கனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்!
தஞ்சாவூரில் அருட்பாலிக்கிறாள் பங்காரு காமாட்சி. கோயில், சிறிய ராஜகோபுரத்தோடு எளிமையாக இருந்தாலும் கருவறையில் விளக்கு ஒளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளுடைய பிரகாசம் கருவறையை நிறைக்கிறது. கிளியைத் தாங்கி நிற்கும் கையும், சற்றே இடையை வளைத்து நளினமாக காட்சி தரும் ஒயிலும், நம்மை பிரமிக்கச் செய்கின்றன. இப்போதுதான், சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகுடன் காட்சி தருகிறாள்.

காமாட்சி இந்தலோகத்திலுள்ள அனைத்து சுகங்களையும் தருவாள். செல்வமும், கல்வியும், கலைகளும், போகமும் தந்து எல்லை மீறாத புத்தித் தெளிவையும் அருளி, ஞானமெனும் அமுதப் பாலையும் தானே ஊட்டும் மகாதிரிபுரசுந்தரி இவள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி! அருகேயே உற்சவ மூர்த்தியையும் காணலாம். காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் கோயிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளார்.  காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு! காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினோரு அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சி மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை.

கனுப் பொங்கல் அன்று காமகோடி அம்மன் எனும் உற்சவ அம்பாளுக்கு  முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு, சீடையை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே சடாரி சாத்தும் வழக்கம் இருந்தது. இப்போது மாறி இருக்கிறது. அம்பாளின் ஜென்ம நட்சத்திரம், ஐப்பசி மாத பூரம். அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர். அதை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அம்மனை அரண்மனைவரை அழைத்துச் செல்வர். அவர்களும் பிரசாதம் பெற்று இன்புறுவார்கள். தை, ஆடி மாதங்களிலும் நவராத்திரி காலங்களிலும் கோயில் களைகட்டும். கார்த்திகை மாதத்தில் ஆலயத்தை ஆயிரத்தெட்டுமுறை வலம் வந்தால் எண்ணியது நிறைவேறும் என்கிறார்கள். கார்த்திகையில் இவ்வாறு வலம் வரும் பக்தர்களை பெரிய எண்ணிக்கையில் இங்கே காணலாம்.