அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!



நாற்பது வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி (1 :  7 : 2019) அன்று காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அமைந்துள்ள அனந்த ஸரஸ் எனும் திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் எழுந்தருள இருக்கும் அற்புதம் நிகழ இருக்கிறது. இதை நாம் கொண்டாடும் விதமாக இந்த ஆன்மிகம் இதழின் அனைத்து பக்கங்களையும் காஞ்சிபுரம் அத்தி வரதர், வரதராஜப் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், விழாக்கள், சிற்பங்கள் என்று வரதரின் ஆலயத்தை சுற்றியுள்ள விதம்விதமான விஷயங்களை கொண்டு  தயாரித்திருக்கிறோம்.

பாரததேசம், இந்தியா என்று அழைக்கப்படும் இந்த தேசத்திற்கு அஜநாப வர்ஷம் என்றொரு பெயர் இருந்தது. அதற்கும் முன்னாலுள்ள காலத்திலேயே காஞ்சி நகரம் இருந்திருக்கின்றது. எனவேதான் மகாகவி காளிதாசன் நகரேஷு காஞ்சி என்றான். நகரமெனில் அது காஞ்சிதான். அதுமட்டுமல்ல பாரத தேசத்திலுள்ள ஏழு மோட்சபுரிகளான வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைனி, ஹரித்வார் போன்றவற்றில் மையமானதும் காஞ்சியே ஆகும்.

இன்றும் கோயில்கள் நகரமாக விளங்கும் காஞ்சி அன்றைய கடிகா ஸ்தானம் எனப்படும் கல்விக்குரிய நகரமாகவும் விளங்கியிருந்தது. பாரத கலாச்சாரத்தின் மைய கேந்திரமே காஞ்சி. மரபுகள் செழித்த வண்டல் பூமி. ஞானிகளின் திருப்பாதங்கள் அளந்த அரும் பெருமையுடைய புண்ணிய பூமி. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம் என்கிற கணபதி, கௌமாரம் எனும் குமரன் வழிபாடு, சௌரம் எனும் சூரிய வழிபாடு என்று இந்து மதத்தின் அனைத்து முக்கிய சம்பிரதாயங்களும் கிளை பரப்பி பெரும் விருட்சங்களாக, கோயில்களாக நிமிர்ந்து நிற்கின்றன. அது மட்டுமல்ல, ஜைனம், பௌத்தம் போன்றவற்றையும் தன்னுள் தேக்கிய அழகிய காஞ்சியாகவும் மிளிர்கின்றது.

இப்பேற்பட்ட பெருந் தலத்தில் அத்தி வரதர் எழுந்தருளும்போது நாம் ஒட்டுமொத்த காஞ்சி குறித்த விஷயங்களை மனதிற்குள் தொகுத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் கும்பமேளா, புஷ்கரம், மகாமகம் என்று பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துதன் நோக்கமே எல்லா சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு இடத்தில் கூடி உரையாடலை நிகழ்த்திக் கொள்ள வேண்டுமென்பதே ஆகும். அதனால் காஞ்சி அத்தி வரதரை தரிசிப்போம்! அவனின் திவ்விய மங்கள திருவடி பரவுவோம். இந்த இதழை காஞ்சி வரதராஜப் பெருமாள் மற்றும் அத்தி வரதரின் திருவடியில் பக்தியோடு சமர்ப்பிக்கின்றோம்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)