வேண்டும் தன் உள்ளக் கிடக்கையை இந்த நானிலத்திற்கு அறிவுறுத்துகிறார். குண்டு மல்லிகைப் பூ இரவெல்லாம் கண் விழிக்கிறது. குறிஞ்சி மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது. மூங்கில் பூ தலைமுறைக்கு ஒருமுறை பூக்கிறது.

பூக்கும் பூக்களிலேயே இப்படி பல விஷயங்கள் உள்ளடங்கி இருக்கிறது அதைப்போல ஒரு நாளைக்கு நாற்பது முறை பார்த்தாலும் திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாளையும் ஸ்ரீரங்கம் அரங்கநாதனையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் விதமாக இருக்கிறார்கள்.


காஞ்சி அத்திகிரி வரதனோ நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தருகிறார். இந்த வைபவத்தைப் பார்ப்பதற்கு காணக் கண் கோடி வேண்டும். காஞ்சிக்குப் புறப்படுவோம் கருணைக்கடலின் அன்பு மழையில் நனைவோம்.பிறவிப் பிணியை அகற்ற பேரருளாளனை விட்டால் நமக்கு யார் கதி?

ஆழ்வார்க்கடியான்

மை.பா. நாராயணன்