ஆசையாக எழுந்தருளிய அத்தி வரதர்



கேட்கும் வரங்களை அள்ளித் தரவல்ல வரதராஜப் பெருமாள், “உமக்கு என்ன வர வேண்டும்?” என்று பிரம்மாவிடம் கேட்டார். “இங்கே எனக்குக் காட்சி தந்தாற்போல, இதே இடத்தில் நீங்கள் எழுந்தருளியிருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள்புரிய வேண்டும். அனைவரும் வேண்டும் வரங்களைத் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் பிரம்மா.

அவ்வாறே வரதராஜப் பெருமாளும், “தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என அனைவரின் கண்களுக்கும் புலனாகும்படி நான் இங்கேயே குடிகொண்டிருப்பேன். இது சத்தியம்!” என்று உறுதியளித்தார்.அதன்பின் அத்தி மரத்தால் ஆன ஒரு விக்கிரகத்தில் வரதராஜப் பெருமாளைக் காஞ்சீபுரத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்மா. அத்தி மரத்தால் ஆன விக்கிரகத்தைக் கொண்டமையால், ‘அத்தி வரதர்’ என்று அப்பெருமாள் அழைக்கப்பட்டார்.

இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை, மலையாக மாறி வந்து வரதராஜப் பெருமாளைத் தன் மேல் தாங்கியது. வடமொழியில் ‘ஹஸ்தி’ என்றால் யானை என்று பொருள். ‘கிரி’ என்றால் மலை. யானையே மலையாக இருப்பதால், ‘ஹஸ்திகிரி’ என்றழைக்கப்படுகிறது. ஹஸ்திகிரியையே தமிழில் அத்திகிரி என்று சொல்கிறோம். 24 படிகள் கொண்ட ஹஸ்திகிரி மலைமேல் வரதராஜர் காட்சியளிக்கிறார்.

முனிவர்களை அழைத்து அத்திவரதருக்குப் பூஜை செய்யும் முறையை விளக்கினார் பிரம்மா. அதன்பின் மகிழ்ச்சியுடன், சரஸ்வதி, சாவித்திரி, காயத்திரியை அழைத்துக் கொண்டு சத்திய லோகத்துக்குச் சென்ற பிரம்மா, வரதராஜனின் வடிவைத் தியானித்துக் கொண்டும், அவரது திருவருளை எண்ணிக் கொண்டும் ஆனந்தமாகத் தம் காலத்தைக் கடத்தினார்.

“ஆதியுகத்து அயன் கண்டிட நின்ற அருள்வரதர்
காதல் உயர்ந்த களிற்றைத் திரேதையில்
காத்தளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி அனந்தன் கலியில் தொழுதெழ
நின்றனரே!”

 முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள், இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில் கஜேந்திரனாலும், மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில் தேவகுருவான பிருகஸ்பதியாலும், நான்காம் யுகமான கலியுகத்தில் ஆதிசேஷனாலும் பூஜிக்கப்பட்டார்.
காஞ்சியில் வரதராஜருக்கு வருடந்தோறும் பல உற்சவங்கள் நடைபெற்றாலும், வையம் புகழும் வைகாசித் திருநாள் என்றழைக்கப்படும் கருட சேவை மிகவும் பிரசித்தமானது. வைகாசி விசாகத்தன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜப் பெருமாளின் எழிலைக் காணக் கண்கோடி வேண்டும்.

“அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் பின்துயில்வான் - முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.”
 - என்று வரதனின் கருட சேவை
வைபவத்தைப் பூதத்தாழ்வார் பாடுகிறார்.

பின்னர், ஒரு சமயம் காஞ்சிபுரத்துக்கு வந்த பிரம்மா, மீண்டும் அத்தி வரதரைக் குறித்து ஒரு யாகத்தைச் செய்தார். அந்த யாகத்தீ அத்தி வரதப் பெருமாளின் மேல் பட்டுப் பெருமாளின் திருமேனி பின்னமானது. அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிரம்மா. “வரதா! உனது கருணையால் எனது யாகசாலையில் அக்னிக்கு நடுவே தோன்றிக் காட்சியளித்து எனக்கு அருள்புரிந்தாய். ஆனால் இன்று எனது கவனக் குறைவால் எனக்காக நீ குடிகொண்டிருக்கும் இந்தத் திருமேனி பின்னப்பட்டு விட்டதே!” என்று கதறினார்.

அப்போது பிரம்மாவிடம் பேசிய அத்தி வரதர், “பிரம்மனே! இக்கோயிலின் வாசல் பகுதியில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே அனந்தஸரஸ் என்னும் பொய்கை உள்ளது. அந்தப் பொய்கைக்குள் ஒரு நீராழி மண்டபம் உள்ளது. அந்த நீராழி மண்டபத்துக்குத் தெற்கே விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் ஒன்றுள்ளது. அந்த நாலுகால் மண்டபத்துக்குள் என்னைப் பத்திரப்படுத்தி வைத்துவிடுங்கள்! யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக்கொள்ள அந்தப் பொய்கைக்குள்ளே நான் இளைப்பாறப் போகிறேன்!” என்று சொன்னார்.

திருமாலின் ஆணையை ஏற்ற பிரம்மா, அத்தி வரதரை ஒரு வெள்ளிப் பேழையில் வைத்து, அனந்த ஸரஸ் பொய்கையிலுள்ள அந்த நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார். எந்தக் காலத்திலும் அந்தப் பொய்கையிலுள்ள நீர் வற்றாத படியால் பெருமாள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள பழைய சீவரம் என்னும் ஊரிலிருந்த தேவராஜப் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக் கிரகத்தில் எழுந்தருளப் பண்ணப்பட்டார்.இவ்வாறு அனந்த ஸரஸ்ஸுக்குள் சென்ற அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தான் வெளியே வந்து அடியார்களுக்கு அருட்பாலிப்பதாக பிரம்மாவுக்கு வாக்களித்தார். அதன்படி நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை எழுந்தருளுகிறார்.

படங்கள்: காஞ்சி எம்.பாஸ்கரன்

உ.வே.வெங்கடேஷ்