வையம் போற்றும் மாமனிதர்கள்!குரலின் குரல் 98

திருவள்ளுவருக்கு `பொய்யாமொழிப் புலவர், செந்நாப் போதார்’ என்பன உள்ளிட்ட பல பட்டப் பெயர்கள் உண்டு. அவற்றில் ஒரு பெயர் `தெய்வப் புலவர்’ என்பது. திருவள்ளுவருக்கு மட்டுமல்ல, திருக்குறளுக்கும் `முப்பால், தமிழ்மறை’ உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. அவற்றில் ஒரு பெயர் `தெய்வ நூல்’ என்பது. தெய்வப் புலவர் எழுதிய தெய்வ நூலான திருக்குறளில் தெய்வம் என்ற சொல் ஆறு முறை வருகிறது! தெய்வம் என்ற சொல் வருகிறதே தவிர, என் தெய்வம் இது என்றோ என் தெய்வத்தை வழிபடுவதே சிறப்பு என்றோ எதையும் வள்ளுவம் சொல்ல வில்லை. சமயப் பொதுமறை எனத் திருக்குறளை அனைவரும் போற்றிப் புகழ்வது அதனால்தான். சமயம் கடந்த ஆன்மிகக் கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் உலகின் ஒப்பற்ற நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.’ (குறள் எண் 43)

 தென்புலத்தாராகிய முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐந்து வகைப்பட்டவரையும் அறநெறி தவறாமல் போற்றுதல் மனிதர்களின் கடமையாகும்.

`வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.’ (குறள் எண் -50)

உலகத்தில் வாழவேண்டிய நெறிப்படி வாழ்பவன் எவனோ அவன், வானத்தில் உறையும் தெய்வங்களில் ஒன்றாகவே மதிக்கப் படுவான்.

`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.’ (குறள் எண்-55)
 
பிற தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுது துயிலெழும் மனைவி பெய் என்று சொன்னால், அந்தக் கட்டளைக்குப் பணிந்து வானம்மழை பொழியும்.

`தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.’ (குறள் எண் 619)

தெய்வத்தால் நமக்கு ஒன்றைச் செய்ய முடியாமல் போனால் கூட, நாம் செய்யும் முயற்சியானது அதற்குரிய பலனைத் தரவே செய்யும்.

`ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.’ (குறள் எண் - 702)

அடுத்தவர்களின் மனத்தில் உள்ள கருத்தை சந்தேகப் படாமல் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனை நாம் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

`குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்.’(குறள் எண் -1023)

என் குடியை முன்னேற்றுவேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு உதவ முன்வரும்.....  தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுபவளைப் பற்றி வள்ளுவம் சொல்கிறதே? அவ்விதம் வாழ்ந்த பெண்களை நம் பழைய இலக்கியம் நமக்குக் காட்டுகிறதா என்றால், ஆம், காட்டுகிறது என்பதே பதில். இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகி அப்படி வாழ்ந்தவள். கணவனே அவளது கண்கண்ட தெய்வம். அந்தக் கணவன் அவளைப் பிரிந்து மாதவியிடம் செல்கிறான். ஆனாலும் பொறுமை காத்து அவள் வாழ்ந்து வருகிறாள்.

சோம குண்டம், சூரிய குண்டம் ஆகிய நீர்நிலைகளில் மூழ்கி இறைவனை வழிபட்டு கோவலன் திரும்ப வருமாறு வேண்டலாம் என கண்ணகியின் தோழி தேவந்தி சொல்கிறாள். அப்போது `பீடன்று!’ என ஒரே ஒரு சொல் சொல்கிறாள் கண்ணகி. கணவனே அவள் தெய்வம். அப்படியிருக்க, அவனைத் தன்னுடன் இணைத்து வைக்குமாறு இன்னொரு தெய்வத்திடம் வேண்டுவது தனக்குப் பெருமையில்லை என்று எண்ணுகிறாள் கண்ணகி.

மழை போன்ற இயற்கைச் செயல்கள் பத்தினிப் பெண்களின் ஆற்றலுக்குக் கட்டுப்பட்டவை என்பது வள்ளுவர் கருத்து. கண்ணகியை அத்தகைய உயர்ந்த கற்புடையவளாய்ச் சித்தரிக்கிறது சிலம்பு. புகார்க் காண்டத்தில் அவளது கேள்விக்கு சூரிய தேவன் பதில் சொல்கிறான். `காய்கதிர்ச் செல்வனே, நீ அறியக் கள்வனோ என் கணவன்’ என வானத்தை நோக்கி வினவுகிறாள் கண்ணகி. செங்கதிர்த் தேவன் அசரீரியாய்ப் பதில் சொல்கிறான்: `நின் கணவன் கள்வனல்லன், அவனைக் கள்வன் என்று சொன்ன இவ்வூரை எரியுண்ணும்!’

`கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்!’

என்பன சிலம்பு வரிகள். வள்ளுவத்தின் விளக்கமாகவே நமது காப்பியங்கள் அமைந்துள்ளன.  தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி செய்தால் அதற்குரிய பலனை அந்த முயற்சி தந்துவிடும் என்கிறது திருக்குறள். இதற்கான ஆதாரம் ராமாயணத்தில் உள்ளது. தெய்வமே ஆன ராமன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள சீதாப் பிராட்டியை மீட்க எண்ணுகிறான். அதன் பொருட்டு கடலைக் கடந்து இலங்கை செல்ல விரும்புகிறான். இலங்கைக்கும் தனக்கும் இடையே குறுக்கே கிடக்கும் கடல், தனக்கு வழிவிட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறான். கடலிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

சீற்றம் கொண்ட ராமன், கடலரசனை நோக்கிக் கணை தொடுக்க, வில்லை வளைக்கிறான். அஞ்சிய கடலரசன், ராமன் முன் தோன்றிச் சொல்லும் விளக்கம், வள்ளுவத்தின் விளக்கம்தான். `ராமா! பஞ்ச பூதங்களை நீ படைத்தாய். அவற்றின் இயல்புகள் இன்னின்ன என்றும் நீ வகுத்தாய். நெருப்பு சுடும், நீர் குளிரும் என்பன போன்ற தன்மைகளை அவற்றிற்கு நீதான் கொடுத்தாய். கடல் எப்படி விலகி வழிவிடும்? அது கண்டங்களின் இடையே படுத்துக் கிடக்கும். அதைத் தாண்டும் உபாயத்தை நீதான் அறிந்து அடைய வேண்டும். நீ ஒரு விதி வகுத்து அந்த விதியை மீறுமாறு நீயே கட்டளையிடுவது எப்படிச் சரியாகும்?’

கடலரசனின் கேள்வி தெய்வத்தைச் சிந்திக்க வைத்தது! தான் வகுத்த விதியைத் தானே மீறலாமா? எனவே பாலம் கட்டுமாறு கட்டளையிட்டான் ராமன். வானரங்கள் ஓடோடிச் சென்று பாறைகளைக் கொண்டுவந்து குவித்தன. எண்ணற்ற வானரங்களின் ஒன்றுபட்ட பெரும் முயற்சியால் சேது பந்தனம் என்ற அந்த மகத்தான சாதனை நிகழ்ந்தது. ஒரு சின்ன அணில், வானரங்கள் செய்யும் அந்த முயற்சிக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்தது. அதைப் பிரியத்தோடு முதுகில் தடவிக் கொடுத்தான் ராமபிரான். ராமனது மூன்று விரல்களின் சுவடு அணிலின் முதுகில் தடமாய்ப் பதிந்தது.

அந்தக் கோடுகளை முதுகில் பெருமையுடன் தாங்கி, `எங்கள் வர்க்கம் ராமனால் பாராட்டப்பட்ட வர்க்கம்!’ என்ற பெருமிதத்தோடு இப்போதும் அணில்கள் மரக் கிளைகளிலெல்லாம் துள்ளிக் குதிக்கின்றன! தான் மெய்வருந்திச் செய்த முயற்சிக்கு ராமபிரானின் பாராட்டு என்ற பெறற்கரிய பெருமையைக் கூலியாய்ப் பெற்றுவிட்டது அணில்.ராமன் இலக்குவனோடும் வானரங்களோடும் பாலத்தின் ஊடாக நடந்து சென்று இலங்கையை அடைந்தான். போரிட்டு ராவணனை வென்று சீதையை மீட்டான். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி வெற்றி தந்தது என்பதைத் தானே இந்த நிகழ்வு புலப்படுத்துகிறது?....

வள்ளுவர் சொல்லும் தெய்வம் என்ற சொல் இன்றைய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம். எதிர்பாராத நிகழ்வுகளின் போது `நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது!` என்கிறார்கள் மக்கள். எல்லாம் தெய்வச் செயல் என ஆறுதல் அடைகிறார்கள். தங்களுக்குச் சோதனை வந்தால் `தெய்வக் குற்றம் இருக்கலாம், ஏதேனும் பிரார்த்தனை இருந்தால் நிறைவேற்றி விட வேண்டும்’ எனச் சொல்கிறார்கள். கண்ணன், முருகன் போன்ற தெய்வங்களைக் குழந்தை வடிவில் பார்த்த அன்பர்கள், குழந்தையையே தெய்வமாகவும் பார்த்தார்கள். அதனால்தான் `குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே!’ என்ற பழமொழி தோன்றியது.

`குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று!’ என்ற திரைப்பாடலும் தோன்றியது. `கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்கள்!’ என்பது, குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தில் வரும் அந்தப் பாடலின் ஒரு முத்தாய்ப்பு வரி. கவியரசர் கண்ணதாசன் `நாத்திகமும் ஆத்திகமும் அவரவர் நம்பிக்கையில்தான் இருக்கிறது. தெய்வ பக்தி உள்ளவர்களுக்குக் கல் தெய்வமாகக் காட்சிதரும். அல்லாதவர்களுக்கு அது வெறும் கல்தான்!’ என ஒரு திரைப்பாடலில் விளக்குகிறார். நாத்திகராக இருந்து பின்னாளில் ஆத்திகராக ஆன அவருக்கு இப்படி விளக்கம் தர எல்லா உரிமையும் உண்டல்லவா! `பார்த்தால் பசி தீரும்’ என்ற பழைய திரைப்படத்தில் வரும் `உள்ளம் என்பது ஆமை’ என்ற அந்தப் பாடலின் வரிகள் இதோ:

`தெய்வம் என்றால் அது தெய்வம்
 வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
 இல்லை என்றால் அது இல்லை!’

`சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். குரலில் இடம்பெற்றுள்ள பாடல் `தெய்வம் இருப்பது எங்கே?’ என்ற பாடல். அது `இசையில், கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு, இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு!’ என தெய்வம் எங்கெல்லாம் குடிகொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. `தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு, செய்யும் தொழிலே தெய்வம்’ என தெய்வங்கள் இன்னும் பல பாடல்களில் இடம்பெறுகின்றன.

இந்துக் குடும்பத்தினர்க்குக் குல தெய்வம் என அவரவர் குடும்ப ரீதியாக ஒரு தெய்வம் உண்டு. குலதெய்வ வழிபாடும் உண்டு. குழந்தை பிறந்தால் சில ஆண்டுகளில் குழந்தையை அழைத்துச் சென்று குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக தலைமுடியை நீக்கி மொட்டையடிக்கும் வழக்கமும் உண்டு. குல தெய்வ வழிபாடு அடிப்படையானது என்றும், அதைச் செய்யாவிட்டால் அடிப்பாகம் இல்லாத பாத்திரத்தில் தண்ணீர் பிடிப்பதைப் போன்று பிற வழிபாடுகள் பயன்தராது போய்விடும் என்றும் காஞ்சிப் பரமாச்சாரியார் தெரிவித்திருக்கிறார்....

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தெய்வ நிலை அடைவார்கள் என வள்ளுவம் சொல்வதை இன்றைய வாழ்வியலே நமக்கு எடுத்துக் காட்டுகிறது. குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர், மகான் ராகவேந்திரர், ஷீரடி பாபா, பகவான் ரமண மகரிஷி, ஸ்ரீஅரவிந்தர், காஞ்சி மகாஸ்வாமிகள் போன்றோரெல்லாம் புராண புருஷர்கள் அல்லர். அவர்கள் உயர்ந்த தவ வாழ்வு வாழ்ந்த வரலாற்று மனிதர்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த அவர்களை மக்கள் தெய்வமாகக் கும்பிடுவதையும் கோயில் கட்டிக் கொண்டாடுவதையும் இன்றைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

மகாகவி பாரதியார் சென்னை மத்திய கைலாஸ் ஆலயத்தில் தெய்வச் சிலையாக வைத்து பூஜிக்கப் படுகிறார். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் குருநாதராகப் போற்றிய திரு.வி. கல்யாணசுந்தரனார், சக்கரையம்மா என்ற பெண்துறவி ஆகாயத்தில்பறந்து சென்றதை நேரில் பார்த்து வியந்து தமது `உள்ளொளி என்ற புத்தகத்தில் அந்த நிகழ்வைப் பதிவு செய்தார். அந்தச் சக்கரையம்மாவுக்கு சென்னையில் திருவான்மியூரில் ஆலயம் எழுந்துள்ளது.

 சென்னை நடேச நகர் சிவா விஷ்ணு ஆலயம் போன்ற சில ஆலயங்களில் இப்போது, பிற தெய்வங்களோடு இன்னொரு தெய்வமாக காஞ்சி மகாஸ்வாமிகள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப் படுவதைப் பார்க்கிறோம். வள்ளுவர் சொன்னது எத்தனை உண்மை என நம் மனம் வியக்கிறது.  இதுவரை உள்ள தெய்வச் சிலைகளின் கண்களில் கண்ணாடி கிடையாது. ஆனால் பரமாச்சாரியாரின் தெய்வச் சிலை கண்ணாடி அணிந்த கோலத்தில் செதுக்கப்பட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி பக்தி கொள்ளச் செய்கிறது. தெய்வம் அந்தந்தக் காலத்திற்கு ஏற்பப் புதுப்புதுக் கோலங்களில் காட்சி தரும் என்பதை நம் மனம் புரிந்து கொள்கிறது.....

தெய்வம் என்ற சொல்லைத் திருக்குறளில் ஆறு இடங்களில் பயன்படுத்திய வள்ளுவரே இன்று தெய்வமாகி விட்டார். சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குக் கோயில் இருக்கிறது. முண்டகக் கண்ணி ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது திருவள்ளுவர் திருக்கோயில். திருவள்ளுவரின் சிலைக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. அமைதியே வடிவாக சின்முத்திரை காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து அருட்பாலிக்கிறார் திருவள்ளுவப் பெருமான்.

வள்ளுவர் சந்நதி போலவே அவரது மனைவியான வாசுகி அம்மையாருக்கும் வாசுகி அம்மன் சந்நதி என்ற தனிச் சந்நதி உள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்தவர் தெய்வமாகக் கொண்டாடப் படுவார் என்று தாம் எழுதிய வரிகளுக்கு வள்ளுவரே சாட்சியாகி விட்டார்.வள்ளுவரை வழிபட்டால் மட்டும் போதாது. அவர் சொன்ன கருத்துக்களை வாழ்வில் பின்பற்றவும் வேண்டும். அத்தகைய மன உறுதி வரவேண்டும் என்பதே வள்ளுவரிடம் நம் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்