வசிக்க முக்தி தரும் கச்சிப் பெருநகரம்!சத்திய விரத க்ஷேத்திரம் எனும் இன்றைய அழகான நகரையும் பிரம்மன் உருவாக்கினான். காஞ்சிபுரம் எனும் சொல்லில், கா + அஞ்சி + புரம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூஜித்தல் என்றும் ஆசையாக பார்த்தல் என்றும் இருபொருள் படும். புரம் - நகரம் என்று பொருள். பிரம்மன் பூஜித்த நகரம் என்பதால் காஞ்சிபுரம் என்று ஆயிற்று.

வேகவதி ஆற்றின்கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் காஞ்சி மாநகரில் சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் இருந்திருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் கோயில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவுபூண்டு புத்தசமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தின் மற்றோர் பெயர் கஞ்சிவரம் என்று பெயர். அதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த ஊரில் கால் ஆட்டினால் கஞ்சி கிடைக்கும் என்று பேச்சு வழக்கில் ஒரு சொல் உண்டு. இதை ஒரு நபர் கேள்விப்பட்டு இந்த ஊருக்கு வந்து திண்ணையில் அமர்ந்து காலை  அசைத்தபடி இருந்தார். ஆனால் கஞ்சி கிடைக்கவில்லை. கால் ஆட்டினால் கஞ்சி வரும் என்று தாம் அறிந்ததை அந்த ஊரில் கூறி கஞ்சி வராதது குறித்து கேட்டார். அதற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு விளக்கம், இந்த ஊரில் நெசவு தொழில் செய்பவர்கள் காலின் மூலமாக அசைத்து அசைத்து தறி நெய்வார்கள். அதனால் காலாட்டிக் கொண்டிருந்தாலும் வேளா வேளைக்கு உணவு முன்னால் வந்து சேரும். இதைத்தான் கால் ஆட்டினால் கஞ்சி வரும் என்பர்.
காஞ்சிபுரத்தை பற்றிய பழமையான குறிப்பு அகநானூற்றில் உள்ளது.“காஞ்சீயூர்!” என்னும் சொல் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சொல்லின் பொருள் “காஞ்சிமரங்கள் சூழ்ந்த ஊரைச் சேர்ந்தவனே” என்பதாகும். அதே போல் “காஞ்சீயூரன்” என்னும் சொல் குறுந்தொகையில் உள்ளது.

“பயறு போல் இனா பைந்தாறு படீ இயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென் சினைக்
காஞ்சியூரன்” - குறுந்தொகை : 10:2-4

ஆதலால் காஞ்சி என்னும் சொல் காஞ்சி மரத்தினால் வந்திருக்காலம் என்றும் கூறப்படுகிறது.புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த காஞ்சிபுரம் ஒரு கோயில் நகரமாகும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரில் மொத்தம் ஏழு முக்தி ஸ்தலங்கள் உள்ளன. காஞ்சிபுரம் பஞ்ச பூததலங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.

 “திருவாரூரில் பிறக்க முக்தி,
காஞ்சியில் வாழ முக்தி,
காசியில் இறக்க முக்தி,
திருவண்ணாமலையை நினைக்க முக்தி”

என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.தெற்கே விஷ்ணு காஞ்சி, வடக்கே சிவகாஞ்சி  இப்படி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது இந்தநகரம். சிவகாஞ்சியில் சிவன்கோயில்கள் அதிகம், விஷ்ணு காஞ்சியில் வைணவ கோயில்கள் அதிகம். காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவை.

இ.எஸ். சுகந்தன்