திருப்தி தந்த தெய்வீக விருந்து



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

‘‘அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருனானே’’ என்ற ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’  பாடல் வரிகளைத் தலைப்பாக்கி பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களை காத்து வரும் பெருமை மிகு திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  திருத்தலத்தைப்பற்றிய அற்புதமான, அபூர்வமான தகவல்களைத்திரட்டி சோமடம் கிருஷ்ணப்ரியா ‘தந்த கட்டுரை வையகம் போற்றும் வைகுண்ட ஏகாதசி’ நன்னாளில் வைணவ அன்பர்களுக்குக் கிடைத்த தெய்வீக விருந்து எனலாம்.
- அயன்புரம் த.சத்திய நாராயணன், அற்புதம்! அருமை!

‘அடுத்த தலைமுறைக்கான பிரசாதம்’ எனும் தலைப்பிலான தலையங்கம் வாசிப்போர் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

வைகுண்ட ஏகாதசியன்று வீட்டிலிருந்து பரமபத வாசலில் வரும் பெருமாளை தரிசித்து பயனடைய பரமபத வாசல் படத்தை அட்டையில் வெளியிட்டு கோடிக்கணக்கான வாசகர்கள் தரிசித்து பயனடையச் செய்து விட்டீர்கள். மேலும் திருவரங்கம் சம்பந்தப்பட்ட பல அற்புத தகவல்களுடன், பெருமாள் படங்கள் பலவற்றையும் வெளியிட்டு வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். நன்றி. - K.சிவக்குமார், சீர்காழி.

தசாவதார ஸ்லோகங்களின் (அபூர்வ ஸ்லோகம்) தொகுப்பினை மார்கழி மாதத்தில் அதுவும் வைகுண்ட ஏகாதசி வைபவ சமயத்தில் படிக்க நேர்ந்ததைப் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். அத்தகைய நல்ல வாய்ப்பினை நல்கியிருந்த ஆன்மிகம் பலனிற்கு நன்றிகள் பல. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சற்றும் எதிர்பாராத ‘வைகுண்ட ஏகாதசி’ பக்தி ஸ்பெஷல் பரவசப்படுத்தியது பெருமா(ளி)னின் சொர்க்கவாசல் ஓவியக் காட்சியும், வகை வகையான முப்பத்தொரு குறிப்புகளுடன் அரங்கனின் மகிமையும் கண்டு வாசித்தபோது மகிமையும், பெருமையும் உணர முடிந்தது. திருக்கோஷ்டியூர் இருப்பிடம், அவ்வூரின் பெருமாளின் எட்டெழுத்து பலம் இவைகளை அறிந்தபோது நாம் எத்தனை புண்ணியம் செய்து உள்ளோம் என மனம் மகிழ்ந்தது. இருபத்தேழு நட்சத்திரப் பலன்களும் ஒரே இதழில்! வியப்பூட்டும் விசயம். புல்லாங்குழல் கட்டுரை - மெய் மறக்கச் செய்தது. - சிம்ம வாஹினி, வியாசர்நகர்.

வணக்கம் பல, டிசம்பர் (1-15) மாத இதழ் கண்டேன். பக்கம் 74-ல் கண்ணன் திருவடி போற்றுவோம் என்ற தலைப்பில் கண்ணனைப்போற்றும் விதமாக பாடல்களைப் படித்தேன். என் தந்தை கண்ணன் (கிருஷ்ணர்) மீது அளவு கடந்த பக்தி கொண்டவராக வாழ்ந்தார். அதுபோல் நானும் சதா கண்ணன் நினைவாகவே வாழ்கின்றேன். வாழ்வில் பல நன்மைகளைப் பெறுகின்றேன். நன்றி. - வேரா. குருசாமி ராஜா, ராஜபாளையம்.

அட்டைப்படம் அருமை. ‘அடுத்த தலைமுறைக்கான பிரசாதம்’ என்ற தலையங்கம் கோயில்கள் மீது நம்பிக்கை, வரலாறு விழிப்படையச் செய்தது.
- டி.மாணிக்கம், காட்டூர்.

‘குறளும் இசையும்’ தொகுப்பு முழுக்க மனதின் ரீங்காரமாகிறது. திருப்பூரான் புண்ணியத்தில் ஒரு தெய்வீகம் நெஞ்சில் சுடர் வீசுகிறது. அங்கே வள்ளுவரை, பாரதியை, மொத்தத்தில் அன்னை சரஸ்வதியை சேவிக்க செபிக்க, அதனால் ஜெயிக்க முடிகிறது. - ஆர்.ஜி.பிரேமா, திசையன்விளை.

வழிபாடுகளும் பக்தி என்ற எல்லைகளைத் தாண்டி பல்வேறு சிலைகளுக்கும் பின்னணியில் நிறைய காரண காரியங்களும் வீரிய பயன்களும் நிரம்பியுள்ளன. மனம் துடைக்க, சன்மார்க்கம் கிடைக்க, குணம் சேர்க்க, குன்றில் நிற்க என்று ‘பவர்’ தரும் கோயில் சிலைகளின் சூட்சுமம் அறிவதே அடுத்த தலைமுறைக்கான பிரசாதம் என்ற அற்புத
தலையங்கம் தந்த ஆன்மிகமே இதுதான். - ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

தெய்வீக அட்டைப்பட தரிசனம் ஆத்ம நீராடலாகி உள்ளம் தூய்மை பெற பரமபத வாசல் காட்சி கண்டு பெருமிதம் பெருமகிழ்வும் பெறச்செய்தது!
- ஆர்.உமா ராமர்  ஸ்ரீலட்சுமிபுரம், வாரிசர்.

‘வைகுண்ட ஏகாதசி’யை முன்னிட்ட படமும் தரிசனமும் கரிசன தொகுப்பும் கனிந்த மனங்களுக்கு கச்சித வகுப்பானது! ஒவ்வொரு பாய்ன்டுக்குள்ளும் மனம் ‘ஜாய்ன்ட் ஆனது. - ஆர்.ஜே.கலியாணி, மணலிவிளை.

வைகுண்ட ஏகாதசி பக்தி ஸ்பெஷலில் எப்படி வைகுந்தனின் பல்வேறு வரலாறு தத்துவங்களைக் கண்களாலும் கருத்துக்களாலும் பருக வைத்ததோ ஆன்மிகம், வைகுந்தனிடத்தில் அனுமன் இல்லாமலா என்று பன்னிரெண்டு ராசிகளை உள்ளடக்கிய ஆதனூர் அனுமன் குறித்து தந்த தொகுப்பு அர்த்தமிக்க ஆன்மிக ஜொலிப்பு. - ஆர்.விநாயக ராமன், செல்வமருதூர்.