கண்ணாரக் கண்டோம் அத்தி வரதனை



வெங்கட வரதர் தாத்தாச்சாரியார். வயது 88. இவர் இரண்டு முறை அத்தி வரதரை பார்த்துள்ளார். மூன்றாம் முறை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த முறை அத்தி வரதரை வெளியில் எடுத்த குழுவில் இருந்தவர். “1939-ல் அத்தி வரதரை நான் பார்த்தேன். அப்போ எனக்கு ஏழு வயசு. இரண்டாவது முறையா 1979ல் அத்தி வரதர் தரிசனம் கண்டேன்.

அப்போ எனக்கு 47 வயசு.  சிலையை அனந்த ஸரசில் இருந்து எடுக்கும் பணியில் முக்கிய கோவில் அர்ச்சகர்கள், அரசுத் துறையின் உயர் அதிகாரிகள், சாமி சிலையை எடுக்க உதவும் பணியாளர்கள் என 30லிருந்து 35 பேரு அந்த குழுவில இருந்தோம். அத்தி வரதரை எழுந்தருளச் செய்யும் அந்த மூன்று  நாட்களுக்கு முன்பாகவே ஹோமம் வளர்த்து கும்பாபிஷேகம் நடத்திய பின்னர் அலங்காரம் திருமஞ்சனம், விஸ்வரூபம், விஷ்ணு  பூஜைகள், என செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு தயார் செய்திருந்தோம். அதில் நானும் ஒருவனாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்பொழுது அத்தி வரதரை பார்வையிட நாலணா அல்லது ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது வரும் ஜூலை 1ம் தேதி அத்தி வரதரை தரிசிப்பதற்காக பக்தியோடு காத்திருக்கிறேன்.”

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
வரதாச்சாரியார் (வயது.92)  என்பவர் கூறும்போது,
  “பத்து வயதா இருக்கும்போது அத்தி வரதரை பார்த்தேன். அப்புறம் 1979ல் தரிசிச்சேன். அப்போது எனக்கு வயது 52, இருக்கும். இப்போ மூனாவது முறையா ஜூலை 1-ம்தேதி பேரன், பேத்திகளோடு தரிசிக்கப்போறேன். சின்ன வயசில பார்த்தபோது நடந்த வைபங்கள் குறித்த விபரங்கள் சரியா ஞாபகமில்லை. இரண்டாவது முறை பார்க்கும்போது தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

அப்போ, நான் ஆத்மார்த்தமாக அத்தி வரதரை தரிசிச்சேன். அந்த டைம் தான். என் மகள் பிறந்திருந்தா, தொடர்ந்து 48 நாள் அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்தோம். அவரை தரிசிக்க புண்ணியம் செஞ்சிருக்கணும். புண்ணியகோடி தரிசனம்,
எண்ணிய கோடி நன்மை தரும்” என்று கூறி விடைபெற்றார்.  

 “காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் முந்தைய மூலவர் அத்தி வரதரை ஒருமுறை இருமுறை தரிசித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். நான், இரண்டாவது முறையாக அத்தி வரதரை காண இருக்கிறேன். நான், கோயிலில் மணியம் வேலை செய்கிறேன். எனது வேலையே, வரதராஜ பெருமாள் கோயிலில் என்னென்ன பூஜைகள்.

அதை எவ்விதம் செய்ய வேண்டும் எடுத்துக் கூறுவதுதான். நான் சிறுவனாக இருக்கும்போது முதல் முறையாக அத்தி வரதரை பார்த்திருக்கிறேன். தற்போது நான் கோயில் மணியமாக இருப்பதால், மிகுந்த பக்தி சிரத்தையுடன் அத்தி வரதரை தரிசிக்க காத்திருக்கிறேன். அத்தி வரதரை இரண்டாம் முறை காண இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் அத்தி வரதரை தரிசித்து அவரின் அருளாசியைப் பெறவேண்டும். இந்த வாய்ப்பினை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.


இரத்தின.கேசவன்

காஞ்சி எம்.பாஸ்கரன்