சிற்பிகளின் சிலம்பாட்டம்!வரதராஜர் கோயிலுக்குள் நுழையும் முன்பு காணப்படும் நூற்றுக்கால் மண்டபத்திற்குள் நுழைந்தால் கற்களை சோலையாக்கி அற்புதம் செய்திருக்கிறார்கள், விஜயநகர மன்னர்கள் (கி.பி. 1532 அச்சுத தேவராய காலம்).

மூச்சை நிறுத்தும் பேரழகு பொங்கும் சிற்பங்கள் . சுண்டு விரல் நகத்திலிருந்து தலைக் கேசம் வரை பார்த்துப் பார்த்து வடித்திருக்கிறார்கள். பாறையை வாழை மட்டை நாரை உரிப்பதுபோல் உரித்து வித்தை காட்டியிருக்கிறார்கள். இந்த தேசத்தின் அரிய கலைக் களஞ்சியத்தில் இதுவும் ஒன்று.

இம்மண்டபத்தின் வெளிப்புற தூண்களில், குதிரை மீது அமர்ந்த கோலத்தில் குதிரையை விரட்டும் வீரர்கள். மன்மதன் கிளி மீது அமர்ந்து மயக்கும் பார்வை.  ரதிதேவியின் எழில் பொங்கும் சிற்பம். மண்டபத்தின் கொடுங்கைப் பகுதியிலிருந்து தொங்கும் ஒரே கல்லில் ஆன ‘கல் சங்கிலி’ எப்படியடா இதைச் செய்தாய் என்று சிற்பியின் கையை கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது.

நவராத்திரித் திருவிழா, வைகாசி பிரம்மோத்சவம், சித்திரை மாதம் ஆகிய நாட்களில் பெருமாள் இந்த மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.  மண்டபத்தின் அடிப்பகுதி ஆமை (கூர்மம்) பீடத்தின் மீது அமைந்துள்ளது சிறப்பானது. இப்பீடத்தில் காணப்படும் சிறிய சிற்பங்கள், மரச் சிற்பங்கள் போன்று தனியே செய்யப்பட்டு இங்கு  பொருத்தப்பட்டுள்ளதைக் காணும் பொழுது அக்கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு அரிய கலைப்படைப்புதான்.

ராமாயணக் காட்சிகள், மகாபாரத காட்சிகள், இரண்ய வதம், ராமன் வாலி வதம் (மறைந்திருந்து தாக்குதல் ),  ஜடாயு, ராமன் வில்வித்தை திருமாலின் பல்வேறு வடிவங்கள், தசாவதார வடிவங்கள், விஜயநகர மன்னர் - தேவியின் சிற்பங்கள் என்று சிற்பிகள் சிலம்பாட்டம் ஆடியிருக்கிறார்கள். சங்கு - சக்கரம் ஏந்தி அசுரன் மீது திருமால் ஆடும் நடனக் காட்சி. குதிரை வீரன் ஒரு காலில் பேண்ட் சட்டை மற்றொரு காலில் வேட்டி அணிந்துள்ள சிற்பம் ஆச்சரியமூட்டும். ஒரு தூணில் ஒருபகுதி ஆணாகவும், ஒரு பகுதி பெண்ணாகவும் உள்ள சிற்பம், பல கரங்களுடன் காட்சி தரும் சக்கரத்தாழ்வார்.

இரத்தின.கேசவன்

மது ெஜகதீஷ்