ராஜராஜசோழன் தரிசித்த உடையாளூர் கயிலாசநாதர்



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

சோழர் வரலாற்றில் இருபெரும் சோழசக்கரவர்த்திகள் தங்களை கல்வெட்டுகளில் சிவனுடைய திருப்பாதங்களைத் தலையில் தாங்குபவர்கள் எனக் குறித்துக்கொண்டனர். முதலாமவன் மாமன்னன் ராஜராஜசோழன். இவன் தன்னுடைய சிலாசாசனங்களில் தன்னை “சிவபாதசேகரன்” எனப் பொறித்துக்கொண்டான். இப்பெருவேந்தனின் மைந்தனான கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழனோ தன்னை “சிவசரண சேகரன்” எனத் திருவலஞ்சுழி கல்வெட்டில் குறிப்பிட்டுக்கொண்டான்.

இவர்கள் வழித் தோன்றலான மூன்றாம் குலோத்துங்க சோழன் தென்திருவாலங்காடு சிவாலயத்தில் தன் தலைமீது சிவனாரின் திருவடிகளைத் (பாதரட்சைகள்) தாங்கும் கோலத்தில் தன் உருவச்சிலையை இடம் பெறுமாறு செய்து கொண்டான். பண்டைய பழையாறை நகரின் ஒரு பகுதியாக விளங்கும் ஊர் ஒன்றுக்கு மாமன்னன் ராஜராஜன் “சிவபாதசேகரமங்கலம்” எனப் பெயர் சூட்டியதோடு, அந்த ஊரிலேயே தன் இறுதிக் காலத்தைக் கழித்து சிவபெருமானின் சேவடிகளை அடைந்தான் என்பது வரலாறு. அந்த சிவபாதசேகரமங்கலம் எனும் வரலாற்றுச் சிறப்புடைய ஊர்தான் கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள உடையாளூர் எனும் சிற்றூராகும்.

கீழப் பழையாறை எனும் ஊரினை அடுத்து திகழும் உடையாளூர் எனும் சிவபாதசேகர மங்கலத்தில் பண்டு பல சிவாலயங்கள் திகழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளும், அவ்வாலயங்களின் எச்சங்களான சிவலிங்க திருமேனிகளும், பிற இறையுருவங்களும் இவ்வூரின் பல பகுதிகளில் திகழ்ந்து தற்போது அவையனைத்தும் கயிலாசநாதர் கோயிலின் திருச்சுற்று மண்டபங்களில் காட்சி நல்குகின்றன. முன்பு இவ்வூர் விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவும் பின்பு இடம்பெயர்ந்து தற்போது கயிலாசநாதர் கோயிலின் தீர்த்தக் குளத்தின் தென்கரையில் உள்ள பாற்குளத்து அம்மன் கோயிலின் நுழைவு மண்டபத் தூணாகவும் இடம்பெயர்ந்து திகழ்கின்றது ஒரு வட்ட வடிவ கல்வெட்டுத்தூண்.

அத்தூணில் காணப்பெறும் முதற்குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு சிவபாதசேகரன் எனப்பெறும் முதலாம் ராஜராஜ சோழனின் பெயரால் சிவபாதசேகர மங்கலத்தில் அமைந்த சிவபாதசேகர தேவர் திருமாளிகை பற்றிய அரிய குறிப்பினைக் கூறுவதோடு மேலும் பல முக்கியமான வரலாற்றுச் செய்திகளையும் எடுத்துரைக்கின்றது.அக்கல்வெட்டு முழுவதையும் நாம் படிக்க முயலும்போதுதான் அதன் சிறப்பினை உணர முடியும்.

 அத்தூண் கல்வெட்டு வாசகமாவது; “ஸ்வஸ் திஸ்ரீஸகலபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜ தேவரானஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீநித்தமையில் இம்மண்டபம் எடுப்பித்தார். பிடவூர் வேளான வேளிர் அரிகேசவனான கச்சிராஜர்காக இவ்வூர் நாயகம் செய்துநின்ற ஜயசிங்க குலகால வளநாட்டு குளமங்கலநாட்டு சா(த்த)மங்கலத்து சாத்த மங்கலமுடையான் நம்பிடாரன் நாடறிபுகழன் இவருடன் விரதங்கொண்டு செய்தார் இவ்வூர் பிடார்களில் ராஜேந்திரசோழனு(க்க) பநாயகநான ஈசான சிவரும் தேவகநாயகமான அறங்காட்டிப் பிச்சரும்” என்பதாகும்.

இச்சாசனத்தின் அடிப்படையில் நோக்கும்போது முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி. 1112)ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்தில் (உடையாளூரில்) ராஜராஜதேவரின் திருவுருவம் திகழ்கின்ற ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை என்ற பெயரில் மாளிகை ஒன்று இருந்துள்ளது. அம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபப்பகுதி சிதைவ அடைந்து காணப்பெற்றதால் பிடவூர் எனும் ஊரினைச் சார்ந்த பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் அப்பகுதியினை மீண்டும் எடுப்பித்து புனர்நிர்மாணம் செய்தார்.

அப்போது அவர் செய்த பணிக்கு ஜெயசிங்க குலகால வளநாட்டு குளமங்கல நாட்டின் ஓர் ஊரான சாத்தமங்கலம் எனும் ஊரினனான நம்பிடாரன் நாடறி புகழன் எனும் சிவபாத சேகர மங்கலத்து அரசு நிருவாக அலுவலனும், அவனுடன் இணைந்து சிவபாதசேகரமங்கலத்து பிடாரர்களில் (சிவாச்சாரியார்களில்) ஒருவனான ராஜேந்திர சோழ அணுக்க நாயகனான ஈசான பண்டிதரும், அறங்காட்டி பிச்சர் என்பவரும் விரதம் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள கச்சிராஜருக்காக இப்பணியைச் செய்தனர் என்பது குறிக்கப்பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புடைய இக்கல்வெட்டு சாசனத்தால் உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை பண்டு இருந்தது என்பது உறுதியாகின்றது. அது முதலாம் இராஜராஜ சோழனின் நினைவு மாளிகையே, அதனைப் பள்ளிப்படை (சமாதி கோயில்) எனக்கூட கருத வாய்ப்புள்ளது.

அந்த மாளிகை உடையாளூரின் எப்பகுதியில் இருந்தது என்பது இதுகாறும் ஐயம் திரிபற உறுதி செய்ய இயலவில்லை. உள்ளூர் ஆற்றங்கரை அருகில் ஒரு வாழைத்தோட்டத்தில் புதைந்த நிலையில் காணப்பெறும் சிவலிங்கம் திகழும் இடமே அப்பண்டைய மாளிகை என்பது அமரர் என். சேதுராமன் என்ற ஆய்வு அறிஞரின் முடிவாகும். திருவாளர்கள் வே. மகாதேவன், சிவபாதசேகரன் போன்றவர்கள் தற்போது உடையாளூரில் திகழும் ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலே இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதுகின்றனர்.
கயிலாசநாதர் கோயில் குலோத்துங்க சோழன் காலத்தில் முழுதும் புதுப்பிக்கப்பெற்ற கற்றளியாகும்.

கருவறையில் கயிலாசநாதர் லிங்க வடிவில் காட்சி நல்க கருவறை நுழைவாயிலினை இருதுவாரபாலகர் சிற்பங்கள் காத்து நிற்கின்றன. இவ்விரு சிற்பங்களும் வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புகளுடன் திகழ்கின்றன. வாயிலின் வலப்புறம் உள்ள துவாரபாலகரின் காலடியில் மழிக்கப்பெற்ற தலையுடன் திகழும் அமர்ந்த கோல அடியார் சிற்பமொன்றுள்ளது. அவர்தம் இரு கரங்களையும் கூப்பிய நிலையில் காணப்பெறுகின்றார். இடப்புறம் உள்ள துவாரபாலகரின் காலடியில் தலையில் ஜடாபாரத்துடன் உள்ள வணங்கும் கோல அமர்ந்த அடியார் ஒருவரின் திருவுருவம் உள்ளது. இவ்வடியார்கள் இருவரும் யாவர் என்பதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. அவை ராஜராஜன் மற்றும் ராஜேந்திரனையோ அல்லது அவ்வூரில் திகழ்ந்த மடாதிபதிகளையோ குறிப்பதாக இருக்கலாம்.

அர்த்த மண்டபத்தின் தென்புறம் வணங்கும் கோல ஒரு அரசன் மற்றும் அரசி ஆகிய இருவரின் முழு உருவ சிற்பங்கள் (பிரதிமங்கள்) இடம் பெற்றுள்ளன. அவை கலையம்சத்தால் முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை என்பதால் அம்மன்னன் மற்றும் அவன் தேவியின் வடிவங்களாக அச்சிற்பங்களைக் கொள்ள முடிகிறது. மகாமண்டபத்திற்கு வெளியே ஒரு சிறுமண்டபத்தில் லிங்கம் ஒன்றினை நின்ற நிலையில், ஜடாபாரத்துடனும், மீசையுடனும் வணங்கும் கோல அடியார் ஒருவரின் சிற்பம் காணப்பெறுகின்றது. அது சிவபாத சேகரனாகிய முதலாம் ராஜராஜனைக் குறிப்பதாக இருக்கலாம்.

தேவகோஷ்டங்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை, ரிஷபாந்திகர் போன்ற திருமேனிகள் இடம் பெற்றுத் திகழ்கின்றன. சண்டீசர் ஆலயம் தனித்து காணப்பெறுகின்றது. திருச்சுற்று மாளிகையின் மேற்கு மண்டபத்தில் இவ்வூரில் திகழ்ந்து அழிந்த சிவாலயங்களின் சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அவற்றுடன் காணப்பெறும் சிதைந்த நிலையில் யோகபட்டத்துடன் அமர்ந்த கோலத்தில் திகழும் அக்நி தேவனின் சிற்பம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் அக்நி சிற்பத்தை முழுதும் ஒத்து காணப்பெறுகின்றது. பைரவர், சூரியன் போன்ற பரிவாரங்களுடனும் அம்பிகையின் தனித்த ஆலயத்துடனும் இக்கோயில் விளங்குகின்றது.

மகாமண்டபத்தின் தென்புறச் சுவரில் காணப்பெறும் முதலாம் குலோத்துங்க சோழதேவரின் நாற்பத்தொன்பதாம் ஆண்டு (கி.பி. 1119) கல்வெட்டில் ஸ்ரீகயிலாசமுடையார் என்றும் சிவபாதசேகரீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்பெறுகின்ற இவ்வாலயத்து ஈசன் முன்பு தேவாரம் (திருப்பதிகம்) பாடும் பணிக்காக மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பார் நிலக்கொடை அளித்தமை பற்றி கூறப்பெற்றுள்ளது. இதே இடத்தில் உள்ள விக்கிரம சோழனின் மூன்றாம் ஆண்டு (கி.பி. 1121) சாசனத்தில் அருமொழிதேவ வளநாட்டு திருநரையூர் நாட்டு மாகேஸ்வர ஸ்தானமான சிவபாத சேகர மங்கலத்தில் அரையன் உலகுடையாள் என்ற அணங்கொருத்தி இக்கோயிலுக்காக 1½ வேலி நிலத்தை விலைகொடுத்து வாங்கிக் கொடுத்ததை விவரிக்கின்றது.

இதே மண்டபத்தின் வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு சாசனத்தில் (மூன்றாம் குலோத்துங்கனின் 25ஆம் ஆண்டு - கி.பி. 1202) தேவகநாயகன் ராஜராஜதேவன் எனும் சோழேந்திர சிங்க பிச்சன் என்பான் புதிதாக எடுத்த தேவகநாயக ஈஸ்வரத்து ஈசனுக்கு இருவர் அளித்த நிலக்கொடை பற்றி விவரிக்கின்றது. மூன்றாம் ராஜராஜன் காலத்திய இவ்வாலயத்து சாசனத்தில் (கி.பி. 1222) நெடுவாயிலுடையான் என்பான் கோயிலிலிருந்து களவாடிய திருமேனிகள், நகைகள், பாத்திரங்கள் ஆகியவைகளுக்காக அவ்வூரிலிருந்த அவனுடைய நிலத்தைக் கைப்பற்றி விற்று அத்தொகையினை ராஜபண்டாரத்தில் செலுத்தியது குறிக்கப்பெற்றுள்ளது. கோயில் சொத்துக்களை களவாடுபவர்கள் எக்காலத்திலும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விக்கிரம சோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டில் (கி.பி. 1125) சிவபாதசேகரமங்கலத்தில் குலோத்துங்க சோழீஸ்வரம் உடைய மகாதேவர் குறிக்கப்பெறுவதால் அவ்வூரில் குலோத்துங்க சோழீஸ்வரம் என்ற சிவாலயம் இருந்தது என்பதறிய முடிகிறது.

நாயன்மார் சிலைகளுக்கு வழிபாடுகள் நிகழ்ந்தமையும், தேவாரம் தொடர்ந்து பாடப்பெற்றமையும்  இவ்வாலயத்து சாசனங்கள் கூறும் அரிய செய்திகளாகும். மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் இவ்வாலயத்து ஆவணங்கள் (ஓலைச்சுவடிகள்) அழிந்தபோது அரசு ஆவணக் களரியிலிருந்து அவற்றின் நகல்களைப் பெற்று மீண்டும் இழப்பை ஈடு செய்தது ஒரு சாசனம் கூறும் முக்கிய தகவலாகும். சிவபாதசேகர மங்கலத்தில் கி.பி. 1288இல் அபிமுக்தமடம் என்ற புதிய மடம் எடுக்கப்பெற்ற தகவலினை ஒரு சாசனம் கூறுகின்றது. அபிமுக்தம் என்றாலேயே முக்தி எனப் பொருள்படும். காசியை அபிமுக்தம் என்பர். மோட்சம் தரக்கூடிய சிவபதிகளுள் ஒன்றாக இவ்வூர் திகழ்ந்தமையால்தான் மாமன்னன் ராஜராஜன் சிவபாதசேகர மங்கலத்தில் வீடுபேறு எய்தான் போலும்!

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்