தெளிவு பெறு* நம்மைவிட வயதில் இளையவர்களான புரோகிதர்களை சேவித்து வணங்கலாமா? கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி.

அவசியம் சேவித்து வணங்க வேண்டும். வீட்டு சாஸ்திரிகள் அல்லது புரோகிதர் என்பவர் குருவிற்கு சமம் ஆனவர். பிரம்மாவின் ஸ்வரூபம். மாதா, பிதாவிற்கு அடுத்தபடியாக நாம் வணங்க வேண்டிய குருவும் அவரே. புரோகிதர் என்று அந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டால் அவருடைய வயது, உருவம் என்று எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை அவசியம் அளிக்க வேண்டும். வீட்டிற்கு வருகின்ற புரோகிதர் வயதில் இளையவராய் இருந்தாலும் கட்டாயம் அவரை சேவித்து வணங்க  வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

* புதுவீட்டிற்கு கிரகப்ரவேசம் செய்யும்போது கோமியம் தெளிக்கிறார்களே, ஏன்? - வைரமுத்து பார்வதி, ராயபுரம்.

பசுமாடு என்பது மிகவும் புனிதமானது. முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் பசுமாட்டின் கோமியம் என்பது சுத்தத்தின் அடையாளம். கோமியத்திற்கு பாக்டீரியாக்களை விரட்டும் சக்தி உண்டு என்று விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். கிரகப்ரவேசம் செய்யும் புதுவீட்டினில் இருக்கும் அசுத்தங்கள் அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கோமியத்தினைத் தெளிக்கிறார்கள். வீட்டிற்குள் பசுமாட்டினை முதலில் நுழையச் செய்கிறார்கள். பசுமாடு வீட்டிற்குள் வந்தாலே வீட்டிற்குள் இருக்கும் அனைத்து தீயசக்திகளும் காணாமல் போய்விடும் என்பது நமது நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நடைமுறையில் நாம் அனுபவித்து உணர்கின்ற உண்மையும் கூட என்றால் அது மிகையில்லை.

* ராசிபலன்களில் சொல்லப்படும் பலன்கள் ஆண்களுக்கானதா? ஏனெனில் ராசி பலனை புத்தகத்தில் படிக்கும்போது பெண்களுக்கு என்று நான்கு வரிகள் தனியாக உள்ளது. அப்படியென்றால் பொதுவாக உள்ள மற்ற பலன்கள் பெண்களுக்குப் பொருந்தாதா? - ஜெயம், சிவகங்கை.

ராசிபலன்களில் சொல்லப்படும் பலன்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் பொதுவானதே. கிரகங்களின் சஞ்சாரம் ஆண்களுக்கு என்று தனியாகவும், பெண்களுக்கு வேறு மாதிரியாகவும் இருப்பதில்லை. அதேபோன்று நவகிரகங்களும் ஆண்களுக்கு ஒரு விதமான பலனையும், பெண்களுக்கு வேறுவிதமான பலனையும் தருவதில்லை. அதே நேரத்தில் அவரவர் செய்கின்ற பணிகளுக்குத் தக்கவாறு கிரகங்கள் உண்டாக்கும் பலனின் தாக்கம் மாறுபடலாம். இந்தவிதி ஏழை, பணக்காரனுக்கும் பொருந்தும்.

உதாரணத்திற்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்று ராசி பலனில் சொல்லப்பட்டிருந்தாலும், ஒரே ராசியைச் சேர்ந்த சிறுதொழில் செய்பவனுக்கு நூற்றுக்கணக்கிலும், பெரிதாகச் செய்பவனுக்கு ஆயிரக்கணக்கிலும், தொழில் அதிபர்களுக்கு லட்சக்கணக்கிலும், பெருந்தொழில் நிறுவன அதிபர்களுக்கு கோடிக்கணக்கிலும் லாபம் கிடைக்கலாம். ஒரே ராசியாக இருந்தாலும் இவர்களில் ஒருவருக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம், மற்றொருவனுக்கு நூற்றுக்கணக்கில்தான் லாபம் கிடைத்திருக்கிறது என்று பிரித்துப் பார்க்க இயலாது.

அதேபோன்று ஆண்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான பலனும், பெண்களின் செயல்களுக்கு ஏற்ற வகையில் இவர்களுக்கான பலனும் அமைகிறது. வீண்வம்பு வந்து சேரும் என்று பலனில் சொல்லப்பட்டிருந்தால் ஆண்களுக்கு வந்து சேரும் பிரச்னைகள் பெரிதாகவும், பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளின் தாக்கம் குறைவானதாகவும் அமைகிறது. ஆக மொத்தத்தில் வீண் வம்பு என்பதை சந்தித்திருப்பார்கள். பெண்களுக்கு என்று தனியாக நான்கு வரிகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் அந்தச் செயல்களை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள் என்பதற்காகத்தான்.

உதாரணத்திற்கு பெண்களுக்கு என்று தனியாகச் சொல்லப்பட்டிருக்கும் நான்கு வரிகளில் குழந்தைகளின் செயல்களில் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது குழந்தைகளின் மனநிலை சார்ந்த பிரச்னையாக இருக்கலாம். பெற்ற பிள்ளைகளின் மன ஓட்டத்தை ஒரு தாயாரால்தான் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக அப்படிச் சொல்லியிருப்பார்கள். அது தந்தையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அளவிற்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக இருக்காது. தாயாரின் அன்பு நிறைந்த பேச்சினாலும், அரவணைப்பாலும் அதனை சரிசெய்துவிட முடியும் என்பதற்காக அந்த வரிகள் பெண்களுக்கான பலன் என்று தனித்துப் பிரித்துக் காண்பித்திருப்பார்கள். அதேபோன்றுதான் அந்தப்பிரிவினில் இடம்பெற்றிருக்கும் மற்ற வரிகளும்.

உங்களுக்கு எளிதாகப் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் மொத்தமாக எழுதப்பட்டிருக்கும் பலன்கள் ஆண்- பெண், ஏழை - பணக்காரர், சிறுவர் - பெரியவர் என்று எல்லோருக்கும் பொதுவானது. பெண்களுக்கு என்று தனியாகப் பிரித்து எழுதப்படும் பலன்கள் பெண்களுக்கு மட்டும் உரித்தது. இந்தப் பலன்களை ஆண்களும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் தன் மனைவிக்கான ராசி பலன் பகுதியில் பெண்களுக்கான பலனைப் படிக்கும்போது அவருக்கு உண்டாகியிருக்கும் பொறுப்புகளையும், சிரமங்களையும் அறிந்து கொள்ள இயலும். பெண்களுக்கு என்று தனியாகப் பலனைச் சொல்வது போலவே, மாணவர்களுக்கு, உத்யோகஸ்தர்களுக்கு என்று தனித்தனியாக பலனைச் சொல்லியிருப்பார்கள். இதுபோன்ற பிரிவுகளை சிறப்புப் பலன்களாக அறிய வேண்டும். மற்றபடி ராசிபலன்களைக் கணக்கிடும்போது ஆண் - பெண் என்ற பேதம் எதுவும் கிடையாது. மனிதர்கள் எல்லோருக்கும் கிரகங்களினால் உண்டாகும் பலன் என்பது ஒரே மாதிரியாகத்தான் அமையும். இதில் எந்த சந்தேகமுமில்லை.

* பஞ்சபூதம் என்பதன் பொருள் என்ன? பஞ்சபூத ஸ்தலங்கள் என்றால் என்ன? - எஸ்.எஸ்.வாசன்,  தென்எலப்பாக்கம்.

“ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ” என்கிறது உபநிஷத். மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் இவற்றை கீழிருந்து மேலாகவும் நாம் வரிசைப்படுத்திப் பார்க்கலாம். ப்ருதிவீ என்றால் பூமி அல்லது நிலம் என்று பொருள். ஆப: என்றால் நீர். மற்ற வார்த்தைகளுக்கான பொருள் எல்லோரும் அறிந்ததே. அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த உலகில் சிருஷ்டிக்கு அடிப்படை இந்த ஐந்துமே ஆகும்.

இயற்கையின் அடிப்படையான இந்த ஐந்து மூலங்களைத்தான் கடவுளாக ஆதி மனிதன் வணங்கினான். இந்த ஐந்து மூலங்களும் தனித்தனியே தங்களது சக்தியினை ஒன்று திரட்டி வைத்திருக்கும் இடங்களை பஞ்சபூத ஸ்தலங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் (ப்ருத்வீ லிங்கம்), நீர் - திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் (அப்பு லிங்கம்), காற்று - காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் (வாயு லிங்கம்), நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் (அக்னி லிங்கம்), ஆகாயம் - சிதம்பரம் நடராஜர் ஆலயம் (ஆகாச லிங்கம்) ஆகிய ஐந்தையும் பஞ்சபூத ஸ்தலங்களாகச் சொல்வார்கள். புவியியல் அடிப்படையில் நோக்கினால் அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை இந்த ஐந்திற்கும் இடையே உள்ளது என்பதை அறிய முடியும்.

அட்சரேகை, தீர்க்க ரேகை  என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். இந்த ஐந்து ஸ்தலங்களும் அமைந்திருக்கும் தீர்க்கரேகை அளவுகளையும் அறிந்து கொள்வோம். காஞ்சிபுரம் (நிலம்) , திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்). இந்த ஐந்து ஸ்தலங்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த ஐந்தும்தான் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இன்றைக்கு சாட்டிலைட் உதவியுடன்தான் நம்மால் இந்த உண்மையை அறியமுடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் எந்த அறிவியல் உபகரணங்களின் துணைகொண்டு இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்புதான் மிஞ்சும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சந்நதியில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையே சிவனின் வடிவம். அதுவே அக்னி ஸ்வரூபம். இதனை உணர்த்தும் விதமாக மலை உச்சியில் தீபம் ஏற்றுகிறார்கள். சிதம்பரத்தில் வெற்றிடமான அருவுருவமே சிவம் என்று ஒன்றுமில்லாத வெற்றிடத்தை ஆதிமூலமாக வணங்குவார்கள்.

அண்டமெல்லாம் பரவியிருக்கும் ஆகாயமே இறைவனின் வடிவம் என்ற சித்தாந்தத்தை உள்ளடக்கியது சிற்றம்பல (சிதம்பர) ரகசியம். அம்பலம் என்றால் ஆகாயம் என்று பொருள். இவ்வாறு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் ஒவ்வொரு ஸ்தலத்தில் மையப்படுத்தி காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஐந்தும் பஞ்சபூத ஸ்தலங்களாக அமைத்துள்ளனர். இந்த ஐந்து ஸ்தலங்களுக்கும் நேரில் சென்று தரிசித்தவர்களின் அடிதொட்டு வணங்கினாலே பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.

*மாதங்களில் நான் மார்கழி என்றான் ஸ்ரீமன் நாராயணன். மற்ற மாதங்களில் இல்லாத சிறப்பு மார்கழி மாதத்தில் என்ன உள்ளது? அப்படி இருந்தும் இதனை பீடை மாதம் என ஒதுக்கி வைப்பது ஏன்? - அரிமளம்  இரா. தளவாய் நாராயணசாமி, ப.த. தங்கவேலு, பண்ருட்டி

பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். மூன்று வயதுப் பிள்ளையான ஞானசம்பந்தர் பார்வதி அன்னையின் திருக்கரங்களால் ஞானப்பால் அருந்தியவுடன் வாய் திறந்து பாடிய “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி..” என்ற தேவாரப் பாடலில் பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன்றே என்று பாடுகிறார். பெருமை மிகுந்த, 12 மாதங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த மாதம் இது என்பதால் பீடு உடைய மாதம் என்றழைத்தார்கள். அதனால்தான் மார்கழியில் நான் மார்கழி என்று பகவான் உரைத்தார்.

‘பீடுடைய மாதம்’ என்பது திரிந்து பீடை மாதம் என்று ஆகிவிட்டது. ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்று கோதை நாச்சியார் தனது திருப்பாவைப் பாடல்களால் கண்ணனை கன்னித்தமிழின் துணைகொண்டு ஆராதனை செய்த மாதம் இது. ஆண்டாளின் அடிதொட்டு மணமாகாத பெண்கள் தாங்கள் நினைத்தபடி வரன் அமைய இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து முடித்து திருப்பாவைப் பாடல்களை மனமுருகப் பாடுவதைக் காண முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் இல்லங்களில் மார்கழி மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்வதில்லை.

அப்படியிருக்க மார்கழி மாதத்தை ஏன் உயர்வாகக் கொண்டாட வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம். மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள் ) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி, அதாவது தேவர்களைப் பொறுத்த வரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த காரணத்தால் தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டுவாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால் இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமாகக் கருதும் சில பெண்கள் முதல் நாள் இரவே கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். மார்கழியின் தனிச்சிறப்பே அதிகாலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு நடுவினில் விளக்கேற்றி வைத்துப் பாருங்கள். மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள்
பூரணமாகக் கிட்டும்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ என்று வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடத்தினுடைய பிதாமகராகத் திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றென்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் ம்ருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிக்கள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே.

மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய மார்கழி மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள் விவரம் அறிந்தவர்கள். அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின் காரணமாகத்தான் ஆண்டவனின் அடி சேர முடிந்தது. அதே போன்று ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம். வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசி.

விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு உறங்காமல் கண்விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெருமாளை சேவிப்பவர்கள் சொர்க்கத்தை அடைவர் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.  இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழியை வைத்திருக்கிறார்கள் நம் பெரியோர்கள். மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது.

நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட க்ஷத்ரியர்கள் யாரும் போர்த்தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை எளிதாக அடைய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டவே என்ற சூட்சுமத்தை நாம் உணர வேண்டியது
அவசியம்.

நமது சொந்த காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. பீடு என்றால் பெருமைமிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பீடு உடைய மாதமாகிய இதனை பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு. இத்துணை சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில் மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம். வாழ்வினில் வளம் பெறுவோம்..!

*களைப்பினால் சிலர் கோயில் மண்டபத்திலோ, பிராகாரத்திலோ தூங்குகிறார்களே, இது சரியா? - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சரியே. பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக மட்டுமல்ல, புயல், மழை, வெள்ளம், வறட்சி, பஞ்சம் முதலான இயற்கைப் பேரிடர் காலங்களிலும் பொதுமக்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாகத்தான் பெரிய மண்டபங்களையும், பிராகாரத்தையும் பிரம்மாண்டமாக அமைத்து வைத்தார்கள். திருவிழாக் காலங்களில் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி விழாவினைக் கண்டு களிக்கவும் இந்த கட்டுமான அமைப்பு துணை புரியும். குளிப்பதற்காக ஆலய வளாகத்திற்குள்ளேயே குளங்கள் வெட்டப்பட்டன. ஆலய வளாகத்திற்குள் பெரிய மண்டபங்களும், பிராகார அமைப்பும் அத்தனை உறுதியாக அமைக்கப்பட்டதன் நோக்கமே, பொதுமக்கள் வந்து தங்குவதற்காகத்தான் என்பதால் அங்கே படுத்து உறங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

-திருக்கோவிலூர் K. B ஹரிபிரசாத் ஷர்மா