ஒளிரும் ஓவியங்கள்



வரதராஜப் பெருமாள் திருக்கோயில் திருப்பணி கி.பி. 848ம் ஆண்டு தொடங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்கால சோழர்கள் தொடங்கி பிற்கால சோழர்கள் வரை சோழ மன்னர்கள் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தாயார் சந்நதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், நூறு கால் மண்டபத்தை நிறுவினர். அந்தக் காலகட்டத்தில் மூலவர் சந்நதியின் வெளிப் பிராகாரத்திலும், கோயில் உள் பிராகாரத்திலும் அரிய வகை மூலிகைகளால் ஆன வண்ண ஓவியங்களை தீட்டினர். மகா விஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் வகையில் தசாவதாரக் காட்சிகள், 108 திவ்ய தேசங்கள், கிருஷ்ண லீலை, பள்ளி கொண்ட பெருமாள் போன்ற வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இறுதியில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் திருப்பணி நிறைவடைந்தது.

இப்பொழுது அந்த ஓவியங்களை பார்த்தால்கூட தற்காலத்தில் எந்த அளவிற்கு ஒரு ஓவியத்தை பல வண்ணங்களில் வரையமுடியுமோ அதைவிட ஒரு படி மேலே சென்று வரைந்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த ஓவியங்கள் இன்னும் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகுடன் சிறந்த வேலைப்பாடுகளையும் கொண்டு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த ஓவியத்தில் மிக நுட்பமான வேலைப்பாடுகளும், வர்ணம் பூசப்பட்டுள்ளன.

குறிப்பாக கோயிலின் நுழைவு வாசலின் வலது புறமாக உள்ள சுவற்றில் இருக்கும் ஓவியம் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளும் படியாக வரையப்பட்டுள்ளது. முதலில் ஒரு கோயிலை கட்டுவதற்கு தண்ணீர் தேவை. அதைக் குறிப்பிடும் வகையில் இந்த ஓவியங்களில் பலவற்றில் குளத்தை குறிக்கும் வகையில் மீன்கள் வரையப்பட்டுள்ளன. காரணம் அந்த காலத்தில் கோயில் கட்டும் போது தண்ணீர் மற்றும் மண் அவசியம். அதை உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளது.

இந்த ஓவியங்களில் கூட்டமாக மக்கள் கடவுளை தரிசிக்கும் படியாக இருப்பதை வைத்து அப்போதிருந்த மக்களின் உடை கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்றது அதுமட்டுமின்றி இதில் இருக்கும் மக்கள் ஆபரணங்கள் அணிந்து இருப்பதுபோல் இருக்கும் ஓவியங்கள் மூலம் அப்பொழுதே ஆபரண கலாச்சாரம் அதிகளவில் இருந்ததைக் காட்டுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசுவதற்காக கோயில் சுவற்றை சுத்தம் செய்த போது தான் இந்த அரிய மூலிகை ஓவியங்கள் வெளியே தெரிய வந்தன. தற்பொழுது அந்த ஓவியங்களின் மீது தூசு மற்றும் அசுத்தங்கள் படியாத வண்ணம் வேதியல் பொருட்களை பயன்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் பழமை மாறாமல் இருப்பதால் பெருமாளை தரிசிக்க வரும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இரத்தின.கேசவன்

காஞ்சி எம்.பாஸ்கரன்