இயற்கையும், இறைவன் இருப்பும்…பகவத் கீதை 80

ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு
ந கர்மபலஸம் யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே (5:14)

‘‘பிறவிகளின் கர்த்தா என்ற நிலைமையோ, கர்மங்களோ, அவற்றின் விளைவுகளோ உண்மையில் இறைவனால் சிருஷ்டிக்கப்படுபவை அல்ல. அவை இயற்கையாக ஏற்படுபவை. ஆனால் இறைவனின் மகிமையினால்தான் அவை எல்லாமும் நிகழ்கின்றன.’’ இறைவனுக்கு நான், நீ என்ற பேதம் இல்லை. ஏனென்றால் இறைவன் ‘நான்’ என்றே நினைத்துக் கொள்பவர் அல்லர். தன்னோடு ஒப்பிடக்கூடிய யாருமே எதிரே இல்லாதபோது, அதாவது ‘நீ’ என்ற ஒன்று இல்லாதபோது அவருக்கு எந்தவகையில், என்ன பேதம் உண்டாகிவிடப் போகிறது! இப்படி நான் என்ற நோக்கு அவரிடம் இல்லாததால்தான் அவரால் சிருஷ்டிக்கப்படுவது என்பது எதுவுமே இல்லை என்றாகிறது.

எல்லாமே இயற்கையில் இருப்பவைதான். அவை கண்டுபிடிக்கப்படுகின்றன, அவ்வளவுதான். இருப்பதை கண்டுபிடிப்பதால் சிருஷ்டிப்பது என்று அர்த்தமாகிவிடாது. அதற்கு முன் இல்லாத ஒன்று புதிதாக உருவாகுமானால் அதை சிருஷ்டி என்று சொல்லலாம். ஒரு சிற்பி சிலை வடிக்க முனைகிறான். ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்து உளிகொண்டு அதில் செதுக்குகிறான். அந்தக் கல்லும் சரி, உளியும் சரி, அதை அடிக்கும் சுத்தியலும் சரி எல்லாமே ஏற்கெனவே இருப்பவைதான். அவன் தன் மனதில் உதித்த ஒரு வடிவத்தை அந்தக் கல்லிலிருந்து வெளிக் கொண்டு வருகிறான். அதாவது அந்த உருவம் கூட அந்தக் கல்லில் ஏற்கெனவே இருந்ததுதான்.

அந்த உருவமல்லாத பிற பகுதிகளை அவன் அந்தக் கல்லிலிருந்து வெட்டி எடுத்துவிட்ட பிறகு சிலை உருவாகிறது. இப்போது சிற்பி, அவன் உருவாக்கிய சிற்பம் என்று இரண்டு விஷயங்கள். ஒரு கட்டத்தில் சிற்பி மரணமடையலாம்; ஆனால் அந்த சிற்பம் மட்டும் அப்படியே நிலைத்து நிற்கும். இந்த சிற்பம் அடுத்த சிற்பியின் வேறுவிதமான கற்பனைக்கு வழிவகுக்கும். சிற்பியை சிருஷ்டித்தவர் என்று கொண்டால், தான் சிருஷ்டித்தது அப்படியே இருக்க, தான் மட்டும் உலக வாழ்க்கையை நீத்து, மரணமடைவானேன்? ஒரு நாட்டியக் கலைஞர் இருக்கிறார். அவர் அற்புதமான நாட்டியங்களை மேடையில் நிகழ்த்திக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அவர் இறக்க நேர்ந்தால் அவருடைய நாட்டியமும் கூடவே இறந்துவிடுகிறது! அதாவது அவர் கண்டுபிடித்ததும் அவருடனேயே மரணித்துவிடுகிறது.

அதாவது சிற்பம், சிற்பியிடமிருந்து வேறுபட்டதாகவும், நாட்டியம் நாட்டியக் கலைஞரிடமிருந்து விடுபடாததாகவும் அமைந்துவிடுகின்றன. அதாவது நாட்டியம் இல்லாமல், எந்த மேடையிலும் ஏறாமல், ஒரு நாட்டியக் கலைஞன் வாழ முடியும். ஆனால் அந்தக் கலைஞன் இல்லாமல் நாட்டியம் இருக்க முடியாது. இறைவன் நாட்டியக் கலைஞன் போல. நாட்டியமின்றியும் அவரால் இருக்க முடியும். ஆனால் நாட்டியம் அவரின்றி இருக்க முடியாது. அவர் பரமாத்மா; ஜீவாத்மாவிடமிருந்து விலகி இருக்க முடியும்; ஆனால் ஜீவாத்மாவோ பரமாத்மா இன்றி இருக்க இயலாது.

இறைவன் மின்சாரம் போல. அந்த இருப்பை பல்வேறு வடிவங்களில், பல்வேறு உபயோகங்களில் உணர முடியும். ஆனால் அது இல்லாததுபோலவே இருக்கிறது! கண்ணால் காண முடிவதில்லை. விசையைத் தட்டினால் மட்டும் ஒளியாய் தெரிகிறது. இதுதான் மின்சாரமா? இயந்திரங்கள் சுழல்வதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. எப்படி பயன்படுகிறது? அது எதையோ உந்தித் தள்ளுகிறது, இயந்திரம் இயங்குகிறது, அதனாலான சில பலன்கள் கிடைக்கின்றன. மின்சாரத்தின் இருப்பு, அதனால், இயங்கும் எல்லா பொருட்களிலும் உணரப்படுகிறது. இறைவனும் அப்படிப்பட்டவர்தான். இயக்கங்கள் பலவற்றில் அவருடைய இருப்பு உணரப்படுவதில்லை. அதனாலேயே அவர் இல்லை என்ற முடிவுக்கும் எளிதில் சிலரால் வரமுடிகிறது.

மேலே தூக்கிப் போடப்படும் எந்தப் பொருளும் கீழே விழுகிறது. அதனதன் எடையைப் பொருத்து வேகமாகவோ, நிதானமாகவோ, சில பறந்தோ, எப்படியோ பூமியை அடைந்து விடுகின்றன. இந்தப் புவி ஈர்ப்பு என்பது என்ன? எத்தகைய காந்தம் அது, எல்லாப் பொருட்களையும் ஈர்க்கும் காந்தம்! இங்குதான் இறைவன் இருப்பை நம்மால் உணர முடியும். எத்தனையோ ஆராய்ச்சிகள் மேற்கொண்டாயிற்று, பூமி காந்தம் எத்தகையது என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

அது பூமியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தூக்கிப் போடப்படும் பொருள் மேலேயே நின்றுவிடக் கூடுமானால் அங்கே ஆகாயத்தின் பெரிய இட நெருக்கடி ஏற்பட்டுவிடும். ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ள வேண்டிய நெருக்கடி! ஏனென்றால் எல்லாவகையான பொருட்களும் மிதக்கின்றனவே! ஒரு சாலையில் கைவண்டி முதல், மிகப் பெரிய டிரக் வரை செல்லுவதைப் போல. அங்கே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த முடியாது. வேண்டுமானால் லேன் என்று கோடு போட்டு, இன்ன வேகமுள்ள வண்டி இந்த லேனில்தான் போகவேண்டும் என்று கட்டுப்படுத்த முயலலாம். ஆனால் ஒழுங்கீனம் பயின்ற மக்கள் அதை மதிக்க வேண்டுமே! யாரும், யாருக்கும் விட்டுக்கொடுக்க முன்வராத ஈகோவில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைத் தவிர வேறு எதை அங்கே எதிர்பார்க்க முடியும்? இதே தத்துவம் ஆகாயத்திலேயே தங்கிவிட்ட பொருட்களுக்கும் ஏற்படக் கூடும்தானே? வானில் மிதக்கும் மேகங்கள், பூமியின் ஈர்ப்பில் மழையாகப் பொழிகிறது. அந்த ஈர்ப்பு இல்லாவிட்டால், ஈரமான பூமியைக் காண முடியுமா? அல்லது அந்த நீர் வானத்திலேயே தங்கிவிடத்தான் முடியுமா? இந்த ஈர்ப்பில் இறைவனை நாம் உணருகிறோம்.

ஒரு தாய் தன் வேலையிலேயே ஈடுபட்டிருக்கிறாள் என்றாலும், அவளுடைய கவனம் முழுவதும் சற்றுத் தொலைவில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் மேல்தான் இருக்கும். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதைப் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதனைச் சுற்றி தாய்மையின் பாதுகாப்பு வளையம் இருக்கிறது என்று அர்த்தம். தாய் தொலைதூரத்தில்தான் இருக்கிறாள், ஆனாலும் அவளுடைய மன ஈர்ப்பால் அந்தக் குழந்தை எந்த ஆபத்துமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையிடம் தாயின் இருப்பு உள்ளது. அதை அந்தக் குழந்தை உணர்வதில்லைதான், ஆனாலும் அது பாதுகாப்பாக இருக்கிறது.

ஓர் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைகிறார் என்றால் அதுவரை கூச்சலும், கும்மாளமுமாக இருந்த அந்த வகுப்பு உடனே கப்சிப் என்று ஆகிவிடுகிறது. அவர் வராவிட்டாலும் அப்படி அந்த வகுப்பு அமைதியாக இருக்கிறது என்றால், அந்த ஆசிரியரின் இருப்பை அந்த மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ‘இந்த குருவுக்கு வணக்கம் செய்’ என்று ஒருவரை நிர்பந்திப்பதன் மூலம் அவர் வணக்கம் செய்கிறார் என்றால் அவர் குருவே அல்ல. தாமே அறியாமல் கரம் கூப்புகிறோமே, அவரே உண்மையான குரு. துரியோதனன் அரச சபையில் அதுதானே நிகழ்ந்தது!

பாண்டவர்களின் தூதுவனாக கிருஷ்ணன் வரப்போகிறார் என்று தகவல் கிடைத்தவுடன், துரியோதனன் தன் சபையோருக்கு இட்ட முதல் கட்டளை, அவருக்கு யாரும் மரியாதை காட்டக் கூடாது, எழுந்து நின்று வரவேற்கக் கூடாது என்பதுதான். ஆனால் மறுநாள் கிருஷ்ணன் துரியோதனன் அரசவைக்கு வந்தபோது என்ன நடந்தது?அரசவைக்குள் கிருஷ்ணன் நுழைந்தவுடனே அங்கிருந்த எல்லோரும் எழுந்து நின்றனர். அவர்களைக் கண்டு மிகுந்த வெறுப்பு கொண்டான் துரியோதனன். தான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் இவர்கள் அனைவரும் எழுந்து நிற்கிறார்களே, என் ஆணையை மதிக்கவில்லையே என்று கோபம் கொண்டான்.

உடனே அருகிலிருந்த ஒரு மந்திரியிடம், ‘‘ஏன் அனைவரும் எழுந்து நிற்கிறீர்கள்? கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா?’’ என்று கடிந்து கேட்டான். அந்த மந்திரி பதில் எதுவும் சொல்லவில்லை. துரியோதனனை தலைமுதல் பாதம்வரை மேலிருந்து கீழாகப் பார்த்தார். தான் கேட்டது என்ன, இந்த மந்திரி நடந்துகொள்வது என்ன என்ற குழப்பத்துடன் தன்னைத் தானே பார்த்துக்கொண்ட துரியோதனன் திகைத்தான். பிறகு தன்னையே அவன் பார்த்துக்கொண்டபோது தானும் எழுந்து நின்று கிருஷ்ணனை வரவேற்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

இந்த மாயம் எப்படி நிகழ்ந்தது? வெளிப்படையாக கிருஷ்ணனை யாரும் மதிக்கக்கூடாது என்று அவன் சொல்லிவிட்டானே தவிர, தன்னுடைய உள்மனதில் தான் கிருஷ்ணனுக்குச் செலுத்தும் மரியாதை, அவனறியாமல் அவனை எழுந்து நிற்க வைத்துவிட்டது! ஆகவே எல்லாமே இயற்கையாக நிகழ்வனவன்றி வேறில்லை. ஆனாலும் அவை எல்லாவற்றிலும் பரந்தாமனின் மகிமை சூழ்ந்திருப்பதைத்தான் நாம் உணரவேண்டும். நீர் ஆவியாவது இயற்கை. அந்த ஆவி மேகமாகத் திரள்வதும் இயற்கை. அந்த மேகம் வானில் சஞ்சரிப்பதும் இயற்கையே. அந்த மேகம் மழை பொழிவதும் இயற்கைதான்.

இவையெல்லாம் இயற்கையாக, அனிச்சையாக நடைபெறுபவைதான். ஆனால் இந்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பரம்பொருளின் இருப்பு உணர்த்தப்படுகிறது! அந்த இருப்பின் மகிமையால்தான் இத்தனை விஷயங்களும் நடைபெறுகின்றன. ஆமாம், பரந்தாமன் ஒரு கிரியா ஊக்கி. மழைநீர் பூமியில் விழுவதும், ஆறாகப் பெருகி ஓடுவதும், மீண்டும், அந்த நீர் ஆவியாவதும், மேகமாவதும், மழையாவதும், பூமியில் விழுவதும் ஆறாக ஓடுவதும்….. இந்த சுழற்சி காலங்காலமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இவையனைத்தும் இறைவனின் மகிமையைப் பெற்றவை என்பதுதான் உண்மை.

யதார்த்த வாழ்வில் நாம் பலவற்றையும்  பேசுகிறோம். நல்லன பேசுகிறோம், அல்லாதனவற்றையும் பேசுகிறோம். நல்லன பேசும்போது நமக்குப் பாராட்டு கிடைக்கிறது, நம் மனம் மகிழ்கிறது. வேண்டாததைப் பேசினால், வீணாகப் பொல்லாப்பு உண்டாகிறது. சிலசமயங்களில் நாக்கு பேசியதற்காக உடல் அடி வாங்கவும் செய்கிறது. இது என்ன நியாயம்? பேசியதென்னவோ நாக்கு. அடிவாங்குவது மட்டும் உடலா? அதுதான் நாக்கின் இயற்கை. அது அவ்வாறு பேசினாலும், வாய் என்ற பாதுகாப்பு அறைக்குள் இருந்தவாறு பேசிவிடுகிறது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் உடல் அடிவாங்கும்போது, அதே நாக்கு, ‘ஐயோ அம்மா, அடிக்காதே, வலிக்கிறது’ என்று கத்தவும் செய்கிறது. முதலில் பேசும்போது அது உடலைப் பற்றி கவலை கொள்வதில்லை, ஆனால் உடல் அடிபடும்போது மட்டும் கவலையுடன் கத்துகிறது!

இது எல்லாமே இயற்கையானதுதான். ஆனால் இந்த ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள் இருக்கிறார் என்பதுதான் உண்மை. பேசும்போது நமக்குள்ளிருந்து அவர் எச்சரிக்கிறார்;நாம்
அவரைப் புறக்கணித்துவிடுகிறோம். உடல் அடிபடும்போது அதை நாம் உணர்கிறோம். அந்த வலி உறைக்கும்போது புரிந்து கொள்கிறோம். ஆனாலும், இப்போதும் கடவுள் நம்மைக் கைவிடவில்லை; கூடவே இருந்து ஆறுதல் சொல்கிறார், இனி ஒருமுறை இப்படிப் பேசாதே என்று.

நேராகத் தெரியவேண்டிய ஒரு கம்பு, தண்ணீரில் மூழ்க்கி வைக்கப்படும்போது அது ஏன் வளைந்து காணப்படுகிறது? நமக்குத் தெரிகிறது, கம்பு நேரானது என்று. ஆனாலும் வளைந்துத் தெரிவதும், அவ்வாறு காண்பிப்பதும் அந்தத் தண்ணீரின் இயல்புதானே! ஆனால் நேரான கம்பிலும் சரி, அதன் வளைந்த தோற்றத்திலும் சரி, இரண்டிலும் இறைவனின் மகிமை  விளங்குகிறது என்பதுதான் உண்மை. (தொடரும்)   

பிரபுசங்கர்